vidyaஅண்மையில் கூட்டு பாலியல் வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் இனஅழிப்பு அரசின் காவல்துறை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது.

 

இதற்கான அனுமதியை இனஅழிப்பு அரசின் நீதித்துறை வழங்கியிருக்கிறது. இதை இனஅழிப்பு அரசின் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

 

வித்யா படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதை இனஅழிப்பு அரசின் போக்கிற்கு உகந்ததாக – அதன் தந்திரங்களுக்கு வாகானதாக மாற நாம் அனுமதிக்க முடியாது.

 

ஒரு பாலியல் வல்லுறவு வழக்கிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகிக்கும் இனஅழிப்பு அரசின் தந்திரம் நீண்டகால நோக்கில் தமிழின அழிப்பை மையப்படுத்தியதென்பதை நாம் உணர வேண்டும்.

 

போர் முடிந்துவிட்டதாக இனஅழிப்பு அரசு அறிவித்து ஆறாண்டுகளாகியும் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பேணுவதே எம்மை தொடர்ந்து முடக்கும் நோக்கு கொண்டது. ‘பயங்கரவாதிகளை அழிப்பதாக’ கூறி சிங்களம் நடத்திய இனஅழிப்பிற்கு துணையாக நின்ற உள்ளக – வெளியக சக்திகள் யாருமே இந்த இடைப்பட்ட ஆறாண்டுகளில் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு இன்னும் சிங்களத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. எமக்குத்தான் எல்லோரும் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

வித்தியா படுகொலையில் எந்த அடிப்படையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பிரயோகிப்பதற்கான முகாந்திரம் இல்லை. இதை புரிந்து கொள்ள எந்த சட்ட அறிவும் தேவையில்லை. ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லே அயோக்கியத்தனமானது. மக்களின் போராட்டங்களை ஒடுக்க அரசுகள் கண்டுபிடித்த மோசடி வடிவம் இது. ‘அரச பயங்கரவாதம்’ குறித்து இங்கு யாரும் பேசத் தயாராயில்லை.

 

வித்தியா படுகொலை என்பது அரச பயங்கரவாதத்தின் பின்விளைவு. அதாவது இனஅழிப்பின் ஒரு பகுதி. எனவே வித்தியா படுகொலை விசாரிக்கப்படவேண்டியது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் இல்லை. அது இலங்கைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வெளியக விசாரணைக்குழு ஒன்றால் ‘இனஅழிப்பு’ விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.

 

அதைத்தான் நாம் கோர வேண்டும். ஏனென்றால் வித்தியா படுகொலை என்பது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதி. எம்மிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் 2009 மே இற்கு பிறகு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் 179 தமிழ் பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் – அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டு தம்மை அழித்திருக்கிறார்கள். இன்னும் பல நூறு பெண்கள் பல பாலியல் வல்லுறவுகளை சந்தித்து அல்லது வேறுவகையான தொந்தரவுக்குள்ளாகி தம்மை அழிக்க முற்பட்டு உயிர்பிழைத்து நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

 

போர் முடிந்ததாகக் கூறப்படும் குறிப்பான ஆறு ஆண்டுகளில் ஒரு இனக்குழுமத்தின் சனத்தொகை மற்றும் வாழ்வியல் சுட்டெண் அடிப்படையில் பார்க்கும்போது இவ்வளவு பெண்கள் பாதிக்கப்படுவதென்பது அப்பட்டமான இனஅழிப்புக் கூறுகளை மையமாகக்கொண்டதென்பதை தனியாக விளக்க வேறு வேண்டுமா?

 

தமிழீழ நடைமுறை அரசில் பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை என்பது அறவே ஒழிக்கப்பட்டிருந்தது. அதற்கான எந்த புறச்சூழலும் உருவாகாமல் புலிகள் தமது கட்டமைப்பை வளர்த்திருந்தார்கள். ஏனென்றால் அது தமிழர்களுக்கான அரசு – தமிழரசு.

 

அப்பட்டமான இனஅழிப்பு நோக்கங்களுடன் ஒரு போரை நடத்தி முடித்த அரசு எப்படி எமது பெண்கள் பாதுகாப்பாக வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தும்? அது எப்படி தமிழர்களுக்கான அரசாக இருக்க முடியும்? எனவே கட்டற்ற பாலியல் கலாச்சாரத்தையும் போதைபொருள் பாவனைகளையும் தமிழர் தேசத்திற்குள் கடத்துவதனூடாக ஒரு குற்ற சமூகத்தை சிங்களம் இனஅழிப்பு நோக்கங்களுடன் உருவாக்கிவிட்டிருக்கிறது. விளைவாக நாம் பல நூறு வித்தியாக்களை இழக்க வேண்டியுள்ளது.

