‘நான் போராளி. அரசியல்வாதியல்ல. என்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க முடியாது : இந்த நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சியாளன் வேலுப்பிள்ளை பிரபாகரன்’.

 

Tamilchelஜோர்ஜ் ஓவல் எழுதிய – இன்றளவும் உலகளவில் மிகச்சிறந்த அரசியல் விமர்சன நாவலாகக் கருதப்படுவதுதான் ‘விலங்குப்பண்ணை’. லெனினுக்கு பின்னரான சோவியத் ஒன்றிய ஆட்சியை பொறுப்பெடுத்த ஸ்டாலினுக்கும் ட்ரொஸ்கிக்கும் இடையில் நிலவிய அதிகாரப்போட்டியை விமர்சிக்க எழுதப்பட்ட நாவலாகவே விமர்சகர்களால் விலங்குப்பண்ணை கருதப்படுகிறது. பன்றி என்ற விலங்கை உத்தியாக வைத்து பாத்திரங்களை உருவாக்கி மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்ட அரசியல் இறுதியில் அதிகார போதையால் படிப்படியாக சர்வாதிகார ஆட்சி ஒன்றாக மாறிவிடுவதையும் இறுதியில் போல்ஸ்விக்குகளுக்கும் அவர்களால் அதிகாரம் இழக்கப்பட்ட முதலாளி வாக்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடுவதையும் மிக நுட்பமாக அந்த நாவலில் விபரணம் செய்திருப்பார் ஜோர்ஜ் ஓவல்.

 

ஜோர்ஜ் ஓவலின் ‘விலங்குப்பண்ணை’ முடிவைப்போலவே தற்போது தமிழீழ அரசியல்வாதிகள் காட்சியளிக்கிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்றான் ஒரு அறிஞன். அந்த சாக்கடையில் தமிழ் அரசியல்வாதிகள் கட்டி புரண்டு அதிகார போதை உந்தித் தள்ள, இனஅழிப்புக்குள்ளான – உள்ளாகிக்கொண்டிருக்கும் மக்கள் பிரச்சினைகளை மறந்து விட்டு ‘விலங்குப்பண்ணை’ யாக தமிழ் அரசியல்பரப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

 

‘விலங்குப்பண்ணை’ நாவலில் ‘எல்Nலாரும் சமம்’ என்று சொல்லி எழுதப்பட்ட ஆரம்ப கட்டளைகள் மாற்றப்பட்டு “எல்Nலாரும் சமம், அதில் சிலர் கூடுதலாக சமமானவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டு விலங்குப்பண்ணை பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது. பன்றிகள் மனிதர்களைப் போல மாறி ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பெருங்கனவோடு ஆரம்பித்த புரட்சி சிலரின் அதிகார சுகத்துக்கான வடிகாலாக போவதோடு நாவல் முடிகிறது.

 

இங்கு தமிழீழத்தில் பன்றியின் பாத்திரத்தை தமதாக்கிக் கொன்ன தமிழரசுக்கட்சிக்கும் ( கவனிக்கவும் கூட்டமைப்பு அல்ல ) தமிழ்த்தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு போட்டி நடக்கிறதா என்ற கேள்வியை தமிழ் மக்கள் தமக்குள்ளாகவே கேட்கத் தொடங்கியிருப்பது உண்மையிலேயே துயரமானது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புரட்சியாளனின்; தலைமையில் நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் ‘விலங்குப்பண்ணை’ நாவலின் முடிவைப் போல் ஒரு சிலரின் அதிகார – பதவி சுகத்திற்கான வடிகாலாக போவதுடன் முடிவடையப் போகிறதா?

 

நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.

 

2009 இனஅழிப்புக்கு பிறகு இந்த உண்மை இன்னும் ஆழமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அரசியலுக்குள் மக்களை இழுத்து சென்று நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க முற்படுகிறது இந்த கும்பல்கள்.

 

தேர்தலை பறக்கணிப்பதற்கும், பங்கெடுப்பதற்கும் தமக்கென்று சில நியாயங்களை உருவாக்கிக் கொண்டு பதவி கதிரைகளை நோக்கி நகர முற்படுகிறார்களளே ஒழிய மக்களுக்கான அரசியலை வென்றெடுக்க இங்கு யாரும் தயாராக இல்லை.

