Dr_kengatharan-02அர்ப்பணிப்பும் ஆற்றலும் அனுபவமும் பொதுநோக்கும் கொண்ட ஒரு மாமனிதராம் வைத்திய கலாநிதி கங்காதரன் நம்மிடமிருந்து விடைபெற்று விட்டார். இந்த நீண்ட வரலாற்றுப் பெருவெளியில் அந்த மனிதர் ஒரு தனி நட்சத்திரமாக மின்னுகின்றார் என மறைந்த மருத்துவ கலாநிதி கங்காதரனுக்கு மக்கள் சார்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரங்கலும் வணக்கமும் செய்துள்ளார்.

 

மேலும் அவரின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 1929ல் பிறந்து தன் வாழ்வு முழுதும் மக்களின் மருத்துவத்துக்காகவே அர்ப்பணித்த இந்த பெருமனிதர் தமிழ் மக்கள் சுமந்த அத்தனை இடர்களையும் சுமந்தவர். அகதி வாழ்வையும் அதில் எழும் வலிகளையும் பொறுத்து பெரும் இடப்பெயர்வுகளை எமது மக்கள் சந்தித்த போதெல்லாம் அருகிருந்த மருத்துவக்கரங்களால் ஆறுதல் அளித்த இனிய புன்னகையாளன் வைத்தியர் கங்காதரன்.

 

1995ல் யாழ் மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார். இடர்காலத்தில் தன் குடும்பத்தையும் மக்கள் சேவைக்காக பயன்படுத்தினார். மிகவும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் வன்னியில் பொருளாதார தடை, போஷாக்கு இன்மை, மலேரியா என மக்கள் துவண்ட பொழுது தன் சீடர்களான ஏராளம் மருத்துவ மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் துயர் களைந்தார் இந்த கருணையாளன். அதனால் தலைவர் பிரபாகரனின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரியவராக எப்பொழுதும் இருந்தார். தலைவரால் அவரது சேவை மதிப்பளிக்கப்பட்டது.

 

நான்கரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தனி ஒருவராக நின்று பிரசவ மருத்துவராகவும் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகவும் இரவு பகலாக ஓய்வின்றி சேவையாற்றினார் வைத்தியர் கங்காதரன் என்ற பெருமனிதர். அழைத்தபோதெல்லாம் அவருக்கே உரிய இனிய புன்னகையோடும் மெல்லிய வார்த்தைகளோடும் மற்றவர்களின் சோர்வகற்றி கடமை செய்தவர் வைத்தியர் கங்காதரன் அவர்கள். போர்க்காலத்தில் அவரது ஆலோசனைகளும் ஏனைய இளம் மருத்துவர்களுக்கு எப்போதும் தேவையாகவும் உறுதுணையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்தது என வைத்தியர் கங்காதரனின் ஆற்றலையும் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் மெய்சிலிர்க்க மீட்டுகின்றனர் போர்க்கால தமிழ் மக்கள்.

 

முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதிப்போர் வரை தன் முதுமையையும் பொருட்படுத்தாது குண்டு மழையில் நடுவே மருத்துவ பணி செய்த மாமனிதனின் இந்த இறுதிக்கணங்களில் அவரது அற்புதமான மருத்துவ சிகிச்சை பெற்ற உலகலொம் வாழும் எண்ணற்ற தமிழ் உள்ளங்கள் கண்ணீர் சிந்தும் காட்சி விரிகின்றது.

 

ஒரு மருத்துவனாக மட்டுமன்றி ஒரு புல்லாங்குழல் இசைக்கலைஞனாகவும் உள்ளங்களில் குடிகொண்ட கலைஞனையும் நம் காற்று இழந்துவிட்டது. இதமான புல்லாங்குழல் கச்சேரிகளால் இளைய தலைமுறைக் கலைஞர்களோடு அன்பும் நட்பும் கொண்டு நம்மிடையே வாழந்த உயர்ந்த உள்ளம் தமிழ்த் தேசியத்தின்பால் தீராத தாகம் கொண்டு மருத்து வரம் விடைபெற்றுள்ளது.

 

தமிழ் தம் வரலாற்றில் வைத்திய கலாநிதி கங்காதரன் அவர்கள் தனித்துவமானவர் என பா.உறுப்பினர் சி.சிறீதரன் மக்கள் சார்பில் விடுத்துள்ள அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.