ஒரு நாட்டுக்குள் இரு இனங்கள் வாழ்வது என்பது இன்றைய சூழ்நிலையில் முற்று முழுதாக சாத்தியமற்றதாக மாற்றம் பெற்றுவருகின்றது. கொசோவோ, மொன்ரோநீக்ரோ மற்றும் தென்சூடானின் விடுதலை மட்டுமல்லாது, தற்போது ஈராக்கில் தோன்றியுள்ள நிலைக்கும் அதுவே அடிப்படைக் காரணம்.

ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்து தனது போரின் வெற்றியை அறிவித்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த நாட்டின் நிலை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு படை நடைவடிக்கையின் மூலம் ஈராக்கில் அமைதியை ஏற்படுத்தலாமா என மேற்குலகம் சிந்திக்கின்றது. ஆனால் அது மிகப்பெரும் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

iraq
இலகுவான தீர்வு ஒன்று தான் அது என்னவெனில் ஈராக்கில் புதிய மூன்று தேசங்களை உருவாக்குவதே சாத்தியமான தீர்வு. ஆனால் அங்கு தொடர்ந்து ஒரு உறுதியற்ற தன்மையை பேணவிரும்பும் வர்த்தக உலகம் சில சமயம் அதனை விரும்பப்போவதில்லை.

ஈராக்கில் இடம்பெறும் இந்த மோதல்களின்; நடுவே சிறீலங்கா விவகாரம் ஒரு திருப்பத்தைச் சந்தித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளையின் அயராத உழைப்பின் பயனாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சியின் விளைவாகவும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஓரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை ஐ.நா அமைப்பதற்கான பிரதான காரணம் சிறீலங்கா அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்வியாகும். அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசின் ஆணைக்குழுவின் தோல்வியை அனைத்துலக சமூகம் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதும் இதற்கான காரணம்.

எதிர்வரும் 10 மாதங்கள் தனத விசாரணைகளை மேற்கொள்ளும் இந்த குழு அதன் அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையானது தனது அடுத்த நகர்வை மேற்கொள்ளும்.

asma-un_jahangir
பல்துறை சார்ந்த 12 நிபுணர்களைக்கொண்ட இந்த குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் மிகவும் தரம்வாய்ந்த அதிகாரிகள் என்;பதே சிறீலங்கா அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழுவின் ஆலோசகரான பின்லாந்தின் முன்னால் அரச தலைவர் மாட்டி அறிசாரி கொசோவோ பிரச்சனையில் சிறப்பு பிரதிநிதியான செயற்பட்டவர். 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசினையும் பெற்றவர். தென்னாபிக்காவின் காலஞ்சென்ற அரச தலைவரும், விடுதலைவீரருமான நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட த எல்டேர்ஸ் அமைப்பின் உறுபினரான மாட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு தென்சூடானுக்கும் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

தேமி சில்வியா காட்ரைட் கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளின் போது ஐ.நா விசாரணைக்குழுவின் நீதிபதியான பணியாற்றியவர். 1975 ஆம் ஆண்டில் இருந்து 1979 ஆம் ஆண்டு வரையிலும் அங்கு இடம்பெற்ற போரில் 1.2 மில்லியன் மக்கள்; கொல்லப்பட்டிருந்தனர். பல குடும்பங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தன. இந்த அனர்த்தம் ஒரு இனப்படுகொலையாகவே கணிக்கப்பட்டிருந்தது. அஸ்மா ஜகங்கீர் பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் ஆவார்.

வழமைபோல சிறீலங்கா அரசு இந்த குழுவை நிராகரித்துள்ளது. சிறீலங்கா செல்வதற்கான அதுமதியையும் அது வழங்கப்பேவதில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே, தமது சாவுக்கான அழைப்பை அவர்களே அனுப்பப்போவதில்லை. ஆனாலும் இந்த குழுவின் நடவடிக்கைகளை தமது முழுவழங்களையும் பயன்படுத்தி சிறீலங்கா எதிர்க்கவும் செய்யும்.

அது மட்டுமல்லாது சிறீலங்காவுக்கு நேரிடையான ஆதரவுகளை வழங்கிவரும், பாகிஸ்த்தான், சீனா, ரஸ்யா மற்றும் மலேசியா போன்ற நாடுகளும், மறைமுகமாக ஆதரவுகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசு உட்பட பல ஆபிரிக்க, அரபு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் இந்த விசாரணைக்கான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தலாம்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இந்த விசாரணை தனது முழுமையான வினைத்திறனை அடையுமானாலே நாம் அடுத்த நகர்வுக்குள் காலெடுத்து வைக்கமுடியும்.

last_wor45
விசாரணைக்குழுவைப் பொறுத்தவரையில் சிறீலங்காவுக்கு சென்றுதான் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான போதுமான சாட்சியங்கள் உலகம் எங்கும் பரவி உள்ளன.