 

புலிகள் மிகத் தெளிவான அரசியலை எமக்காக விட்டு சென்றிருக்கிறார்கள். என்றைக்குமே சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தலில் தாம் பங்கெடுப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள் புலிகள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்திய படை வெளியேற்றத்தையடுத்து புலிகள் தேர்தல் அரசியலுக்குள் வரவேண்டும் என்ற ஒரு ஆலோசனை பல தரப்பாலும் முன்வைக்கபப்ட்டபோதும் தலைவர் அதை நிராகரித்தார். ஆனால் கொள்கையளவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக மாத்தையை தலைமையில் ‘விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி’ என்ற ஒரு உதிரி அமைப்பை உருவாக்கினார்.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்போ தானோ நேரடியாக தேர்தல் அரசியலுக்குள் வந்துவிடக்கூடாது என்ற தெளிவான வரலாற்று புரிதலுடன் தலைவர் பிரபாகரன் இயங்கியதற்கு ஒரு உதாரணம் இது. பின்னாளில் அந்த அமைப்பையும் அவர் கலைத்தது வரலாறு.

 

இந்த அடிப்படையில்தான் 2001 இல் புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து தமிழர் தரப்பு தேர்தல் அரசியலுக்குள் செல்ல வேண்டிய ஒரு இக்கட்டான புற சூழல் உருவானபோதும் தாம் நேரடியாகப் பங்கெடுக்காமல் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பை’ உருவாக்கி அதை பங்கெடுக்க வைத்தார். அப்போதும் புலிகள் அமைப்பிலிருந்து ஒரு கடைநிலைப்போராளி கூட கூட்டமைப்பில் ஒரு அங்கமாக மாறாது பார்த்துக் கொண்டார். ஏனென்றால் அவர் வெற்றி தோல்விகளைத் தாண்டி எப்போதும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார். அதற்கு இறுதியும் உறுதியுமான சாட்சியாக ‘மே 18′ நம்முன் கிடக்கிறது.

 

2009 மே 16 அன்று கடைசி நேர சந்தர்ப்பமாக பிராந்திய மற்றும் மேற்குலக சதியின் ஒரு தீர்வுத்திட்டமாக ஒரு தீர்வு முன்மொழியப்பட்ட போது அவர் கூறிய வாசகம் தான் இன்று அவரை இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளனாக வரலாற்றில் நிறுத்தியிருக்கிறது. அதுதான் நாம் மேலே குறிப்பிட்டிருக்கிற கூற்று.. ”நான் போராளி. அரசியல்வாதியல்ல. என்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க முடியாது’

 

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? அவர் கடைசியாக எந்த அறிக்கையையும் ஏன் வெளியிடவில்லை? என்று பலர் குழம்பித் தவிக்கிறார்கள். ஆனால் அவர் இந்த ஒற்றை வாசகத்திலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல.. போராடும் அனைத்து இனங்களுக்குமான ஒரு வரி செய்தி அது. தேர்தல்களாலும், அரசியல்வாதிகளாலும் எந்த இனமும் விடுதலை அடைய முடியாது என்பதே அதன் அடிநாதமான செய்தி. போராடுவதொன்றே விடுதலைக்கான அடிப்படை என்பது அதன் அடுத்த செய்தி.

 

பிரபாகரன் என்பது ஒரு பெயர் அல்ல. இந்த இனத்தின் அரசியல் உள்ளடக்கம் அது. அது ஒரு குறியீடு. இந்த இனத்தின் அரசியல் வழிகாட்டி அது. இப்படி அடுக்கிக் கொண்டேயிருக்கலாம்.

 

எனவே மே18 செய்தியின் கனதியை கவனமாக உள்வாங்கி தேர்தல் அரசியல் மாயைக்குள் இருந்து மக்களை மீட்டெடுத்து மக்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைக்க வேண்டிய அரசியல்வாதிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் பதவி கதிரைகளுக்காக போராட்டத்தையும் வரலாற்றையும் மடைமாற்றுவது அதியுச்ச துரோகமாகவே வரலாற்றில் பதிவாகிறது.

