CTC-Press-Conferenceமே 2009 இல் வட சிறீலங்காவில் அரசு மேற்கொண்ட இறுதி இராணுவத் தாக்குதலில் அய்யன்னா சபையின் மதிப்பீட்டின்படி 40,000 – 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன்னர் சிறீலங்கா அரசு எல்லாத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும் மற்றும் தங்களுடன் கருத்து மாறுபட்ட அல்லது எதிராகப் பேசியவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது. சிறீலங்கா அரசு தனக்குள்ள பரந்துபட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குலக அரசுகளதும் பொது மக்களதும் ஆதரவை வென்றெடுக்க இந்தத் தந்திரத்தை மேற்கொண்டது.

அதன் நிமித்தம் தனது பல்வேறு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக அலுவலகர்கள், செல்வாக்குத் திரட்டும் நிறுவனங்கள், அனுதாபிகள் மற்றும் முகவர்களைப் பயன்படுத்தியது. சிறீலங்கா அரசு மற்றும் அதன் அனுதாபிகளது இத்தகைய பரப்புரை பல தமிழர்கள் மீது மிக ஆழமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த நிலை இன்றும் நீடிக்கிறது.

இப்படியான கறைபூசலில் ஈடுபவர்களில் சிறீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமானும் “பயங்கரவாதம் பற்றிய நிபுணர்” எனப் பெயரெடுத்த றோகன் குணரத்தின ஒருவராவர். இவர் சிங்கப்பூர், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு மையத்தின் தலைவர் (head of the International Centre for Political Violence and Terrorism Research at Nanyang Technological University in Singapore) ஆவர்.

2011 ஆம் ஆண்டு பெப்ரவரி இல் லக்பீம ஊடகம் “குணரத்தின இறுதிப் போரில் 1,400 பேர் மட்டுமே இறந்தார்கள், கனடா தமிழீழ விடுதலைப் புலிகளின் குகையாகத் தோற்றம் கொண்டுள்ளது என எச்சரிக்கிறார்” எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. மேலும் லக்பீம, குணரத்தினா சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி “தமிழீழ விடுதலைப் புலிகள் கனடிய தமிழ்க் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்குகிறது. இந்த அமைப்பு கனடாவில் உள்ள புலிகளது முக்கிய முகப்பு அமைப்பாகும்.” தொடர்ந்து குணரத்தின “கனடிய அரசுக்கு இது தெரியும். இப்போது கனடிய அரசு அதுபற்றிய விசாரணையை மேற்கொண்டுள்ளது” எனச் சொன்னார்.

இப்படி அப்பட்டமான பொய்க் கூற்றுக்கள் பற்றி தெரியவந்தவுடன் – ஊடகங்களின் எதிர்மறை கவனிப்புக்கு மத்தியில் – கனடிய தமிழர் பேரவை றோகன் குணரத்தினத்துக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட பின்னர் சனவரி 01, 2014 இல் ஒன்ரேறியோ உயர் நீதிமன்ற நீதியரசர் Stephen E. Firestone கனடிய தமிழர் பேரவைக்கு சாதகமா தீர்ப்பு வழங்கினார். குணரத்தினா, கனடிய தமிழர் பேரவைக்கு 37,000 டொலர் பொது இழப்பாகவும் 16,000 டொலர் வழக்குச் செலவாகவும் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

தனது எழுத்து மூல காரணங்களில் நீதியரசர் Firestone “(குணரத்தின) கூறியவை நேரிடையாக அல்லது இழிவு படுத்துமுகமான தெளிவான அவதூறாகும். காரணம் கனடிய தமிழர் பேரவை வன்முறை மற்றும் சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது எனச் சுட்டின. மேலும் “இந்தக் கூற்றுக்கள் அய்யப்பாட்டுக்கு இடமில்லாதவை. மறுத்துரைக்க முடியாதவை. உண்மையில் அவை ஆதாரமற்றவை. உண்மைக்கு மாறானவை” நீதியரசர் குறிப்பிட்டார்.

கனடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்றார். தொடர்ந்து “நீதிமன்றத்தின் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவை, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரது நேர்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு இனக் குழுமத்தை அழிப்பதற்கு உள்ள சரியான வழி என்னவென்றால் அந்தக் குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எங்கே தங்களை பயங்கரவாதத்தின் அனுதாபிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ முத்திரையிடப்பட்டு விடுவோமா என அச்சப்பட வைப்பது ஆகும்” என பூபாலபிள்ளை சொன்னார். “சிறீலங்கா அரசும் அதன் அனுதாபிகளும் நீண்ட காலமாக தமிழர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வந்துள்ளார்கள். இப்போது கிடைத்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவைக்கு அல்ல தமிழ்மக்களுக்கே சொந்தமான வெற்றியாகும்.

கனடிய தமிழர் பேரவையின் சட்ட வழக்கறிஞர் டானியல் இனி (Daniel Iny of Sack Goldblatt Mitchell LLP) பேசும் போது “ஆதாய நோக்கற்ற கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கு அதன் நற்பெயரும் நாணயமும்தான் உயிர்நாடி. கனடிய தமிழர் பேரவைக்கு அவமானம் தேடித்தருவதாக குணரத்தினாவின் கூற்றுக்கள் அமைந்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது கனடிய தமிழர் பேரவைக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஆறுதல் தருவதாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இன்னும் இரண்டு வாரத்தில் அய்க்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட இருக்கிறது. சிறீலங்காவின் மனித உரிமை நிலைமை பற்றி பன்னாட்டு நாடுகளது கூடுதலான கவனத்தை மனித உரிமைப் பேரவை மீண்டும் ஈர்த்துள்ளது. போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்கு சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான தனது பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நெருக்கடியான கட்டத்தில் தமிழர்களது படிமத்தை சிறீலங்கா மற்றும் அதன் அனுதாபிகளால் கறைப்படுத்த எடுக்கும் முயற்சியை முறியடிக்க கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தும் என்பதை அறியத்தருகிறது.

ஊடக உசாவல்களுக்கும் நேர்காணல்களுக்கும் கனடிய தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளையோடு தொடர்பு கொள்ளவும்.

தொ.பே. எண் 905 -784 -7034 .

கனடிய தமிழர் பேரவையின் தலைமையகம் 416 – 240 -0078 .