தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தமது உயிர்களை துச்சமாக மதித்தது எட்ட முடியாது என எதிரிகளால் கணிக்கப்பட்ட இலக்குகளையும் உள்நுளைந்து தகர்த்தவர்களே கரும்புலிகள்.

 
துரோகிகளாளும் எதிரிகளாலும், அனைத்துலக சமூகத்தாலும், இந்திய அரசினாலும் பலவீனப்படுத்தப்பட்ட எமது விடுதலைப்போரின் பலமிக்க ஆயுதமாக விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டவர்களே கரும்புலிகள்.

 
இவ்வாறான மாவீரர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் தான் சிங்கள அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டு; இனவிடுதலையை கூறுபோடும் தமிழ் அரசியல்வாதிகளின் கூச்சல்களும் அதிகரித்துள்ளன.

 

தேர்தல்களோ அல்லது விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாட்களோ வரும்போது தான் இவர்களின் விடுதலை உணர்வுகள் கொப்பளிப்பதுண்டு.

 
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏமாற்றுத்தனங்களின் மத்தியில் தென்னிலங்கை சிங்கள பேரினவாதக் கட்சிகளின் முகவர்களாக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களும் தற்போது அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் விஐயகலா மகேஸ்வரனின் புலிச்சாயம்.

 
விடுதலைப்புலிகளை உருவாக்குவேன் என்று தமிழ் மக்களை ஏமாற்ற அவர்போட்ட கூச்சல்களுக்கு மத்தியில் நாம் கேட்கும் முதலாவது கேள்வி யார் இந்த விஐயகலா?
பெயரில் மட்டும் தமிழைக் கொண்ட இவர் சிங்கள் பேரினவாதக்கட்சியின் ஒரு பிரதிநிதி என்பதே ஒரு வரி பதில்.

 
தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பில் தென்னிலங்கையை தொடர்ந்து ஆட்சிபுரியும் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல. விஐயகலா அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே மிகப்பெரும் இனப்படுகொலைகளை மேற்கொண்ட கட்சியாகும். தென்னாசியப் பிராந்தியத்தின் அறிவுப் புதையலாகக் கருதப்பட்ட யாழ் நூலகத்தை தீயிட்ட கட்சியும், சிறீலங்காவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரும் இனக்கலவரங்களில் ஒன்றான 1983 ஆம் ஆண்டு கலவரத்தை மேற்கொண்ட கட்சியும் இந்தக் கட்சியே.

 
அதாவது இந்த கட்சிகள் தாம் மேற்கொண்ட இனப்படுகொலைகளை மறைப்பதற்காக தமிழ் மக்களின் மத்தியில் உருவாக்கிய தமிழ் பிரதிநிதியே அம்மையார். அவர் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்? தமிழ் மக்களின் விடுதலைக்காகவா? இல்லை தனது பதவி மோகம், பொருளாதார நாலன் அவ்வளவு தான்.

 
இதுவரை காலமும் சிங்கள அரசின் குகைக்குள் படுத்து உறங்கி உண்டு களித்த இந்த நரி தற்போது புலித்தோலை அணிந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் ஓடுவதன் மர்மம் என்ன?

 
வடமாகாணசபைத் தேர்தல் அண்மிக்கும் நேரத்தில் இவ்வாறான கூத்துக்கள் அரங்கேறுவதுண்டு, போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் அண்மிக்கும் நிலையில் கூட காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த தகவல்களையும் உறவினர்களால் பெறமுடியவில்லை, இந்தியாவும் சிறீலங்கா அரசும் மேற்கொண்ட இனஅழிப்பு போருக்கு உதவிகளை முன்னின்று வழங்கி பல ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்த அனைத்துலக சமூகமும் காணாமல் போனவர்களின் உறவினர்களை கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த விஐயகலாவுக்கும் அது கண்ணில் படவில்லை.
அது மட்டுமல்லாது விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி மக்களை கூட விடுவிப்பதற்கு கூட கலா அக்காவுக்கு நேரமில்லை.

 

போர் நிறைவடைந்ந பின்னரும் தமிழ் மக்களின் நிலங்களில் பல ஆயிரம் படையினர் நிலைகொண்டு அங்கு நிகழும் படுகொலைளுக்கும், வன்முறைகளுக்கும் மறைமுகமாக உதவி வருகின்றனர். இதுவும் சிங்கள இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக்கான நிகழ்ச்சி நிரலின் அடுத்த நகர்வு. ஆனால் சிங்கள படையினரை தமிழ்ப் பகுதிகளில் இருந்து அகற்றவோ குறைக்கவோ கலா அக்காவால் முடியாது.
ஆனால் இந்த குள்ள நரி தற்போது புலிச்சாயம் பூசியுள்ளது. எதற்குமே உதவாத தனது அமைச்சுப்பதவியை துறந்துள்ளதாக நாடகம் ஆடுகின்றது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் விக்கினேனஸ்வரன், மவை சேனாதிராஜா மற்றும் பல ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்த ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்களஸ் தேவானந்தா ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில் தென்னிலங்கையின் சிங்கள பேரினவாதக்கட்சியின் சார்பின் விஐயகலா களமிறங்கவுள்ளார்.

 
அதற்கு முனோட்டமான குறும்படமே தற்போது நாம் இங்கு காண்பது. அதாவது வடக்கு மாகாணசபையும் சிங்கள கட்சி வசம் சென்றால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏதிலிகளாக இடம்பெயர வேண்டிய நிலை ஒன்று உருவாகப்போகின்றது. ஆனால் அற்ப சுகத்திற்காக அலையும் இந்த மனிதர்களுக்கு எங்கே தெரியப்போகின்றது விடுதலையின் அருமை.

 
ஆனால் ஒன்றை மட்டும் கலா அக்க மறந்து விட்டர் தற்போது உள்ள சமூகவலைத்தளங்களின் தொழில்நுட்ப முன்னேற்றம் இவர்களின் நாடகங்களை இலகுவாக முறியடித்துவிடும் வல்லமை கொண்டது. தனக்கும் தனது கட்சிக்குமாக தனியான இணையத்தளத்தினை நடத்தி வரும் சிறீதரனினாலேயே கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தனது கட்சியை காப்பாற்ற முடியவில்லை.

 
போராளிகளின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதலையின் வீச்சு ஈழத்திலும் விரைவில் எதிரொலிக்கும்.

 
ஈழம் ஈ நியூஸ்