 

நாம் நிறைய பேச விரும்பவில்லை. புலிகள் தாங்கள் பங்கெடுக்கவிட்டாலும் புறச்சூழலின் நெருக்கடிகளையும் அதன் விளைவுகளையும் முன்னுணர்ந்து தேர்தல் அரசியலுக்கு வழிவிட்டு சில சமயங்களில் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அதன் விளைவாக பிறந்ததுதான் ‘தமிழத் தேசிய கூட்டமைப்பு’

 

மே 18 இற்கு பிறகும் புலிகள் ஒரு ஆளுகை செலுத்தும் சக்தியாக இருந்திருப்பார்கள் என்றால் எப்போதோ கூட்டமைப்பை கலைத்திருப்பார்கள் என்பதே யதார்த்தம். இப்போது புலிகளின் பாத்திரத்தை மக்கள் ஏற்றுள்ளார்கள். அரசியல்வா(வியா)திகள் மிகத் தெளிவாக புரிய வேண்டிய செய்தி இது. தேர்தல் அரசியலுக்கு புலிகள் சில தருணங்களில் வழி விட்டது போல் தமக்கான ஒரு மக்கள் – போராளித் தலைமையை மீள அடையாளம் காணும்வரை ஒரு தற்காலிக பாத்திரமாக தமிழ் அரசியல்வாதிகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது நிரந்தரமான பதவி இல்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

மக்கள் தமிழரசுக்கட்சிக்கோ, தமிழத்தேசிய முன்னணிக்கோ அல்லது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு எந்த கட்சிகளுக்கோ தனித்த எந்த அங்கீகாரத்தையும் வழங்கிவிடவில்லை – இனியும் வரலாற்றில் அதை வழங்கப்போவதும் இல்லை.

 

கள யதார்த்தத்தை உணர்ந்து ஒரு தற்காலிக பாத்திரமாக ஒரு அரசியல் அமைப்பின் அவசியம் கருதி ஒரு ‘கூட்டு’ அமைப்பிற்கே தமது அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் நின்று பிடிக்கும் மர்மம் இதுதான்.

 

ஆனால் இந்த புரிதல் இல்லாததன் விளைவுதான் அரசியல்வா(வியா)திகள் தமிழ் அரசியல்பரப்பை ‘விலங்குபண்ணை’யாக்க முற்பட்டுகொண்டிருக்கிறார்கள்.

 

தமிழ் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை நிறையவே பட்டியலிடலாம் என்றபோதும் அண்மைய ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் இந்த விபரீத சூழலை விளங்கிக் கொள்வோம்.

 

கடந்த வாரம் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை நிகழ்த்த இனக்கொலையாளி சந்திரிக்காவை தமிழரசுக்கட்சி அழைத்திருந்தது. தமிழரசுக்கட்சியின் தொடர் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு ‘அயோக்கியத்தனம், மொள்ளமாறித்தனம்’ என்ற சொல்லாடல்களை பாவித்து நாம் எம்மையும் எமது எழுத்துக்களையும் தரம் தாழ்த்திக்கொண்டதுதான் மிச்சம். ஆனால் சம்பந்தர் குழு அலட்டிக்கொள்வதேயில்லை எனபது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

 

இந்த இனம் தமது விடுதலை குறித்து கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் வாழ்ந்த பொற்காலம்தான் புலிகளின் ஆட்சிக்காலம். இதை எதிரிகளே ஏற்றுக்கொள்வார்கள்.

 

மக்களினதும் புலிகளினதும் உளவியல் அலைவரிசை சீராக பயணித்த ஒரு அற்புதமான காலகட்டம் அது.

 

புலிகளின் ஆட்சிக்கு முன்பும் சரி மே 18 இற்கு பின்பும் சரி இனி வரப்போகும் காலங்களிலும் சரி அத்தகைய போக்கு இனி இருக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

 

மக்களும் தற்போது இந்த யதார்த்தத்தை உணர்ந்து எந்த பேராசையும் கொள்ளவில்லை. ஆனால் ஒரு 10 விழுக்காடாவது, தமது உளவியல் போக்கை உணர்ந்து அரசியல் செய்வார்கள் என்று நம்பியே கூட்டமைப்பை பின்தொடருகிறார்கள். ஆனால் கூட்டமைப்பு மக்களின் போக்கில் இயங்காவிட்டாலும் பரவாயில்லை வரலாற்றை பின்னோக்கி இழுக்கவும் எதிரிகளினதும் அந்நிய சக்திகளினது நிகழ்ச்சி நிரலிற்கு ஏதுவாகவும் இயங்குவது மட்டுமல்ல மக்களின் உளவியலை ஊனப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.

