இலங்கையின் நீதித்துறையில் பக்கச் சார்புகள் இருக்கின்றது என்பதை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆற்றிய உரை ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ச­ சிறையில் அடைக்கப்பட வேண்டியவராக இருந்தார்.

india-kantha
ஆனால் அவரை சிறையில் அடைக்காமல் நான் தடுத்தேன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறுவதில் இருந்து இலங்கையின் நீதித்துறையின் போக்கு எத்தகையதாக இருந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கும் இடையே முரண்பாட்டு நிலைமை வலுவடைந்து வருகின்றது.

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமை மகிந்த ராஜபக்ச­வுக்கு இல்லை என்று வெளிப்படையாகக் கூறி இருந்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இப்போது தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி, மகிந்த ராஜபக்ச­ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரை சிறையில் அடைக்கக் கூடியதான குற்றச்சாட்டு ஒன்று இருந்தது எனவும் எனினும்தான் அதனைச் செய்யாமல் விட்டதனாலேயே அவர் ஜனாதிபதி ஆனார் என்றும் கூறியுள்ளார்.

அப்படியானால் சட்டம், நீதி என்பனவற்றுக்கு அப்பால், நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் நீதி பரிபாலனத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றதா? என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ விடயத்தில் தான் தவறு விட்டதாகக் கூறும் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் இவ்வாறு கூறியதன் மூலம் இலங்கையின் நீதிபரிபாலனத்தின் செம்மைபற்றி சீர்தூக்கி ஆராய் வதற்கு வழிகோலியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவை சிறையில் அடைக்கக் கூடிய நிலைமை இருந்த போதிலும் அதனைத் தான் செய்யாமல் தடுத்தமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்டுள்ள ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா,

இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கும் தீர்ப்பு வழங்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இணைந்த வடக்குக் கிழக்கு மாகாண சபையை பிரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அக்காலத்தில் இருந்த பிரதம நீதியரசர்கள் தீர்ப்பு எதனையும் வழங்காமல் வழக்கை ஒத்தி வைத்தே வந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பது என்பது இந்த நாட்டில் சிறுபான்மை இனத்திற்குச் செய்யும் அநீதியாகும் என்ற அடிப்படையில் அத்தகையதொரு முடிவை அவர்கள் எடுத்திருந்தனர்.

ஆனால் சரத் என் சில்வா அவர்கள் இந்த நாட்டின் பிரதம நீதியரசராக இருந்த போது வடக்கு கிழக்கு மாகாண சபையைப் பிரித்தாக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

நீதித்துறை சார்ந்த விமர்சனங்கள் இலங்கையில் ஆகாது என்பதால் உண்மை உணர்ந்த அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் மெளனமாகி இருந்தனர்.

எனினும் கால ஓட்டத்தில், ஓய்வுபெற்ற நிலையில் சரத் என் சில்வா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச குறித்த தீர்ப்பு தொடர்பில் கவலை வெளியிட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவ்வாறாயின் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டது தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் என் சில்வா தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது சர்வ நிச்சயம்.

வலம்புரி.