ஈழம் முடிந்துவிட்ட கனவா, மீண்டும் உயிர்தெழும் கருத்தாக்கமா என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆனால், கம்பி வேலிகளுக்கு பின்னே இரண்டரை லட்சம் தமிழ் மக்களை சிறை வைத்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மறுத்தும் தான், மஹிந்த ராஜ பக்சேவின் சிங்கள பேரினவாத அரசு விடுதலைப் புலிகளின் மீதான தனது ராணுவ வெற்றியை இன்று கொண்டாட முடிகிறது.

pandian
சிங்கள அரசின் அதன் ராணுவத்தின் போர்குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டும் எனும் குரல் சர்வதேச அரங்கில் வலுப் பெற்று, ஓங்கி ஒலிக்கும் இவ்வேளையில், வேறு நாடுகளில் வாழும் இளந்தமிழர்களும், தமிழ் சிறார்களும் தங்களின் தமிழ் அடையாளத்தைப் பற்றிய புதிய புரிதலையும், உணர்வையும் இன்று பெற்றுள்ளனர். சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தங்கள் இன மக்கள் மீதான் அவர்களின் கவனமும், பரிதவிப்பும் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் இன்றைய வரலாற்றைக் கூட தமிழ் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே எழுத முடியும் என்பதுதான் யதார்த்தம். கடந்த 40 ஆண்டுகால இலங்கையின் வரலாற்றை பிரபாகரனுக்கு பிந்திய இலங்கை ((Post-Prabhakaran Sri Lanka), பிரபாகரன் காலத்து இலங்கை என்று காலப்படுத்தப்படுவது இதைத் தான் காட்டுகிறது.

இழந்து நிற்பது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; சிங்களவர்களும் கூடவே. மக்களாட்சி எனும் போர்வையில், அவர்களுக்கு அனைத்து சிவில் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையின் அரசியல் இன்று முழுமையாக ராணுவப்பட்டுள்ளது, யாரும் இதை சிங்களவர்களின் வெற்றியாக பார்க்க முடியாது.

போரின் போதும், போர் முடிவின் பின்னும் நிகழும் இந்த அரசியல் போக்குகள் முக்கியமானவை. இவைகள் இலங்கையின் வரலாற்றில் விடுதலைப்புலிகளின் தோல்வி ஒரு புதிய தொடக்கம் எனும் சிங்கள பேரினவாதிகளின் கூற்றை கேள்விக்குள்ளாக்குகின்றன. வெற்றியெனக் கொண்டாடப்படுவது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை கால நகர்வுதான் தெளிவுபடுத்தும்.

இந்தப் பின்னணியில் ரவிக்குமாரின் ‘தமிழராய் உணரும் தருணம்’ ஈழப் பிரச்சனையைப் பற்றிய தெளிவானதொரு புரிதலை நம்முன் வைக்கும் முக்கியமான நூல். 2006 முதல் 2009 வரை அவர் ஈழப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், ஈழப் போராட்டத்தின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஒரு நாட்குறிப்பாக, வரலாற்று ஆவணமாக இயங்குகிறது.

போரின் கொடூரம், சர்வதேச போர் சார்ந்த நெறிமுறைகளுக்கு புறம்பான இலங்கை அரசின் செயல்பாடு, விடுதலைப் புலிகளின் போர் யுக்திகளின் பலமும் பலவீனமும் என்று பல தளங்களில் பயணிக்கும் இந்நூல், இலங்கையின் இனவாத அரசியல் பற்றிய புரிதலை மட்டும் நமக்குத் தரவில்லை. சர்வதேச அரசியலின்

தீவிரவாத எதிர்ப்பு எனும் புதிய முகமும், அதன் நெறியற்ற செயல் பாடுகளும், இந்திய வெளியுறவு கொள்கையின் புதிய போக்குகளும் முரண்பாடுகளும், தெற்காசியாவில் இந்தியாவின் வலுவற்ற நிலை போன்ற சர்வதேச சூழல் எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு எதிரான, ஒரு அரசியலை வலுப்படுத்துகிறது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சி களின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

இந்த பல்வேறுபட்ட பதிவுகள், செய்திகள், விமர்சனங்கள் மூலம், இந்நூல் தமிழர்கள் தங்களிடையேயுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, ஈழத்தமிழர்களுக்காக ஒன்றாகக் குரல் எழுப்புவதின் முக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. வரலாற்றை புரிந்து கொள்வது மூலமே வரலாற்றை மாற்றியெழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ரவிக்குமாரின் நூல் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கானஒரு காரணி என்பது மிகையல்ல.

(ரவிக்குமாரின் ‘ தமிழராய் உணரும் தருணம்’ ஆழி பதிப்பகம், 2010 – நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)