 

இப்படி பெண்களை நுட்பமாக குறிவைப்பதென்பது ஆழமான இனஅழிப்பு நோக்கங்களை கொண்டதென்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

 

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு முக்கிய கூறு தாம் அழிக்க நினைக்கும் இனத்தை ஒரு குற்ற சமூகமாக மாற்றுவது.

 

இது குறித்து போருக்கு பின்னரான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து ஆய்வுளை மேற்கொண்டுவரும் பெண்ணிய உளவியலாளரான பரணிகிருஸ்ணரஜனி தனது ஆய்வு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

 

‘அடிப்படை அபிலாசைகளும் இனம், மொழி, நிலம் , பண்பாடு என்ற அடிப்படையிலான மீள் வாழ்வும் குடியேற்றமும் இல்லாமல் ‘அபிவிருத்தி’ யை இன அழிப்பு அரசு நடைமுறைப்படுத்த முனையும்போது வெளிப்பார்வைக்கு புனர்வாழ்வாக தோற்றமளிக்கும் அதே தருணத்தில் மறுவளமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தம்மை அறியாமல் சிக்கி கொள்கிறது அந்த இனம். விளைவாக அந்த இனத்திலிருந்து ஒரு குற்ற சமூகம் வெளித்தள்ளப்படும்.

 

தமிழீழத்தில் இன்று தினமும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கடத்தல்கள், கோஸ்டி மோதல்கள், திருட்டுக்கள் என்று நடக்கும் கூத்துக்கள் இதன் ஒரு பகுதிதான்.

 

தமிழர்களின் (புலிகள்) ஆட்சியில் குற்ற செயல்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன. போரின் வடுக்களை தவிர ஒரு மேன்மையான சமூக அமைப்பு இருந்தது. இன்று அது கலைக்கப்பட்டுவிட்டது.

 

தின்பதற்கு சோறில்லை. ஆனால் இன்று பாலியல் உணர்வை தூண்டவும் அதை போக்கவும் வழி திறந்து விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு. விளைவாக காதல் என்ற பெயரில் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களும் அது மறுக்கப்படும் போது அதை வன்முறைரீதியாக எதிர்கொள்ளுமளவிற்கு ஒழுங்கற்ற சூழலையும் திட்டமிட்டு உருவாக்கி விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு.

 

பாலியல் உணர்வு குறித்த, பாலியல் கல்வி குறித்த போதிய புரிதல் இல்லாத சமூகத்தில் – அதுவும் இன அழிப்பை சந்தித்த – சந்தித்துகொண்டிருக்கிற ஒரு இனத்தில் பாலியல் உணர்வை தூண்டும் அதை பகிரங்கமாக காட்சிபடுத்தும் ஒரு சமூக அமைப்பு உருவாவது ஆரோக்கியமானதல்ல. அது புங்குடுதீவு குற்றவாளிகளைத்தான் சமூகத்தில் உருவாக்கும்.’ என்கிறார்.

 

எனவே வித்தியா போன்ற பெண்களின் படுகொலைகள் இந்த இன அழிப்பு கூறின் பக்க விளைவுகள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

 

எனவே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய அரசிடமே நாம் நீதியை எதிர்பார்த்தால் இப்படித்தான் தமகு வாகாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து எம்மை தொடர்ந்து அடக்குவதற்கு வழி தேடும்.

 

உடனடியாக தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வேறு சிலர் உணர்ச்சி மிகுதியால் இந்த குற்றவாளிகளுக்கு ‘மரண தண்டனை’ வழங்கப்பட வேண்டும் என்று சிங்களத்திடம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.

 

உலகெங்கும் மரணதண்டனைக்கு எதிராக தார்மீக குரல்கள் எழுந்து வரும் சூழலில் நாம் அதைக் கோருவது தார்மீக ரீதியாக அறமில்லை என்பது மட்டுமல்ல இனஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனமாக நாம் அதை கோருவது சிங்களம் எம்மை அழிப்பதற்கு அதுவும் ஒரு பகடைக்காயாகவே மாறும் என்பதையும் உணர வேண்டும்.

 

வித்யா என்ற பெண்ணின் நீதிக்கான பயணம் அல்ல இது – பல்லாயிரக்கணக்கான வித்தியாக்களின் நீதிக்கான பயணம் இது.

 

‘வித்யா’ க்கள் படுகொலைகளிற்காக இனஅழிப்பு விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய ஒரு அரசு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பாவித்து எம்மையே அடக்க நினைக்கும் தந்திரத்திற்கு இன்னும் எத்தனை நாட்களிற்கு நாங்கள் பலியாகப் போகிறோம்?

 

மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

ஈழம்ஈநியூஸ்.