வரும் சனவரி மாதத்தில் அதிபர் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்~ மேற்கொண்டிருக்கும் நிலையில், மகிந்தரை வீழ்த்தும் நோக்கில் பொது வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் பொருந்திய அதிபர் முறைமையை கிழட்டு நரி என்று பெயர்போன ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்தும் வரை அரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயபூர்வமான ஒன்றாகவே இருந்து வந்தது. ஈழத்தீவின் ஆட்சியதிகாரத்தை 04.02.1948 அன்று சிங்களவர்களிடம் பிரித்தானியர்கள் கையளித்துச் சென்ற பொழுதும், அரசுத் தலைவர் பதவியை பிரித்தானிய முடியாட்சி பீடமே அலங்கரித்து வந்தது. சுதந்திரத்தின் பின்னர் அரசுத் தலைவராக ஆறாவது ஜோர்ஜ் மன்னர் விளங்கினார். அவரை தொடர்ந்து அப்பதவியை எலிசபெத் மகாராணியார் வகித்தார். எனினும் 1972ஆம் ஆண்டு குடியரசு முறைமையை சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து 22.05.1978 அன்று அரசுத் தலைவர் பதவியை வில்லியம் கொப்பலாவா ஏற்றார். எனினும் கொப்பலாவாவின் பாத்திரம் என்பது வெறுமனவே சம்பிரதாயபூர்வமானதாகவே இருந்தது.

1977ஆம் ஆண்டு சிறீமாவோ அம்மையாரை வீழ்த்தி விட்டு நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயவர்த்தனா, நிறைவேற்று அதிகார முறைமையை அறிமுகம் செய்து 04.02.1978 அன்று நாட்டின் முதலாவது நிறைவேற்று சனாதிபதியாகப் பதவியேற்றார். அத்தோடு அரசுத் தலைவர் பதவியின் சம்பிரதாயபூர்வ பாத்திரம் முடிவுக்கு வந்தது. நிறைவேற்று அதிபர் முறைமையின் அர்த்தபரிமாணங்கள் பற்றி ஒரு தடவை கருத்துரைத்த ஜெயவர்த்தனா, ‘ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரத்தைத் தவிர ஏனைய சகல அதிகாரங்களுக்கு நிறைவேற்று அதிபருக்கு உண்டு’ என்று கூறியிருந்தார்.

rajapaksa53-600
ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிறைவேற்று அதிபர் பதவி முறைமையில் ருசி கண்ட ரணசிங்க பிரேமதாசா, டிங்கிரி பண்டா விஜேதுங்கா, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் வரிசையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜெயவர்த்தனாவின் முதிசத்தை மகிந்தர் சுமந்து நிற்கின்றார். ஆனாலும் ஜெயவர்த்தனாவையும், மகிந்தரையும் தவிர ஏனைய எவரும் நிறைவேற்று அதிபர் பதவியைத் தாம் விரும்பிய அளவிற்கும், காலத்திற்கும் அனுபவித்தது கிடையாது. பன்னிரண்டு ஆண்டுகள் அதிபராகப் பதவி வகிக்க வேண்டும், வாய்ப்புக் கிடைத்தால் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்ற பிரேமதாசாவின் கனவு 01.05.1993 அன்று கொழும்பில் மனிதவெடிகுண்டொன்றில் சிக்கிச் சிதறுண்டு நிராசையாகிப் போனது. அவரது முதிசத்தைச் சுமந்து அதிபர் பதவியை ஏற்ற விஜேதுங்காவின் கனவும் மறு ஆண்டு தென்னிலங்கை அரசியலில் களமிறங்கிய சந்திரிகா அம்மையாரால் கலைக்கப்பட்டது. ஆனாலும் சந்திரிகா அம்மையாராலும் தான் விரும்பிய காலத்திற்கு அதிபர் பதவியை வகிக்க முடியவில்லை. அன்று மகிந்தரின் நண்பராக விளங்கிய தலைமை நீதியரசர் சரத் நந்தன சில்வா, சந்திரிகா அம்மையாரின் பன்னிரண்டு ஆண்டு காலப் பதவி ஆசைக்கு ஆப்பு வைத்து, 19.05.2005 அன்று மகிந்தர் ஆட்சிக் கட்டிலேறுவதற்கு வழிவகை செய்து வைத்தார்.

