தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா இன அழிப்பு அரசின் படைகள் வன்னி மக்களை மழை வெள்ளத்திலிருந்து மீட்டு வருவதாக சிலர் புல்லரிப்புடன் பதிவுகள் இடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

 

இதே படைகள்தான், சில வருடங்களுக்கு முன் அனைத்துலக ஊடகங்கள்/ தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் கூட்டாக வெளியேற்றிவிட்டு கதறக் கதற இதே மக்களைப் போட்டுத் தள்ளினார்கள். எல்லாம் முடிந்து எண்ணிப் பார்த்தால் இந்த மக்களில் 146679 பேரைக் காணவில்லை..

 

எஞ்சியவர்களை விலங்குகள் போல் கூடாரங்களில் அடைத்து வைத்து உடல் / உள அளவில் ஊனமாக்கி விட்டு விடுவித்து விட்டு அவர்கள் நடுவில் போய் குந்தியிருக்கிறது இந்த படைகள்.

 

இன்று வரை வன்னியில் தொடரும் மனிதப் பேரவலத்திற்கு இதுதான் காரணம்.

 

ஆனால் இன்று அவர்கள் நல்லவர்கள் ஆகிப்போனது எப்படி?

 

அரசியல்/ கோட்பாடு/ தத்துவம் என்று நீட்டி முழக்காமல் இதை விளக்க ஒரு கதை சொல்கிறேன்.. கேளுங்கள்..

 

“ஒரு காணி/ அதற்குள் ஒரு வீடு/ ஒரு கூட்டுக் குடும்பம்/ அமைதியான வாழ்வு.

 

அந்த வீட்டிற்குள் திடீரென்று புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள சிலரை கொலை செய்துவிட்டு, சிலரை ஊனமாக்கி விட்டு, சிலரை காணாமலாக்கிவிட்டு எஞ்சியுள்ளவர்கள் மத்தியில் “நான்தான் உங்கள் பாதுகாவலன்” என்று குந்திக் கொண்டிருக்கும் போது அந்த வீட்டுக்குள் ஒரு பாம்பு வருகிறது. அந்தப் பாம்பை அந்தக் கும்பல் அடிக்கிறது.

 

அதற்கான காரணங்கள்,

 
01. பாம்பை வெளியேற்றாவிட்டால், அவர்களாலும் அங்கு இருக்க முடியாது. பாம்பு கடித்து விடும்.

 

02. பாம்பு அந்த குடும்பத்தில் யாரையும் கடித்தால், தாம் வீட்டை ஆக்கிரமித்திருப்பதும், பாதுகாவலன் என்ற வேடமும் கலைந்து விடும். அதனால் அடித்தார்கள்.

 

03. பார்த்தீர்களா! பாம்பை அடித்து விட்டோம். நாம் இருப்பதுதான் உங்களுக்கு பாதுகாப்பு என்ற பிம்பத்தை விதைப்பதற்கு..

 

இப்படி ஒரு பெரிய பட்டியல் போடலாம்..

 

இந்தத் தோற்ற மயக்கம்தான் இப்போதைய இன அழிப்புப் படையினரின் உதவியும் நம்மவர் சிலரின் பிரதிபலிப்பும்…

 

சரி, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றியாச்சு..

 

வன்னி மக்களின் வாழ்வாதாரம் என்பது வாழ்வோடு கூடிய சுய பொருளாதார வளங்கள்தான்..

 

அதுவும் பின் யுத்தகால / இன அழிப்பு சூழலில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட வன்னி மக்களின் வாழ்வு முற்று முழுதாக இந்த சுய உற்பத்தியிலேயே தங்கியுள்ளது.

 

இன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவர்களது வாழ்விடங்களை யார் சீரமைப்பது / ஆடு,மாடு,கோழிகளை யார் கொடுப்பது/ அழிந்து போன விதை நிலங்கள, சிறு பயிர்களை யார் மீள உற்பத்தி செய்வது?

 

இப்படி அவர்கள் வாழ்வும், பொருளாதாரமும் சேர்ந்த எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன..

 

முன்பு எழுதிய ஒரு பத்தியின் சிறு பகுதியை இணக்கிறேன்.. அடம் பிடிக்காமல் / அவதூறு பேசாமல் இதன் பின்னணியை புரிந்து கொள்ள முற்படுங்கள்.. அப்போது புரியும் இது “இயற்கை பாதி, இன அழிப்பு மீதி” என்பது..

 

/ வன்னியில் தொடரும் அடை மழையினாலும் வெள்ளப்பெருக்கினாலும் இடம்பெயர்ந்து சொந்த நிலத்தில் குடியேற்றப்படாமல் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் சொல்லணா துன்பத்தை அனுபவித்துவருகிறார்கள்.