 

“தமக்கு தீர்வு எடுத்து தராவிட்டாலும் பரவாயில்லை தமது தற்காலிக வாழ்வுக்கான உரிமைகளையாவது இனஅழிப்பு அரசிடமிருந்து பெற்றுத் தருவார்கள் என்று நம்பிய ஒரு தலைமை தம்மை அழிப்பதையே குறியாகக் கொண்டு செயற்படுகிறதோ?என்று தற்போது மக்கள் அஞ்சத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் தமிழரசுக்கட்சி இனக்கொலையாளி ‘செம்மணி’ புகழ் சந்திரிக்காவை அழைத்து தந்தை செல்வா நினைவு பேருரையை நிகழ்த்தியதை மக்கள் பார்க்கிறார்கள்.

 

நாம் அதிகமாக உள்ளே செல்ல வேண்டாம். மக்களையும் விடுவோம். நடந்த இனப்படுகொலைகளையும் விடுவோம். கருத்தியல் ரீதியாக கொள்கையளவில் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்த சந்திரிகா பொருத்தமானவர்தானா? இந்த கோணத்தில் நாம் இந்த பிரச்சினையை ஆராய்வோம்.

 

தந்தை செல்வா என்பவர் யார்? சிங்கள இனவாத முகங்கள் அனைத்தையும் நேரடியாகப் பார்த்து வெறுத்துப்போய் ‘தனித் தமிழீழம்’ தான் ஒரே தீர்வு என்று முன்மொழிந்தது மட்டுமல்ல ஆயுதப்பேராட்டத்தின் அவசியத்தையும் அடையாளம் காட்டியவர். எனவே அவரது நினைவுப் பேருரையை நிகழ்த்த தந்தை செல்வாவின் அரசியல் செய்தியின்; உள்ளடக்கத்தை விபரணம் செய்யக்கூடியவரும், அதன் அடுத்த கட்ட பரிமாணத்தை சமகாலத்தில் பொருத்தி வைத்து மக்களிடமும் அனைத்துலக சமூகத்திடமும் கடத்தக்கூடிய ஒருவராகவே இருக்க வேண்டும். அல்லது கொள்கையளவில் குறைந்தபட்சமேனும் தந்தை செல்வாவின் அரசியலோடு ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைபவராகவேனும் இருக்க வேண்டும்.

 

உலகெங்கும் நினைவு பேருரைகளை நிகழ்த்த இந்த அடிப்படையில்தான் கட்சிகள்,அமைப்புக்கள், நிறுவனங்கள் பேச்சாளர்களை தெரிவு செய்கிறார்கள்.

 

ஆனால் இங்கு சந்திரிகாவை எந்த அடிப்படையில் தெரிவு செய்தார்கள் என்பதை தமிழரசுக்கட்சிதான் விளக்க வேண்டும். சந்திரிகா தந்தை செல்வாவின் அனைத்து சித்தாந்தங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானவர் என்பது மட்டுமல்ல தமிழ் மக்களை இனஅழிப்பு செய்த ஒரு சிங்கள பிரதிநிதி. தந்தை செல்வாவின் நினைவு பேருரையை நிகழத்த எந்த அடிப்படையிலும் தகுதி இல்லாத, பொருத்தமில்லாத நபர் சந்திரிகா. ஆனால் சம்பந்தர் கும்பலுக்கு இதை யார் சொல்வது?

 

இங்கு சந்திரிகாவை பேச அழைத்ததனூடாக இனஅழிப்புக்கு வெள்ளையடித்துள்ளதுடன் தந்தை செல்வாவின் அரசியலை குழி தோண்டிப் புதைத்துள்ளதை nவிளப்படையாகவே பறைசாற்றியது மட்டுமல்ல தமது அரசியல் பாதை எதுவென்பதை தமிழ் மக்களுக்கும் தெளிவாக அடையாளம் காட்டியள்ளது தமிழரசுக்கட்சி.