இந்த வகையில் ஜெயவர்த்தனாவிற்கு அடுத்தபடியாகத் தான் விரும்பியபடி அதிபர் பதவியின் அதிகாரங்களை ரசித்து, ருசித்து, இன்புற்று வரும் மகிந்தருக்கு வாழ்நாள் முழுவதும் அரியணையில் அமர்ந்திருப்பதில் அலாதியான ஆசை உண்டு. இதற்காகத்தான் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிப்பதற்கு அரசியமைப்பில் இருந்த கட்டுப்பாடுகளை 2010ஆம் ஆண்டில் மகிந்தர் இல்லாதொழித்தார்.

அதிபர் பதவியை அலங்கரிக்கும் ஆசை மகிந்தருக்கு மட்டும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தயவில் தனக்கு அதிபர் பதவி கிட்டும் என்ற கனவுலகில் சஞ்சரித்து, இலவம் பழம் காத்த கிளியாக 2005ஆம் ஆண்டில் ஏமாந்து போன ரணில் விக்கிரமசிங்காவையும் இந்தப் பதவி ஆசை பீடித்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை அலங்கரித்து நிற்கும் கரு ஜெயசூரியாவையும் சரி, சஜித் பிரேமதாசாவையும் சரி இந்தப் பதவி ஆசை விட்டு வைக்கவில்லை. போதாக்குறைக்கு தயக்கத்துடன் மகிந்தரிடம் அதிபர் முதிசத்தைக் கையளித்து இதுகாறும் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிந்த சந்திரிகா அம்மையாருக்கும் இந்த ஆசை தாராளமாக உள்ளது. தான் அதிபர் தேர்தலில் குதிப்பதற்கு சட்டபூர்வத் தடைகள் இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால் தனது துணைவியார் அனோமாவை களமிறக்கும் ஆசை சரத் பொன்சேகாவிற்கும் உண்டு.

‘ஆசைகள் எல்லாம் அறியாமையில் இருந்து பிறக்கின்றன: துன்பங்கள் எல்லாம் ஆசைகளால் விளைகின்றன’ என்று அன்றொரு காலத்தில் புத்தபிரான் போதித்தார். போதிசத்துவரை நித்தமும் வழிபட்டு, ‘புத்தம் சரணம் கச்சாமி’ ஓதும் மகிந்தரும் சரி, அவருக்குப் போட்டியாகத் தேர்தல் களத்தில் குதிப்பதற்கு நானா, நீயா என்று முண்டியடிக்கும் ஏனையோரும் சரி போதிசத்துவரின் இந்த உபதேசத்தின் அர்த்தபரிமாணத்தை இதுவரை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. கொல்லாமையைப் போதித்த புத்தபிரானின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவித்துத் தமிழ்க் குருதி குடித்தும், தமிழ் மாமிசம் அருந்தியும் அரசியல் செய்யும் இவர்களிடம் வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்?

சிங்கள தேசத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தடவை தேர்தலை சந்திக்கத் தவறினால் இனி எந்தத் தடவையும் நல்ல காலம் கிடைக்காது என்று தனது ஆஸ்தான சோதிடர்கள் கூறியதை நம்பி அவசர அவசரமாகத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மகிந்தர் இறங்கி விட்டார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள், தனது ஆஸ்தான சோதிடர்களின் கூற்றை உண்மையாக்கி விட்ட பிரம்மை மகிந்தருக்கு. ராகு காலம் தொடங்குவதற்கு முன்னர், ஏழரைச் சனியன் தன்னைப் பீடிப்பதற்கு முன்னர், எப்படியாவது அதிபர் பதவியில் அமர்ந்து விட்டால் தப்பிவிடலாம் என்ற நப்பாசை அவருக்கு.

மறுபுறுத்தில் இப்பொழுது விட்டால் ஆறு ஆண்டுகளுக்கு இலவம் காத்த கிளியாகக் காத்திருக்க வேண்டும் என்ற அச்சத்தில் எப்படியாவது மகிந்தரை வீழ்த்திவிட வேண்டும் என்ற ஆசையில் எதிரணியினர்.

