வடக்கு கிழக்கை இணைக்கும் நிலங்கள் பறிபோகின்றது!

0
606

வடகிழக்கு இணைப்புக் கிராமமாகவுள்ள தென்னமரவடிக் கிராமம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலையில் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

thenmaravadi_village_004
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள இக்கிராமம் தன் பாரம்பரிய தமிழ் அடையாளங்களை இழக்கிற நிலையை முகம்கொடுத்துள்ளதாக ரவிகரன் தெரிவித்தார்.

பிரதேச மக்களின் அழைப்பை ஏற்று அக்கிராமத்திற்கு சென்ற ரவிகரன், அக்கிராம நிலையை முற்றாக ஆய்வு செய்த நிலையிலேயே இவ்விடயத்தை கவலையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அங்குள்ள மக்கள் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்ய குறுகிய காலம் இருந்த போது ஏற்பட்ட கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீளக்குடியேறியுள்ள நிலையில் அவர்களின் பூர்விக நிலங்கள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சிறுகடல், வயல்நிலங்கள், தோட்டக் காணிகள் என அனைத்து வகை வாழ்வாதார வழிகளும் முடக்கப்பட்டு நுட்பமான முறையில் மக்கள் மேல் இடப்பெயர்வு அவசியநிலை திணிக்கப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்படையினரால் அபகரிக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது. இது பற்றி உயர் அதிகாரிகள் பலருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

பனிக்கவயல்குளம் என்ற சிறியகுளம் சுமார் 45 ஏக்கர் நிலத்துக்கு விவசாயம் செய்ய உதவியது. ஆனால் தற்போது அக்குளத்தை மூடி அதை அபகரித்து விவசாயம் செய்கிறார்கள்.

thenmaravadi_village_003
கொல்லவெளி, பெருமாள்பிலவு, துவரமுரிப்பு, பனிக்கவயல், நல்லதண்ணி ஊத்துப்பிலவு ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு வயல் செய்கிறார்கள்.

அப்பகுதியில் 240 ஏக்கர் வயல் நிலத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்புக்கான 1975 ஆம் ஆண்டு 60 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை தமிழ் மக்கள் இன்னமும் வைத்திருக்கிறார்கள். அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளை இப்படி அத்துமீறி அபகரித்துள்ள செயல் சட்டவிரோதமாகும்.

இப்பகுதில் அவர்கள் நிற்பதையறிந்து நேரில் சென்று கதைத்த போது குத்தகைக்கு தருவதாக கூறினார்கள். யார் நிலத்தை யார் யாருக்கு குத்தகைக்கு விடுவது?

அதுமட்டுமல்ல, தென்னமரவடிக்கு சொந்தமான ஆற்றுப்பகுதியில் 2 இடத்தில் படகுகளுக்கான இறங்குதுறை அமைத்து , அதில் தொழில் செய்யும் சிங்கபுர கிராம சிங்களவர்களுக்காக தொழில் உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்குரிய அறைகள் அமைத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது அத்துமீறிய செயலாகும்.

thenmaravadi_village_001-1
இது தவிர இன்னோரிடத்தில், சுமார் 20க்கு மேற்பட்ட ஓடங்களை கொண்டு வந்து சட்டவிரோதமான முறையில் படுப்பு வலைகளை பயன்படுத்தி தொழில் செய்கிறார்கள்.

தென்னமரவடிக் கிராமமூடாகவே பல சிங்களக் கிராமங்களுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இக்கிராமத்திற்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. அனைத்து வாழ்வாதார வழிகளையும் முடக்கி, மக்களை இடம்பெயர வைக்கும் தந்திர நோக்கம் இங்கு செயற்படுத்தப்படுவது நன்றாக தெரிகிறது. அதை விட உள்ளூர் மாட்டுத்தளமும் பறி போய்விட்டதால் மாடு மேய்க்கக் கூட முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

தென்னவன் எனும் தமிழ் மன்னன் ஆட்சி புரிந்த, அவன் மரபடி வந்த தென்னமரவடிக்கிராமம், தமிழர் கைகளை விட்டுப்போகும் நிலையில் இருப்பது கவலையளிக்கிறது. இப்பகுதியில் தமிழர் இருப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என்றார்.

http://tamizl.com.