வாழ்வுக்குப் பதில் சாவைத் தழுவிக் கொண்டவர்களை நாங்கள் நினைவு கூருகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். வி.புலிகள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களது விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள். உலக வரலாற்றில் ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் பின்னாளில் விடுதலை வீரர்களாகப் போற்றப் பட்டுள்ளார்கள். யோர்ஜ் வோஷிங்டன் தொடங்கி நெல்சன் மண்டேலா வரை நீண்ட பட்டியல் உண்டு என இராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.

rathika
கடந்த மாதம் 27 ஆம் நாள் கனடிய நாடாளுமன்றத்தில், மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபைஈசன் நிகழ்த்திய உரை ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது எதிர்பார்த்ததே. இராதிகா நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய உரையும் அதன் தமிழாக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“Mr. Speaker as Canadians of Tamil heritage in November we commemorate two important events, Remembrance Day and the Tamil Heroes Day. This month symbolizes the beauty of life because we remember all those who sacrifice their lives for the rest of us to live in peace and freedom. We remember that each and every one of the people who have been caught in the cross fires of war throughout the ages have embraced life over death but those who made the ultimate sacrifice ensured that we who survived would be able to live with dignity and with liberties.

This month provides us with the occasion not only to remember and pay tribute to the heroes but also to reflect on the lessons of the struggle for justice, peace and a life free from discrimination. Sadly on the island country of Sri Lanka where I was born as a child of war the discrimination and injustices continue and the ethnic and religious minorities continue to live without peace and in fear. Mr. Speaker let us always work for peace at home and abroad and as always support those who put their lives on the line. From the bottom of my heart I thank you all lest we forget.”

‘நொவெம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூருகிறோம். ஒன்று கனடா படையினர் நினைவு நாள் மற்றது மாவீரர் நினைவு நாள். நொவெம்பர் மாதம் வாழ்வியலின் அழகை வெளிக்கொணரும் ஒரு குறியீடாக இருக்கிறது. காரணம் நாங்கள் அமைதியாகவும் சுதந்திரத்தோடும் வாழ்வதற்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்தவர்களை நினைவு கூரும் மாதம் அதுவாகும் போரின் நடுவில் சிக்கி இறந்த ஒவ்வொருவரையும் நினைவு கூருகிறோம். ஆனால் போரில் தப்பிப் பிழைத்த நாங்கள் தன்மானத்துடனும் சுதந்தித்தோடும் வாழக் காலம் காலமாக வாழ்வுக்குப் பதில் சாவைத் தழுவிக் கொண்டவர்களையும் நாங்கள் நினைவு கூருகிறோம்.

இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதோடு நீதிக்காகவும் அமைதிக்காகவும் வேறுபடுத்தப்படாத வாழ்க்கைக்காகவும நாம் நடத்திய போராட்டம் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். துக்கம் என்னவென்றால் நான் சிறிலங்காவில் ஒரு போர்க்காலக் குழந்தையாகவே பிறந்தேன். அங்கு இன்றும் பாரபட்சம் மற்றும் அநீதிகள் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்களும் சமயத்தவரும் தொடர்ந்து அமைதியின்றி அச்சத்தில் வாழ்கிறார்கள். அவைத் தலைவர் அவர்களே நாங்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமைதிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். தங்கள் உயிரைக் கொடுத்து போராடுபவர்களுக்கு எமது ஆதரவை நல்குவோம். நாங்கள் அவர்களை மறந்து போகுமுன் அவர்களைப் பற்றிப் பேச வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’

நாடாளுமன்றத்தில் இராதிகா தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளையும் கனடிய வீரர்களை நினைவு கூரும் நாளையும் ஒப்பிட்டுப் பேசியதைப் பொறுக்க முடியாத கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீவன் பிலானே (Steven Blaney) நெற்றிக் கண்ணைத் திறந்துள்ளார். அவருக்கு வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் பக்கப்பாட்டுப் பாடியுள்ளார்.

அமைச்சர் ஸ்டீவன் பிலானே தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளையும் கனடிய வீரர்கள் இறந்த நினைவு நாளையும் ஒப்பிட்டுப் பேசியது தனக்கு “அதிர்ச்சியும் நடுக்கமும்” ஏற்படுத்தியதாகவும் எனவே இராதிகா “கனடிய முன்னாள் படையினரிடமும் எல்லாக் கனடிய குடிமக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று நஷ்னல் போஸ்ட் (National Post) ஆங்கில நாளேட்டுக்குக் கொடுத்த செவ்வியில் கேட்டுள்ளார்.