ஆனால் இதுவல்ல பிரச்சினை. இம்முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதுதான் பிரச்சினை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி தமிழீழ மண்ணில் நிலவிய பொழுது யாரும் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை ஏறெடுத்துப் பார்த்ததில்லை. அந்நிய தேசத்தில், அந்நிய தேசத்துத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமது என்ன வேலை என்பதே அன்று தமிழீழ மக்களின் பார்வையாக இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 11.04.2002 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ‘ரணில் விக்கிரமசிங்காவை உங்களது பிரதம மந்திரியாக ஏற்றுக் கொள்கின்றீர்களா?’ என்று செய்தியாளர் ஒருவர் வினவிய பொழுது, ‘இங்கு தமிழீழத்தில் பிரதம மந்திரியும், அதிபரும் பிரபாகரன்தான்’ என்று குறிப்பிட்டு இக்காரணத்தைத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அழகாக எடுத்துரைத்திருந்தார்.

அன்று தமிழீழ மண்ணில், தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய அன்றைய காலப்பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையே தமது ஒரேயொரு தலைவனாகத் தமிழீழ மக்கள் கருதினார்கள். இதன் பிரதிபலிப்பாகவே 2005ஆம் ஆண்டு சிங்கள தேசத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த பொழுது, தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களே தமது ஒரேயொரு தலைவன் என்பதைத் தமிழீழ மக்கள் இடித்துரைத்தார்கள்.

praba-smg
ஆனால் 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்த பின்புலத்தில், ஆளுக்கொரு தலைவன் என்ற கதையாகப் புற்றீசல்களாகப் பலர் எழுந்தார்கள். இவ்வாறு எழுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள். தமிழீழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத சூழலில், அதுவரை நாடாளுமன்றக் களத்தில் புலிகளின் மறுமுகமாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர விசுவாசிகள் என்று கருதப்பட்ட செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை ஓரங்கட்டினார். இதன் ஊடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறுவதற்கு வழிசமைத்தார். இதனைத் தொடர்ந்து தனது பட்டத்து இளவரசராக மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனைக் கொலுவேற்றினார்.

அடுத்த படியாகத் 2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்தது பெரும் தவறு என்று மேடைகளில் முழங்கினார். தமிழர்களை வந்தேறு குடிகள் என்று வர்ணித்து, ஈழத்தீவை சிங்கள-பௌத்தர்களின் புனித பூமியாக சித்தரித்துப் போர்ப்பிரகடனம் செய்து தமிழர்களைக் கொன்றுகுவித்த பொன்சேகாவிற்கு வாக்குப் பிச்சை கேட்டு தமிழீழத்தின் பட்டிதொட்டிகள் எங்கும் சம்பந்தர் பறந்தார். 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறை சீர்செய்யப் போவதாகத் தம்பட்டம் அடித்து தனது ‘சாணக்கியத்திற்கு’ விளம்பரம் தேடினார். கடைசியில் என்ன நடந்தது?

பொன்சேகா ஆட்சிக் கட்டிலில் ஏறவுமில்லை: சம்பந்தரின் சாணக்கியம் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தந்துவிடவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்த ஒரேயொரு காரணத்திற்காக பொன்சேகாவை சிங்கள வாக்காளர்கள் தூக்கியெறிந்தார்கள். படைத்தளபதியாகப் பொன்சேகா பதவி வகித்த பொழுது புலிகளை வென்ற பெரும் வீரன், துட்டகாமினியின் கொள்ளுப் பேரன் என்றெல்லாம் அவரைப் புகழ்ந்த சிங்களவர்கள், ஒரே இரவில் அவரைத் தூக்கியெறிந்து துட்டகாமினியின் இரத்தவாரிசாக மகிந்தருக்கு முடிசூட்டினார்கள்.

தமது உறவுகளைக் கொன்ற மகிந்தருக்குப் பாடம் புகட்டப்பட வேண்டும், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்தர் தூக்கியெறியப்பட வேண்டும் என்றெல்லாம் அன்று தமிழர்கள் விரும்பினார்கள் என்பதும், அதற்காகப் பொன்சேகாவிற்கு புள்ளடி போட்டார்கள் என்பதும் ஏனோ உண்மைதான். ஆனால் அன்று சம்பந்தரின் தவறான வழிகாட்டலை ஏற்றுப் பொன்சேகாவிற்கு தமிழர்கள் போட்ட புள்ளடி பெரும் வரலாற்றுப் பழிக்கு முழுத்தமிழினத்தையும் ஆளாக்கும் அபாயத் தன்மையைக் கொண்டிருந்தது.

