ஐரோப்பா நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், 2009 க்கு பிறகு எந்த வித ஆயுத போராட்டத்திலும் விடுதலைப் புலிகள் ஈடுபடாத நிலையிலும் தமிழக அரசும் இந்திய அரசும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று வாதிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஈழத்தில் ஒரு இனத்தை முற்றிலும் அழித்து ஒழித்த சிங்கள இன வெறி அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சேவிற்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது. சிங்கள கடற்படை, ராணுவத்திடம் தொடர்ந்து கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்தியா.

ltte-ban
இது புறம் தமிழர்களை வஞ்சிப்பதாக இருக்க, தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிவிட்டு, இப்போது ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு இத்தனை ஆண்டுகள் பாடுபட்ட விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு வாதிடுவது தமிழர்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி வேலையாகும்.

தமிழக அரசு உலகத் தமிழர்களுக்கு ஆதரவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க தமிழக அரசு இதுவரை எந்த ஒரு உருப்படியான செயல்களிலும் ஈடுபடவில்லை. ஐ.நா. மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படி எதுவும் செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் புலிகள் மீதான தடையை நீக்கவாவது தமிழக அரசு பரிந்துரை செய்திருக்க வேண்டும். அதை செய்வதை விட்டுவிட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.