“தமிழ் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பை பெருமைப்படுத்துவதற்காக அனுட்டிக்கப்படும் நாள். புலிகள் கனடாவின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைப்பாகும்” என அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். வி.புலிகள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களது விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள். அதனை பன்னாட்டு சட்டங்கள் ஆதரிக்கிறது. வி.புலிகள் தமிழர்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக ஒரு தற்காப்புப் போரை நடத்தியவர்கள். அவர்கள் வன்முறையை நேசிக்கும் மன நோயாளிகள் அல்லர். இப்படிச் சொல்வதால் அவர்கள் போர் விதிகளை மீறவில்லை என்று நாம் சொல்லவில்லை. மீறியிருக்கிறார்கள். ஆனால் அவை போர்க்குற்றங்களே தவிர பயங்கரவாதம் அல்ல. அவர்கள் தமிழ்மக்களுக்குரிய சுயநிருணய உரிமையின் அடிப்படையிலேயே போராடினார்கள். பயங்கரவாதம் பற்றிய சட்டங்கள் விடுதலை இயக்கத்துக்குப் பொருந்திவராது.

வி.புலிகளை உருவாக்கியதே சிறிலங்காவை மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள இனவாதக் கட்சிகளே. தமிழர்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட காரணத்தாலேயே ஆயுதப் போராட்டம் தலை தூக்கியது. குடும்பத்தைத் துறந்து கல்வியை துறந்து, ஆசைகளைத் துறந்து சுதந்திரம் என்ற இலட்சியற்காகத் தமது உயிரையும் துச்சமாக மதித்து போராட்டக் களத்தில் குதித்தவர்கள். இவர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது சிங்கள அரச பயங்கரவாதமும் சிங்கள – பவுத்த மேலாண்மையும் அன்றி வேறொன்றும் இல்லை. இதனை அமைச்சர் ஸ்டீபன் பிலானே புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா சிங்கள இனவாதமே பிரபாகரனை உருவாக்கியது எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்போதும் வி.புலிகளை பயங்கரவாதிகள் என்று கனடிய அரசு சொல்லிக் கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. வி.புலிகள் தங்களது ஆயுதங்களை மே 18 இல் மவுனித்துவிட்டார்கள். தமிழ்மக்கள் இப்போது அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வி.புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது தேவையற்றது.

ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் விடுதலை இயக்கத்தையும் பிரித்துக் காட்டுவது மக்கள் ஆதரவே. வி.புலிகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அமைச்சரின் கண்களுக்கு பயங்கரவாதிகள் ஆகத் தெரிபவர்கள் எங்கள் கண்களுக்கு மண்ணின் விடுதலைக்குப் போராடி மரணித்த மாவீரர்களாகத் தெரிகிறார்கள். அழகு, பார்ப்பவர் கண்களைப் (Beauty is in the eyes of the beholder) பொறுத்தது என்பார்கள். உலக வரலாற்றில் ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் எனத் தூற்றப்பட்டவர்கள் பின்னாளில் விடுதலை வீரர்களாகப் போற்றப் பட்டுள்ளார்கள். யோர்ஜ் வோஷிங்டன் தொடங்கி நெல்சன் மண்டேலா வரை நீண்ட பட்டியல் உண்டு.

நஷ்னல் போஸ்ட் ஒரு வலதுசாரி நாளேடு. ஆளும் பழமைவாதக் கட்சியையும் அதன் ஆட்சியையும் ஆதரிக்கிற நாளேடு. கனடாவில் வி.புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டு பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு இந்த ஏட்டின் பங்களிப்பு அளப்பரியது.

மே 06, 2000 அன்று FACT அமைப்பு அப்போது நிதி அமைச்சராக இருந்த போல் மாட்டினுக்கும் பன்னாட்டு ஒத்துழைப்பு அமைச்சராக இருந்த மேரியா மின்னா அவர்களுக்கும் ஒரு இராவிருந்து அளித்தது. அதனை வைத்துக் கொண்டு போல் மாட்டின் பயங்கரவாதத்தோடு தொடர்புடைய அமைப்பு நடத்திய நிதி சேகரிப்பு இராவிருந்தில் கலந்து கொண்டார் என நஷ்னல் போஸ்ட் நாளேடும் அதன் நிருபர் ஸ்ருவேட் பெல் (Steward Bell) வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர். இதே நாளேட்டின் ஆசிரிய பீடம் பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வந்துவுடன் புலிகளைத் தடை செய்யக் கோரி அமைச்சர்களை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டது. இது ஊடக வரலாற்றில் புதுமையானது. வி. புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட போது பூரித்துப் போன இந்த ஏடு அதனைக் கொண்டாட வேண்டும் என தலையங்கம் தீட்டியது.