அதேபோல, இந்த போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் பல ஆவணங்களும் தரம்வாய்ந்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்போர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களை இங்கு குறிப்பிடலாம்.

அவர்களால் வெளியிடப்பட்ட பல ஆவணங்கள் உலகின் தரம்வாய்ந்த மற்றும் சுயாதீன அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா அரச படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான காணொளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரண்டாவது புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்களையும் தடவியல் நிபுணர் போராசிரியர் திரு டெரிக் பௌ;ண்டர் (Prof. Derrick Pounder) அது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறீலங்கா படையினர் மேற்கொண்டவை போர்க்குற்றங்கள் எனவும், அவை அனைத்துலக சட்டவிதிகளை மீறும் செயல் எனவும் மனித உரிமை வழக்கறிஞர் பேராசிரியர் வில்லியம் சேபாஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி சாம் சபாரியின் கருத்தும் சிறீலங்காவின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் கோல்ம்ஸ், பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான் எல்லோரினதும் கருத்தும் ஒன்று தான். அதாவது சிறீலங்கா அரசில் உள்ளவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்பது தான். அதனை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

எனவே போரின் போது சிறீலங்கா அரசு தெரிவித்த தகவல்கள் பொய்யானவை என உறுதிப்படுத்துவதுடன், அதன் மூலம் சிறீலங்கா ஒரு திட்டமிட்ட இனஅழிப்பை மேற்கொண்டுள்ளது என உறுதிப்படுத்துவது ஐ.நா விசாரணைக்குழுவுக்கு கடினமான இலக்காக இருக்காது.

எந்தவித தலையீடுகளும் இன்றி ஐ.நா அமைத்த குழு தனது பணியை செய்யுமாக இருந்தால் சிறீலங்கா அரசு தப்பிப்பிழைப்பது கடினம். இங்கு தலையீடுகள் என நான் தெரிவிப்பது பிராந்திய மற்றும் சிறீலங்கா அரசு நலன்சார் வல்லரசுகள் மற்றும் பிராந்திய வல்லரசுகள் ஆகும்.

இதற்குள் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளபோதும், கொள்கைவகுப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் உட்பட பல துறைகளில் உள்ள பெரும்பாலானவர்கள் பழைய தமிழர் விரோத சக்திகளே.

இதனை நான் மட்டும் இங்கு கூறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் கோல்ம்ஸ் கூட அதனைத் தான் அன்று கூறியிருந்தார். அதாவது ‘சிறீலங்காவில் இடம்பெற்ற போரை நிறுத்த பல தரப்பினர் முயன்றனர், ஆனால் தமிழ் மக்களை அதிகமாகக் கொண்ட இந்தியா அந்த போருக்கு ஆதரவு அளித்தது என்னை ஆச்சரியமடைய வைத்தது’ என அவர் தெரிவித்த கருத்தை கேட்டதில் இருந்து எந்த தமிழனுக்கு தான் இந்தியன் என்று சொல்ல அருவருப்பாகவே இருந்திருக்கும்.

எனவே எதிர்வரும் பத்து மாதங்களில் தமிழ் மக்களும், அமைப்புக்களும் ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. இந்த விசாரணைக்குழுவுக்கு ஆதரவாக முடிந்த அளவு அதிகமான நாடுகளை திருப்பவேண்டும். உலகெங்கும் பரந்து கிடக்கும் சாட்சியங்களை ஒருங்கிணைத்து விசாரணைக்குழுவின் பணிகளை இலகுவானதாகவும், உறுதியானதாகவும் மாற்றவேண்டும். இதன் ஊடாக சிறீலங்வில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக அறிவிக்கவேண்டும்.

அது தான் புதிய தேசத்திற்கான பாதையை திறக்கும். இது மிகவும் கடினமான பணி ஏனெனில் ஒன்று இதற்கு எதிராக சிறீலங்கா அரசு தனது முழுவளங்களையும் பயன்படுத்தும். இரண்டாவது தமிழ்த் தேசியம், தமிழ் மக்களின் இன்னல்கள் என்று கூவிக்கொண்டு மறைமுகமாக சிறீலங்காவுக்கு சார்பாக பணியாற்றும் அமைப்புக்களையும், ஊடகங்களையும், நபர்களையும் முறியடிக்கவேண்டும்.

அதாவது முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்கான போர் முடியவில்லை, ஒரு சமர் தான் அங்கு நிறைவடைந்திருந்தது. விடுதலைப்போரின் இன்னொரு சமரை எதிர்கொள்ள தமிழ் மக்கள் தயாராகவேண்டும்.

ஈழம் ஈ நியூஸ்இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.