தேர்தல் களத்தில் குதிக்கும் முடிவை பொன்சேகா வெளியிட்ட சமகாலத்தில் அமெரிக்க சட்டவாக்க அமைப்பான செனெற் சபையின் வெளியுறவுக் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அன்று செனற் சபையின் வெளியுறவுக்கு குழுவின் தலைவராக விளங்கிய தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி அவர்களின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட அவ் அறிக்கையில், சிறீலங்காவுடன் அமெரிக்கா நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது:

‘‘சிறீலங்காவை இழக்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுவிட முடியாது. இதன் அர்த்தம் சிறீலங்காவுடனான தற்போதைய உறவை ஒரே இரவில் சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்பதோ, அன்றி அதன் அரசியல் – மனிதநேயத் தவறுகள் பற்றிய கரிசனைகளை அலட்சியம் செய்வது என்பதோ அல்ல. மாறாக, இதன் அர்த்தம் எமது கையிருப்பில் உள்ள வலுக்களை விரிவுபடுத்திப் புதிய அணுகுமுறையின் அடிப்படையில் சிறீலங்கா மீதான எமது ஆதிக்கத்தை அதிகரிப்பதாகும். சிறீலங்காவுடனான பொருண்மிய, வணிக, பாதுகாப்பு உறவுகளில் முதலீடு செய்யும் பன்முகப்பட்ட அணுமுறையைக் கொண்டதாக இது இருக்கும். இது நாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கேந்திர நலன்களைப் பாதுகாப்பதாக அமையும். தவிர, அமெரிக்காவின் மூலோபாயம் என்பது வெறுமனவே தமிழர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட வடக்குக் கிழக்கு மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குவதோடு நின்றுவிடாது, நாட்டின் சிங்களப் பகுதிகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அமைந்திட வேண்டும்.’’

இவ் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவர் அமெரிக்க செனற் சபையின் வெளியுறவுக் குழுவின் அதிகாரியான நில்மினி குணரட்ண ரூபின் என்ற சிங்களப் பெண்மணி என்பது ஒருபுறமிருக்க, மேற்குலகிற்கு ஆதரவான தேர்தல் விஞ்ஞாபனத்துடன் அன்று மகிந்தருக்கு எதிராகத் தேர்தல் களத்தில் பொன்சேகா குதித்திருந்தார் என்பதே முக்கியமாகும்.

அன்று மகிந்தரைத் தோற்கடித்துச் சிங்கள தேசத்தின் அதிபராகப் பொன்சேகா பதவியேற்றிருக்கும் பட்சத்தில் இன்று அனைத்துலக அரங்கில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை அடிபட்டுப் போயிருக்கும். மகிந்தரினதும், சிங்கள தேசத்தினதும் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஐ.நா.வின் பன்னாட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.

இப்பொழுது மீண்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தமிழினம் நிற்கின்றது. தமிழர்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், சிங்கள தேசத்தின் அரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் இறுதி முடிவு சிங்களவர்களிடமே உள்ளது. தவிர, தமிழர்களோடு எந்தவொரு சிங்களத் தலைவராவது சிறிதளவு சமரசம் செய்து கொள்ள முற்பட்டாலும் அவர்களைச் சிங்கள தேசம் தூக்கியெறியும் என்பதே யதார்த்தமாகும்.

எனவே தமிழர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டிலை ஒரு கடைந்தெடுத்த பௌத்த-சிங்கள இனவாதி மட்டுமே அலங்கரிப்பதற்கு சிங்கள தேசம் அனுமதிக்கும். இந்த வகையில் சென்ற தடவை பொன்சேகாவைத் தோற்கடித்துத் துட்டகாமினியின் இரத்த வாரிசு என்ற பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டிருக்கும் மகிந்தரே இன்றைய காலப்பகுதியில் சிங்கள தேசத்தின் நட்சத்திர இனவாதியாகக் கொலுவிருக்கின்றார். இதற்காக மகிந்தருக்குப் போட்டியாகக் களமிறங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஏனைய சிங்களத் தலைவர்களைச் சளைத்தவர்களாக கருத முடியாது.