 

சிலர் இறந்திருக்கிறார்கள். பலநூற்றுக்கணக்கானோர் வயிறோட்டம், மலேரியா, நெருப்புகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் நிற்கிறார்கள்.

 

பாம்புகள், விச ஜந்துக்கள், முதலைகள் கூடாரங்களுக்குள் புகுந்து கடித்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதால் தமது வாழ்வாதாரத்தை இழந்து, புதிய இடத்தில் ஏதோ ஒரு வகையில் தமது வயிற்றுப்பிழைப்பை பார்த்து வந்த மக்கள் இந்த இயற்கை சீற்றத்தினால் மேலதிக பொருண்மிய சிக்கலையும் சந்தித்துள்ளார்கள்.

 

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒட்டுமொத்த விளைவையும் இந்த மகக்ள் எதிர்கொண்டுள்ளார்கள்.

 

சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டு காட்டுக்குள் கூடாரம் அடித்து தங்க வைக்கப்பட்டவர்கள் மழைபெய்தால் சாகத்தானே செய்வார்கள். இதை இயற்கை அழிவு என்று கணக்கு எழுத முடியாது. இது இன அழிப்பின் இன்னொரு வடிவம்.

 

‘மழை வெள்ளத்தில, பாம்புக்கடியில, மலேரியாவால், செத்தவனையெல்லாம் இனஅழிப்பால செத்தான் என்று கணக்கு காட்டுறியளோ?” என்று கேள்வி கேட்க மட்டும் நமக்குள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

 

இன அழிப்பு என்பது நுட்பமாக நடக்கிற ஒன்று.. அதை வெளியாக உணர முடியாது. குறிப்பாக வன்னியை எடுத்துக்கொள்வோம்.

 

வன்னி மக்களுக்கு மழை வெள்ளம், குள உடைப்பு, பாம்புக்கடி, மலேரியா எல்லாம் புதிதல்ல..அது அவர்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. முன்பைவிட தற்போது ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில்தான் இன அழிப்பின் நுண்மையான பின்னணி இருக்கிறது.

 

மே 18 ற்கு முன்பு தமது சொந்த நிலத்தில் பருவ நிலைகளுக்கு ஏற்றமாதிரி தமது குடியிருப்புக்களை மாற்றிக்கொள்வார்கள். விச ஜந்துக்களின் நடமாட்டத்திற்கு எற்றமாதிரி சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது அவர்களை இடம்மாறி போட்டு நிலங்களையும் அபகரித்து அவர்கள் வாழ்வு நெறி அனைத்து வழிகளிலும் துண்டாடப்பட்டுள்ளது.

 

தங்களுக்கு சம்பந்தமில்லாத நிலப்பரப்பில் தறப்பாள் கூடாரங்களில் இருந்து கொண்டு மழை வெள்ளத்தையும் விச ஜந்துக்களையும் எப்படி சமாளிப்பது? மலேரியா நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எந்த வழியில் தடுப்பை ஏற்படுத்துவது? அதுதான் முன்பைவிட இதன் தாக்கங்களால் மரணத்தை சந்திக்க நேரிடுகிறது.

 

இதுதான் இன அழிப்பு உத்தி. ஏற்கனவே போரின் வடுக்களினால் உளவியல் சிக்கல்களும், பொருளாதார நெருக்கடிகளும் சூழந்துள்ள வேளையில் சுய பாதுகாப்பு என்பது இயல்பாகவே அவர்களை விட்டு போய்விட்டது. தினமும் நடைபெறும் தற்கொலைகள் எல்லாம் இந்த பின்னணியிலேயே நடக்கின்றன..

 

தாயகத்தில் நடக்கும் ஒவவொரு மரணத்தின் பின்னும் இனப்படுகொலை அரசின் அருப கரங்கள் மறைந்துள்ளன. அது காய்ச்சல் வந்து செத்தாலும் சரி.. பாம்பு கடிச்சாலும் சரி..

 

எனவே குதர்க்கம் கதைக்காதீர்கள். நம்மால் ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் பரவாயில்லை. இன அழிப்பை நியாயப்படுத்தாதீர்கள்.

 

இவை எல்லாவற்றிற்கும் முடிவு. நில மீட்பு போராட்டம்தான். செர்நத நிலத்தில் எம்மை சுதந்திரமாக வாழ விடுமாறு கோரிக்கையை வைத்து நாம் பரந்தளவில் போராடுவதனூடாகவே இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 

எனவே எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்கு பிறகு அந்த மக்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம். அவர்களே உழைத்து உண்பார்கள்.

 

எமது நிலத்தை நாம் மீள கைவசப்படுத்துவது ஒன்றே கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாக்கும்.

 

எனவே நாம் தெளிவாக இருப்போம். தொடர்ந்து போராடுவோம்.

 

நன்றி: பரணி கிருஸ்ணரஜனி.