வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்:

மாண்புமிகுமுதலமைச்சர்,செல்வி ஜெயலலிதாஅவர்களுக்கு,

தமிழகஅரசு,

தலைமைச்செயலகம்,

சென்னை.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரியஅம்மாஅவர்களுக்கு,

வணக்கங்கள் பல.

நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்). அண்மையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனைவிதிக்கப்பட்டபின் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுதமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்தமுடிவுஉலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியைஏற்படுத்தி இருக்கின்றது.

இது வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்படவேண்டியவரே.

இதேசமயம் தமிழகத்தில் சில தசாப்தகாலமாக அகதிமுகாம்களில் பல் வேறு துன்பதுயரங்களை சுமந்த படி பல்வேறுநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தபடி அகதிகள் என்ற பெயரில் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்புநிலமையினை தோற்றுவிக்கவேண்டும் எனநாம் விரும்புகிறோம்.

உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்லசிங்களஅரசின் . அளப்பரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உயிர்பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்துவந்தவர்கள். கடந்த நான்கு தசாப்தங்களில் அவர்கள் வசதிகளற்ற அகதிமுகாம்களிலும் சிறப்புமுகாம் எனஅழைக்கப்படும் தடுப்புமுகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் இரகசியமானதல்ல.

அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்தமண்ணிற்குதிரும்பி இயல்புவாழ்க்கைவாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்குள்ளவர்களின் துன்துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும்.

இந்தநிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும்வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனிதஉணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது தமிழகஅரசினதும் முதல்வராகிய உங்களதும் மனிதநேயகடமையாகும் என எண்ணுகிறோம்.

மரணதண்டனைக் கைதிகளில் காட்டியமனிதநேயமும் நியாயஉணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தங்களுக்குஎனதுநன்றிகள்.
என்றும் உண்மையுள்ள,
ச.அனந்தி.