சந்திரிகா அம்மையாரின் இனவாத முகம் என்பது தமிழர்கள் நன்கு அறிந்த ஒன்று. யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து இலட்சம் தமிழர்களை இடம்பெயர்த்து, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் – யுவதிகளைக் கொன்று செம்மணியில் புதைத்து, வன்னி மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளித் தமிழர்களுக்குப் பெரும் கொடுமை புரிந்தவர் அம்மையார்.

தமிழினப் படுகொலை என்று வரும் பொழுது சுத்தமான கைகளைக் கொண்டவர் போன்று ரணில் விக்கிரமசிங்கா தென்பட்டாலும், அவருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அசிங்கமான சிங்க முகம் பல தடவைகள் வெளிப்பட்டிருப்பதைத் தமிழர்கள் மறந்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது நிகழ்ந்தேறிய மண்கும்பான் படுகொலைகளில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பாத்திரம் தமிழர்களால் மறக்க முடியாதது. அன்று பிரேமதாசாவின் அமைச்சரவையில் அமைச்சர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்க, மண்கும்பான் பகுதிக்குப் பயணம் செய்து அங்கு நடைபெற்ற தமிழினப் படுகொலைகளைக் கண்டு களித்தவர். இப்படிப்பட்ட ஒரு பச்சை இனவாதியான ரணில், சிங்கள தேசத்தின் நிறைவேற்று அதிபராகும் பட்சத்தில் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதைச் சிறு பிள்ளையாலும் ஊகித்துக் கொள்ள முடியும்.

போர் ஓய்வுக் காலப்பகுதியில் ரணில் புரிந்த திருகுதாளங்கள் ஏராளம். ஒரு புறம் புலிகளோடு சமாதானம் பேசிக் கொண்டு மறுபுறம் அமெரிக்கப் படையினரைக் காதும்காதும் வைத்தாற் போன்று கொழும்புக்கு அழைத்து சிங்கள ஆயுதப் படைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டவர் ரணில். நான்காம் கட்ட ஈழப் போரில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஈட்டிய வெற்றி என்பது ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது என்கிறார் பிரபல பிரித்தானிய படைத்துறை நிபுணர் போல் மூர்கிராப்ட். இந்நிபுணர் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, ரணிலில் காலத்திலேயே சிங்கள ஆயுதப் படைகளில் கொத்துக் குண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இக் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியே கொத்துக் கொத்தாக ஒன்றரை இலட்சம் தமிழர்களை சிங்களம் கொன்றுகுவித்தது என்பதை நாம் மறக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தரவை ஐரோப்பிய ஒன்றியப் பொதுநீதிமன்றம் பிறப்பித்ததை ஆட்சேபித்து இவ்வாரம் ரணில் மனுச் செய்திருப்பது அவரது இனவாத முகத்தை மீண்டும் ஒரு தடவை பட்டவர்த்தனமாக்கியிருப்பது வேறு கதை.

ரணிலுக்கு அடுத்தபடியாக உள்ள சிங்களத் தலைவர்களைப் பற்றி நாம் கூறத் தேவையில்லை. இவர்களும் சாராம்சத்தில் இனவாதிகளே.

எனவே சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற கதையாக அரசியல் தீர்வின் போர்வையில் தமிழர்களை ஏமாற்றும் ‘செப்படி வித்தையே’ அரங்கேறப் போகின்றது.

மேற்குலகிற்கு விரோதமான போக்கை, அதுவும் மேற்குலகின் தாராண்மைவாதத் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ள மகிந்தர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிங்களத்தின் மீதான மேற்குலகின் எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும். மாறாக மேற்குலகுடன் அனுசரித்துப் போகும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் மீதான மேற்குலகின் அனுதாப அலை அடிபட்டுப் போகும். இதுதான் இன்றைய பன்னாட்டு அரசியல் யதார்த்தமாகும்.

இது சம்பந்தருக்குப் புரிகிறதோ இல்லையோ. இதனைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தார். இதனால்தான் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரிக்கவில்லை. தமிழீழ தேசியத் தலைவரின் முடிவை ஒற்றி நின்று அன்று முற்று முழுதான தேர்தல் புறக்கணிப்பைத் தமிழீழ மக்கள் மேற்கொண்டார்கள். இதுதான் இன்றைய வரலாற்றுத் தருணத்தில் வரலாறு காட்டிநிற்கும் வழியாகும்.

தமிழ்நாதம்.