vidyaபுங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின் படுகொலைசெய்யப்பட்ட வித்தியாவின் இழப்பை ஒற்றையாக பார்க்க பலர் தலைப்படுகிறார்கள். இனஅழிப்பு அரசை நேரடியாகக் குற்றம் சாட்ட பலர் தயங்குவது அதிர்ச்சியாக இருக்கிறது.

 

சில வாரங்களுக்கு முன்பு இதே பாணியில் வன்னியில் சரண்யா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

 

அத்தோடு மே 18 இற்கு பிறகு நூற்றுக்கணக்கான இத்தைகய சம்பவங்கள் வெளியாக தெரிந்தும் தெரியாமலும் நடந்திருக்கின்றன. எங்களிடம் இதற்கான முழுமையான ஆவணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் இது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதி.

 

பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களை நாம் இழந்திருந்தாலும் தற்போதாவது தமிழ் சமூகம் விழித்துக்கொண்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடவேண்டியுள்ளது.

 

தமிழீழ நிழல் அரசின் காலத்தில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது காலாச்சார விழுமியங்களைப் பேணி சுதந்திரப் பறவைகளாக வாழ்ந்துவந்த காலம் ஒரு கனவாகிப் போய் இன்று எமது பெண்கள் சமுதாயமே இனவழிப்பின் ஒரு ஆயுதமாக பாலியல் வன்கொடுமைப் போருக்குள் அடக்கப்பட்டு வருகிறார்கள்.

 

போருக்கு பிந்திய சமூகத்தில் மனப்பிறழ்வுகளும் அதனால் உருக்கொள்ளும் உளவியற்சிக்கல்களும் பலதரப்பட்டவை. அதுவும் தோற்கடிக்கப்பட்டவர்கள் முற்று முழுதாக வெற்றி பெற்றவர்களின் ஆளுகைக்குள் தொடர்ந்து இருந்தால் எழும் உளவியற்படிநிலை சிதைவுகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.

 

சிறீலங்கா அரசும் இன அழிப்பு நோக்கில் திட்டமிட்டு செயற்படுத்தும் படிமுறைமுகள் ஒரு மனநோய் சமூகமாக தமிழினத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. கட்டமைக்கப்ட்ட இன அழிப்பின் மிக முக்கியமான படிமுறை இது. இந்த குற்றங்களின் பின்னணி இதுதான்.

 

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு முக்கிய கூறு தாம் அழிக்க நினைக்கும் இனத்தை ஒரு குற்ற சமூகமாக மாற்றுவது.

 

வித்தியாஇ சரண்யா படுகொலைகள் இந்த இன அழிப்பு கூறின் பக்க விளைவுகள்தான்.

 

போருக்கு பிந்திய சமூகத்தில் இன அழிப்பு நோக்கில் பொருண்மியஇ பண்பாட்டுஇ உளவியல் வாழ்வியல் நெருக்கடிகளை திட்டமிட்டு கடைப்பிடிக்கும் இன அழிப்பு அரசு இதை மேம்போக்காக மூடிமறைக்க கையிலெடுக்கும் ஒரு ஆயுதம்தான் ‘அபிவிருத்தி’ மற்றும் ‘நல்லிணக்கம்’.

 

இந்த வலைக்குள் வீழாத ஆட்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு இது பயங்கரமான ஆயுதம். அடிப்படை அபிலாசைகளும் இனம்இ மொழிஇ நிலம் பண்பாடு என்ற அடிப்படையிலான மீள் வாழ்வும் குடியேற்றமும் இல்லாமல் இந்த ‘அபிவிருத்தி’ யை இன அழிப்பு அரசு நடைமுறைப்படுத்த முனையும்போது வெளிப்பார்வைக்கு புனர்வாழ்வாக தோற்றமளிக்கும் அதே தருணத்தில் மறுவளமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தம்மை அறியாமல் சிக்கி கொள்கிறது அந்த இனம். விளைவாக அந்த இனத்திலிருந்து ஒரு குற்ற சமூகம் வெளித்தள்ளப்படும்.

 

தமிழீழத்தில் இன்று தினமும் கொலைகள்இ பாலியல் வல்லுறவுகள்இ கடத்தல்கள்இ கோஸ்டி மோதல்கள்இ திருட்டுக்கள் என்று நடக்கும் கூத்துக்கள் இதன் ஒரு பகுதிதான்.

 

தமிழர்களின் (புலிகள்) ஆட்சியில் குற்ற செயல்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன. போரின் வடுக்களை தவிர ஒரு மேன்மையான சமூக அமைப்பு இருந்தது. இன்று அது கலைக்கப்பட்டுவிட்டது.

 

தின்பதற்கு சோறில்லை. ஆனால் இன்று பாலியல் உணர்வை தூண்டவும் அதை போக்கவும் வழி திறந்து விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு. விளைவாக காதல் என்ற பெயரில் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களும் அது மறுக்கப்படும் போது அதை வன்முறைரீதியாக எதிர்கொள்ளுமளவிற்கு ஒழுங்கற்ற சூழலையும் திட்டமிட்டு உருவாக்கி விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு.

 

பாலியல் உணர்வு குறித்தஇ பாலியல் கல்வி குறித்த போதிய புரிதல் இல்லாத சமூகத்தில் – அதுவும் இன அழிப்பை சந்தித்த – சந்தித்துகொண்டிருக்கிற ஒரு இனத்தில் பாலியல் உணர்வை தூண்டும் அதை பகிரங்கமாக காட்சிபடுத்தும் ஒரு சமூக அமைப்பு உருவாவது ஆரோக்கியமானதல்ல. அது புங்குடுதீவு குற்றவாளிகளைத்தான் சமூகத்தில் உருவாக்கும்.

 

இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் பட்டங்கள் திருடன் கொலைகாரன் ஏனென்றால் இதைத்தான் இன அழிப்பு அரசு விரும்புகிறது. இந்த நிலைகளை திட்டமிட்டே உருவாக்கியதே இன அழிப்பு அரசுதானே! இதற்கு பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு. இப்போது நடக்கிற எந்த கூத்திற்கும் பெயர் புனர்வாழ்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. நல்லிணக்கமும் இல்லை.

 

அப்பட்டமான இன அழிப்பு.

 

வித்தியா மற்றும் சரண்யா போன்றவர்களின் படுகொலைகளை இனஅழிப்பு என்ற கண்ணோட்டத்தில் நாம் அணுகி நீதியை தேடாவிட்டால் நாம் இன்னும் பல ‘வித்தியா’க்களை இழக்க நேரிடும்.

 

( பின்குறிப்பு : பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற அறம் கூட தெரியாத நமது தமிழ் உடகங்களின் அயோக்கியத்தனத்தை இந்த இடத்தில் வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது..இனியாவது திருந்துங்கள்.)