(http://www.nationalpost.com/news/story.html…)

இராதிகா சிற்சபைஈசன் போலவே நொவெம்பர் 27 ஈழத் தமிழர்கள் தங்களின் இறந்த உறவுகளை நினைவுகூரும் நாளென தெற்கு அவுஸ்திரேலிய வேல்ஸ் அதிகார சபையின் செனட்டர் லீ ரியானன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். தமிழர்களைப் பொறுத்தவரையில் நவம்பர் 27ம் நாளானது ஆழந்த கவலையோடும் மீளாத்துயரோடும் கடந்த 26 ஆண்டு கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளை நினைவுகூரும் ஒரு நாளென்றும் கடந்த காலங்களில் சிட்னியில் இடம்பெற்ற நொவெம்பர் 27 நிகழ்வுகளில் தான் கலந்து கொண்டதையும் நினைவுபடுத்திய செனட்டர் லீ ரியானன் 2009 ஆம் ஆண்டு நடந்த பாரிய யுத்தம் ஒரு மறையாத வடுவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தான் நாடாளுமன்றத்தில் இருப்பதால் தன்னால் இவ்வாண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது எனத் தெரிவித்தார். இருப்பினும் தனது பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் ஈழத்திலுள்ள தமிழர்களிற்காகவும் பல தேசங்களிற்குப் புலம்பெயர்ந்து அகதிநிலை கோரியுள்ள தமிழர்களிற்காவும் இருக்குமெனவும் தமிழர்கள் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் காத்திருக்கின்றார்கள். ஆதனை ஒரு நாள் உலகம் உணரும் எனவும் தெரிவித்தார்.

இன்று ஆட்சியிலுள்ள வலதுசாரி அரசு வி.புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னரும் அதனைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. இதனால் தமிழ்மக்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப் படுகிறார்கள். இந்த இடத்தில் லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த போது பலத்த அழுத்தங்களைப் பொருட்படுத்தாது வி.புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வி.புலிகளின் பெயர் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கு மட்டும் தமிழர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவார்கள். எம்வி சன் சீ கப்பலில் வந்த 492 தமிழ் அரசியல் ஏதிலிகள் தரை இறங்கு முன்னரே அவர்களை அமைச்சர்கள் “பயங்கரவாதிகள்” “புலிகள்” என விளித்து அலறியது நாம் அறிந்ததே. ஆனால் இவர்கள் மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் இல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளான காரணத்தால் உயிர் ஆபத்தையும் பாராது கடலில் நீண்ட நாட்கள் பயணம் செய்து கனடா வந்தவர்கள்.

இவர்களில் சிலர் பிணையில் வெளியில் விடப்பட்டுள்ளார்கள். இருந்தும் பெரும்பான்மை ஏதிலிகளை கனடிய அரசு தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. தடுப்பு மையங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை சிறைச்சாலைகளே. இவர்களை சாதாரண ஏதிலி கோரிக்கையாளர்கள் போல் நடத்தாது நீண்ட காலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. இப்படிச் செய்வது அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மாறானது. முந்திய காலங்களில் இவ்வாறு கப்பல்களில் வந்த ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.

வி.புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையை நீக்க இரண்டு முனைகளில் அணுகலாம். ஒன்று அரசியல் அடிப்படையில் கனடிய அரசை அணுகுவது. இரண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது.

நீதிமன்றத்துக்குப் போவதற்கு பெருந்தொகை பணம் வேண்டும். எனவே அரசியல் அணுகு முறைதான் நல்லது. இங்குள்ள தமிழ் அமைப்புக்கள், குறிப்பாக பழமைவாதக் கட்சியை ஆதரிக்கும் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட வி.புலிகளைத் தொடர்ந்து பயங்கரவாதப் பட்டியலில் போடுவது தவறு என்பதையும் இந்தத் தடையினால் எல்லாத் தமிழர்களுக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளையும் கனடிய வீரர்களை நினைவு கூரும் நாளையும் ஒப்பிட்டுப் பேசிய இராதிகா சிற்சபைஈசனின் துணிச்சல் பாராட்டத்தக்கது. இதன் மூலம் கனடிய தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லர் என்பதையும் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் ஆன எமது போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் – அகிம்சை வழியில் – வெவ்வேறு தளங்களில் தொடரும் என்பதை அவர் எண்பித்துக் காட்டியுள்ளார்.