மாகாண தலைமைச் செயலாளர் என்பவர் முதலமைச்சரின் ஒப்புதலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும் என்று மாகாணசபை சட்டமூலம் கூறுகின்றது. ஆனால் தற்போது இருக்கக்கூடிய வடமாகாணசபையின் தலைமைச் செயலாளர் மாகாணசபை தேர்தல்கள் நடப்பதற்கு முன்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவரென குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன்.

இன்றிரவு அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் மேலும் தெரிவிக்கையில் இவரிலும்விட பணிமூப்பு அதிகாரிகளாக வேறு சிலர் இருந்தபோதிலும்கூட அவர்களை ஒதுக்கித்தள்ளி அரசியல் ரீதியான நியமனமாகவே இவரது நியமனம் உருவாக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணசபை ஒன்று பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் பிரதம செயலாளர் பதவி விலகி முதலமைச்சர் அவர்கள் புதிய பிரதம செயலாளரை நியமிப்பதற்கு வழிவிட்டிருக்க வேண்டும். இன்றுவரை அதனைச் செய்யாதது மட்டுமன்றி, முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் கட்டுப்படாமல் இவர் செயற்பட்டு வருவதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதனால் வடக்கு மாகாணசபையின் நிர்வாகம் என்பது வினைத்திறனற்றதாக இருக்கின்றது.

பிரதம செயலாளர் அமைச்சரவையின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அறியப்படுகின்றது. மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய பணி பிரதம செயலாளருக்கு இருந்தும்கூட இன்றுவரை எந்தத் தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று வருடத்திற்கான செலவறிக்கையைக் கேட்டும்கூட இதுவரை அது முதல்வரிடம் கையளிக்கப்படவில்லை.
மாகாணசபை கூடியதன் பின்னர் ஒருதுணை நிலை வரவு-செலவு அறிக்கையைப் பிரதம செயலாளர் அவர்கள் சபையில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் மாகாண வரவு-செலவுத் திட்டத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவது கடினமாக இருக்கும். மாகாணசபையின் வரவு-செலவுத் திட்ட விவாதத்தின்பொழுது பிரதம செயலாளரும் மாகாணசபையின் நிதித்துறைக்குப் பொறுப்பான பிரதி பிரதம செயலாளரும் பங்குபற்றியிருக்க வேண்டும். ஆயினும் மூன்று நாட்கள் நடைபெற்ற விவாதத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தபொழுதிலும்கூட முதல்நாள் மட்டுமே சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் தமது மாவட்டத்திற்குத் திரும்பிய மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளைப் புறந்தள்ளிவிட்டு, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மன்னார் முஸ்லிம் மக்களுக்கு 700 தொடக்கம் 800 மில்லியன் ரூபாயை கடந்த 2013ஆம் ஆண்டு இவரால் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ரிஷாட் பதியுதீன் அவர்கள் இவரைப் பிரதம செயலாளராக நியமித்ததற்குப் பிரதியுபகாரமாக இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்கின்றார் என்றும் அறிய முடிகின்றது.

பிரதம செயலாளர் தனது அலுவலகத்தைவிட்டு வேறு மாகாணங்களுக்குச் செல்வதாக இருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிவித்து முதலமைச்சரின் அனுமதியுடனே செல்ல வேண்டும். ஆனால், முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னர், அவர் பலமுறை கொழும்பிற்குச் சென்றபொழுதிலும்கூட எந்தவொரு நேரத்திலும் முதலமைச்சரிடம் அனுமதி பெற்றதில்லை.

பிரதம செயலாளர் உட்பட எந்தவொரு அதிகாரியும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடாத்துவதாக இருந்தால் அவர்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் அனுமதிபெற்றே நடாத்த முடியும். ஆனால், வடமாகாண பிரதம செயலாளரைப் பொறுத்தவரையில் கொழும்பில் எந்தவித அனுமதியுமில்லாமல் தான் விரும்பியவாறு ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டை நடாத்தியிருக்கின்றார்.

மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில், பிரதம செயலாளர் என்பவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருப்பராக இருந்தால் வடமாகாண நிர்வாகம் என்பது மிகவும் பாரிய சீரழிவை நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும். எனவே, வடக்கு மாகாண மக்களின் நலன்கருதி அவர்களுக்கான முறையான நிர்வாகம் கருதி பிரதம செயலாளர் அவர்கள் தாமாகவே தனது பதவியில் இருந்து விலகி புதியதோர் பிரதம செயலாளரை நியமிக்க வழிவிடவேண்டும்.

இவ்வளவு முறைப்பாடுகள் மட்டுமன்றி இதற்கும் மேலதிகமான முறைப்பாடுகளும் இந்த அம்மையாரின்மீது பல்வேறுபட்ட உத்தியோகத்தர்களினால் முன் வைக்கப்பட்ட போதிலும் கூட இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரின்மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது கிடையாது. அந்த அம்மையார் ஒரு பெண்மணி என்பதாலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இலங்கை நிர்வாக சேவைகளுக்குத் தெரிவானவர் என்பதினாலும், அவர் வகித்த உயர் பதவியைக் கருத்திற்கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர் தாமாகவே முன்வந்து புதியதோர் பிரதம செயலாளரை நியமிப்பதற்கு வழிவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யாதது மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் நிர்வாகத்தையே மோசமாகச் சீர்குலைக்கக்கூடிய வகையில் தனது நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றார். எனவேதான் அவர்தொடர்பான மேற்கண்ட விமர்சனங்களைப் பகிரங்கமாக வெளியிடவேண்டி ஏற்பட்டது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த விரும்புகின்றது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

©