லீனா மணிமேகலையும் ‘வெள்ளை வேன் கதைகளும்’

0
612

முறையீடும் கண்டனமும்

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்துவரும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டமும், இலங்கை அடக்குமுறை அரசினால் முள்ளிவாய்க்காலில் நடத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலையும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையும் மனித உயிர்களை நேசிக்கும் அனைவரையும் மிகவும் பாதித்திருக்கிறது. உலக மக்கள் இலங்கையில் ஈழத்தமிழ் மக்களின் மேல் சுமத்தப்பட்டுவரும் அடக்குமுறையையும், அம்மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளையும் அதிகமாக உணரும் நிலையில் இன்று உள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரத்தில் காட்சிப்படுத்திய இசைப்பிரியா தொடர்பான விபரங்கள் உலகின் பலபாகங்களிலும் வாழும் மக்களின் மனித உணர்வுகளை ஆழமாகத் தூண்டியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கல்லையும் கரைந்துருக வைக்கும் அந்தக் காட்சிகள் இறுதிப் போரின் போது அபயம் தேடிய பெண் ஊடகவியலாளரும் இளம் கலைஞருமான இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் உயிருடன் பிடித்துச் செல்வதை உலகுக்குமுன் ஆதாரப்பூர்வமாக கொண்டுவந்து நிரூபித்துள்ளதுடன் இசைப்பிரியா இலங்கை படையினரால் பின்னர் கொன்றொழிக்கப்பட்டுள்ளதை சான்றாதாரமாக்கியுள்ளது.
with-van
சனல் 4 தொலைக்காட்சியின் இதுவரையான இனப்படுகொலையை நிரூபிக்கும் ஆவணங்கள் உலகினை உலுப்பி வருகின்றது. அதே வேளை இதுபோன்ற ஆவணங்கள் அரசியல், மனித உரிமை தர்மங்களுக்கு அப்பால், தனி நபர் நோக்கில் பெருமளவு பணமீட்டவும் சர்வதேச அங்கீகாரத்தினை பெறுவதற்காகவும் வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.

லீனா மணிமேகலை என்கிற தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் தயாரித்து தற்போது விளம்பரப்படுத்தப்பட்டுவரும் “White Van Stories” தொடர்பாக எமக்கு ஆழமான கேள்விகள் எழுகிறது. ஒன்று இதன் தயாரிப்பாளரான லீனா மணிமேகலையின் நம்பகத்தன்மை தொடர்பானது. இரண்டாவது இந்த ஆவணப்படத்தில் சாட்சியமாக காட்சிப்படுத்தப்படுபவர்களின் சட்டரீதியான உரிமையும் அவர்கள் இலங்கையில் உயிர்வாழ்வதற்கான பாதுகாப்பு சார்ந்த விடயங்களுமாகும்.

1) தயாரிப்பாளரான லீனா மனிமேகலையின் நம்பகத்தன்மை?

இதன் தயாரிப்பாளர் ஒடுக்குகின்ற அரசுகளுடனும், அதற்குப் பின்னாலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுடனும் பொருளாதார நலனை முன்னிட்டு செயற்பட்டு வருபவர். இந்திய ஏழை மக்களின் நிலங்களையும் அந்த மக்களுக்கு சொந்தமான வளங்களையும் இந்திய அரசின் உதவியுடன் சூறையாடி வரும் “டாட்டா” பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் நிதி பெற்று டாட்டாவிற்காக பிரச்சாரப்படம் தயாரித்தவர்.

ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டு படைப்பாளர்கள் கலைஞர்கள் இயக்கம், இந்திய அரசின் கவனத்தினை ஈர்க்கவும், ஈழத் தமிழ் மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் டெல்லியில் நடாத்திய போராட்டத்தினை அதில் பங்குபற்றியவர்களின் ஒப்புதல் இன்றி தனது ஆவணப்படத்தில் பாவித்தவர். அப்போராட்டம் தன்னால் முன்னெடுக்கப்பட்டது என்கிற தோற்றத்தினை ஏற்படுத்த முற்பட்டவர். இவற்றிற்காக அதில் பங்கு கொண்ட படைப்பாளர்கள் கலைஞர்களால் கண்டிக்கப்பட்டவர். இனப்படுகொலையை நடாத்தி முடிப்பதற்குப் பின்னிருந்த இந்திய அரசின் பாத்திரம் குறித்து இதுவரை வாயே திறக்காதவர் இவர்.

போருக்குப் பின்னும் தமிழ்மக்கள் மீது வடக்கில் நடைபெறும் இன அடக்குமுறையை மூடிமறைத்து, அங்கு ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இருப்பதாகக் காட்ட அரசியல் உள் நோக்கம் கொண்ட இலங்கை அரசின் நேரடி ஆதரவாளர்களால் (இவர்கள் இனப்படுகொலையை நடாத்தி முடித்த மகிந்தவுக்கு பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்தவர்கள்) நடாத்தப்பட்ட யாழ்ப்பாண இலக்கிய ஒன்று கூடலுக்கு தமிழ் நாட்டிலிருந்து சென்று கலந்து கொண்டவர்.

“White Van Stories” படத்தயாரிப்பு முடிந்த கையுடன் அதனை சனல்4 உட்பட மேற்கு நாட்டு ஊடகங்களுக்கு விற்பதற்காக இதன் தாயாரிப்பாளார் காட்டுகின்ற அதிதீவிர ஆர்வம். இதன் திரையிடல் எனும் பெயரில் ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு திட்டமிடும் வெளிநாட்டுப் பயணங்கள். இதன்மூலம் பெறத் திட்டமிடும் பொருளாதார நலன்கள் போன்றவை எமது கேள்விகளுக்கு அடிப்படையாக உள்ளன.

