வல்லாதிக்க நாடுகளின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு பின் புலிகளின் மீதான திட்டமிட்ட பரப்புரைகள் தான் எத்தனை விதமான வடிவங்களில் வருகின்றன ?

“ஊழிக் காலம் ” நாவல் குறித்து ஒரு சிறு குறிப்பு

நாங்கள் தோற்றுப் போனதைப் பற்றிக் கூட கவலையில்லை . ஆனால் கண்ணெதிரே ஷெல்லடித்து வீழ்ந்த மனிதர்களைத் தூக்கி புதைக்கக் கூட ஏலாதவர்களாகிப் போனேமே என வருத்தப் படுவான் அகரமுதல்வன் .

ulikkalam
“ஊழிக் காலம் “சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலையின் ஊடே பயணிக்கும் பார்வதி மற்றும் அவருடைய குடும்பத்தின் இடப் பெயர்வுகளையும் போரின் வலிகளையும் சொல்லும் நாவல் என எழுதத்தான் விருப்பம், ஆனாலும் இந்த நாவல் முழுமைக்கும் ஈழத் தமிழர்கள் போரின் ஊடே அனுபவித்த வலிகளை சொல்லும் சாக்கில் புலிகளை மட்டுமே குற்றம் சுமத்தியிருக்க்கும் போது எப்படிச் சொல்வேன் ?. இத்தனைக்கும் இப் புதினத்தின் ஆசிரியர் இரண்டு மாவீரர்களின் தாய் மற்றும் முன்னாள் போராளி .

அரசியலை பேசும் படைப்பாளி இரு பக்கங்களின் நியாயம் மற்றும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும் . ஆனாலும் சமீப கால ஈழ எழுத்தாளர்கள் சிங்களப் பேரினவாதத்தை மயில் தோகையால் வறுடியும் புலிகளை சவுக்கால் அடித்தும் வருகிறார்கள் .
அந்த வகையில் தமிழ்க்கவியும் புலிகளின் மேல் மட்டுமே வெறுப்பை உமிழ்ந்திருக்கிறாரே தவிர ஏனோ சிங்களப் பேரின வாதத்தின் மனித உரிமை மீறலை/ கிளஸ்டர் , கொத்துக் குண்டுகள் , வேதியல் வெடிமருந்துகளைப் பற்றி வாய் திறக்கவில்லை .

மனுஷ்யபுத்திரன் சொல்லும் திமுக சார்பு நடுநிலைமையைப் போலத்தான் சிங்கள சார்பு நடுநிலைமையை பெரும்பாலான ஈழப் படைப்பாளிகள் இனப் படுகொலைக்குப் பின் எடுத்து வருகின்றனர் .

பேரழிவுக்குப் பிறகு பற்றிக் கொள்ள கொழு கொம்பு கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் புலிகளை மட்டுமே குற்றம் சுமத்தக் கிளம்பியிருக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் தீடிர் மனித உரிமை ஆர்வலர்கள் மீது கோபத்திற்குப் பதிலாக பரிதாபமே மேலிடுகிறது.

ஊழிக்காலம் போர்க் காலத்தின் மிகச் சிறந்த ஆவணம் என ஒருசில பார்ப்பன ஊடகங்கள் தூக்கிக் கொண்டாடியதையும் அதன் பின் ஷோபா சக்தி தமிழ்க் கவியை நேர்காணல் செய்ததும் மனதில் நிழலாடுகிறது .

வல்லாதிக்க நாடுகளின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு பின் திட்டமிட்ட புலிகளின் மீதான பரப்புரைகள் தான் எத்தனை விதமான வடிவங்களில் வருகின்றன ?…

எப்படிப் பார்த்தாலும் ஈழமக்கள் , அவர்களுக்காகப் போராடிய புலிகளைப் போல சமகாலத்தில் சபிக்கப் பட்டவர்கள் இந்தப் புவியில் யாருமில்லை .

தமிழ் தேசிய அரசியல் செயல்பாட்டாளர்கள் கலை , இலக்கியம் , கருத்து உருவாக்கத்தில் நிறையவே பயணப் பட வேண்டியதிருக்கிறது .

கடங்கநேரி யான்.