2) ஆவணப்படத்தில் சாட்சியமாக காட்சிப்படுத்தப்படுபவர்களின் சட்டரீதியான உரிமையும் அவர்கள் இலங்கையில் உயிர்வாழ்வதற்கான பாதுகாப்பு சார்ந்த விடயங்களும்.

இந்த ஆவணப்படத்தில் உள்ள பெருமளவிலான காட்சிகள், இதில் தோன்றுபவர்களிடம் உண்மை நோக்கத்தினை வெளிப்படையாகக் கூறாமலும், அவர்களின் ஒப்புதல் இன்றியும் உள்ளடக்கப்பட்டதாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரதிநிதி நவனீதம் பிள்ளை இலங்கை சென்ற போது, உறவுகளை பலி கொடுத்த சொந்தங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய கவனயீர்ப்புப் பேரணியையும் அதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களையும் கொண்டது.

அப்பேரணி நடந்து கொண்டிருந்த போது, அவ்விடத்தில் கமராவுடன் தயார் நிலையில் இருந்த இயக்குனர், அதில் கலந்து கொண்ட மக்களின் உணர்வு நிலையை சூழ்நிலைக்கமைய தமக்கு சாதகமாக பாவித்துள்ளார். அத்துடன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி, அவர்களின் இருப்பிடம் சென்று பல விடயங்களை படமாக்கி உள்ளார். இம்மக்களை நம்ப வைப்பதற்காக உள்ளூரில் உள்ள சிலரை பாவித்துள்ளார். இந்த ஆவணப்பட விளம்பரம் youtube இல் விளப்பரப்படுத்தப்பட்ட போது, இதில் வாக்குமூலம் வழங்கிய ஆறு பேர்களின் அடையாளம் மறைக்கப்படாத புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் வழங்கியவர்கள் அப்பட்டமாக இலங்கை அரசாங்கத்திற்கு இதன் மூலம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்கள். (இன்னமும் அவர்கள் இராணுவ கண்காணிப்பின் கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள்) அவர்கள் மோசமான உளவியல், பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட பலர் இந்த படத்தில் இருந்து தம்மை நீக்குமாறு லீனா மணிமேகலையை தொடர்பு கொள்ள பலமுயற்சி எடுத்தும் லீனாவை தொடர்பு கொள்ள முடியாது இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது http://www.oodaru.com/?p=6747 (இணைப்பில் முழு அறிக்கையும் உள்ளது) இந்த விடயத்தில் அக்கறை கொண்ட பல எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் லீனா மணிமேகலையிடம் கேட்டும் அவரிடமிருந்து உதாசீனமான பதில்களே கிடைத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இலங்கையில் லீனா மனிமேகலைக்கு தொடர்பாளராக இருந்த கிளிநொச்சியில் வதியும் எழுத்தாளர் ஒருவர், தனக்கு இது பற்றி தெரியாது என கைவிரிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் இயக்குனர் ஆவணப்படத்தினை ஐரோப்பிய ஊடகங்களுக்கு விற்பனை செய்வதிலும் ஐரோப்பிய பயணத்திலும் காட்டும் ஆர்வத்தினை பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு காட்டுவதாக இல்லை.

இந்த ஆவணப்படத் தயாரிப்பு சட்டரீதியான உத்தரவாத விடயதானங்களை கொண்டிருக்காது இருப்பதுடன், எந்த கொலைகளை தடுப்பதற்காக பிரச்சாரப்படுத்தப்படுகிறதோ, அதனை உயிர்தப்பி வாழும் மக்கள் மீது நிகழ்த்தப்பட வாய்ப்பளிக்கிறது. எந்த அறப்பண்புகளுக்கும் எதிரான, ஒரு தனி நபரின் நலன்களை இலக்காக்கி வியாபரப்படுத்தப்படுகிறது.

இந்த ஆவணப்படம் ஈழத்தமிழ் மக்கள் மீதும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் மீதானதுமான அக்கறையின் பால் எடுக்கப்பட்டுள்ளது என்கிற பார்வை இருப்பின் அது மிகத் தவறானதாகும். ஈழத்தமிழ் மக்களின் உயிரையும் வாழ்வையும் அம்மக்களின் இதுவரையான எந்த துன்பங்களிலும் பங்கு கொள்ளாதவர்கள் “சந்தை நிலவரங்களுக்கு தக்க வகையில்” தனிப்பட்ட நலன்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை பாவித்து சூறையாடும் கொடுஞ்செயலை நாம் கண்டிக்கிறோம். லீனா மணிமேகலையின் இந்த ஆவணப்படம் மோசமான வணிக நோக்கு கொண்டது என்பதும், அது பாதிக்கப்பட்டுள்ள ஈழ மக்களுக்கு ஒரு நன்மையையும் பெற்றுத் தந்து விடப்போவதில்லை என்பதிலும் பாதிக்கப்பட்டு துயருற்றுள்ள மக்களின் சார்பில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

எமது இந்த முறையீட்டையும் கண்டனத்தினையும் சமூக வலைத்தளங்கள், மற்றும் ஊடகங்கள் வழியாக அனைவரையும் சென்று சேர உதவுமாறு உங்கள் அனைவரையும் கோருகிறோம்.

– ஈழ, தமிழக படைப்பாளிகள் கலைஞர்கள் இயக்கம்