 

இவையெல்லாவற்றையும் விட கொடுமை சந்திரிகா பேசிய தலைப்புpன் உள்ளடக்கம். ‘ பயங்கரவாதத்தை தோற்கடித்து போரை வென்றுள்ளோம். ஆனால் சமாதானத்தை வெல்லவில்லை’ என்கிறார் சந்திரிகா. நடந்ததற்க பெயர் போரா? பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டார்களா? நடந்தது அப்பட்டமான இனஅழிப்பு. அதை இந்த உலகிற்கு மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய ஒரு கட்சி இனக்கொலையாளிகளை பேச அழைத்து நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடித்து வரலாற்றை கண்முன்னே குழிதோண்டிப்புதைக்கிறது.

 

கடந்த தடவை கூட தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்த சிங்கள தேச ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன வை அழைத்திருந்தது தமிழரசுக்கட்சி. அவர் தன்பங்கிற்கு புலிகள் மீது குற்றத்தை சுமத்தி வரலாற்றை திரித்து விட்டு சென்றிருந்தார்.

 

அரச பயங்கரவாதத்திற்கெதிரான விடுதலைப்போராட்டம், புரட்சிகர வன்முறை, மக்கள் போராட்டம் குறித்த எந்த வித புரிதலுமின்றி ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்களை பயங்கரவாத அரசுகள் சர்வதேச உறவுகள்இ பிராந்திய பூகோள நலன்கள் என்ற வகைமைக்குள் பொருத்தி எப்படி அழித்தொழித்து வருகின்றன என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் தமிழர்களின் போராட்ட சக்திகளான புலிகளின் அழிப்பை நியாயப்படுத்தும் ஆட்களை அழைத்து வரும் தமிழரசுகட்சியின் அரசியல்தான் என்ன?

 

தந்தை செல்வாவின் அரசியலோடு முரண்பாடுகளோடு தன்னும் உடன்படும் ஒருவரை, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த புரிதல் உள்ள ஒருவரை, நடந்தது இனஅழிப்புத்தான் என்ற புரிதல் உள்ள ஒருவரை பேச அழைப்பதுதான் அறம் என்பது மட்டுமல்ல தர்க்கரீதியாக சரியானதும்கூட..

 

ஆனால் இங்கு நடப்பது என்ன?

 

சரி தமிழரசுக்கட்சிதான் இப்படி வரலாற்றை திரித்து புரட்டு வெலைகளில் இறங்கியிருக்கிறது அதற்கு மாற்று என்று சொல்லப்பட்ட தமிழத்தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை திரட்டலாம் என்று பார்த்தால் அவர்கள் தமிழரசுக்கட்சிக்கு தாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து வருகிறார்கள்.

 

அவர்களையும் ஒரு நினைவுப் பேருரையை வைத்தே அம்பலப்படுத்தலாம்.

 

இப்படித்தான் கடந்த வருடம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரையை நிகழ்த்த புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியான நிலாந்தனை தெரிவு செய்து மேடையேற்றினார்கள். அறம் சார்ந்தும், தர்க்க அடிப்படையிலும் இது சரியான தேர்வு அல்ல மிக மோசமான கொள்கைச் சரிவை உங்கள் சட்சிக்கு ஏற்படுத்தப்போகிறது என்று பல தரப்பாலும் எச்சரித்தும் அதற்கு இடமளிக்காமல் வரலாற்று புரட்டை செய்து முடித்தது ததேமமு.

 

சந்திரிகாவை தேர்வு செய்தற்க தமிழரசுக்கட்சியிடம் நாம் வைத்த மிக எளிமையான கேள்விகள் போன்றே ததேமமு யிடமும் வைத்தோம். இன்றுவரை பதிலில்லை. அவர்கள் பதில் தரமாட்டார்கள். மக்கள் விரோத அரசியல் செய்யப்புறப்பட்ட அரசியல்வாதிகளின் அடிப்படை குணம் அது. அதை மாற்றமுடியாது.

 

புலிகளுக்கு எதிரான போhக்குற்ற சாட்சிகளுடன் ததேமமு யினர் பெண் கொடுத்து பெண் எடுத்து சம்பந்தம் செய்து கொள்ளலாம். அவர்களை வீட்டுக்கு அழைத்து குமார் பொன்னம்பலத்தின் திதியையும் செய்து கொள்ளலாம். அல்லது தமது கட்சிகளில்கூட இணைத்துக் கொள்ளலாம். நாம் யாரும் அதை கேள்வி கேட்க முடியாது.

 

ஆனால் தமிழீழ அரசினால் மாமனிதராக கவுரவிக்கப்பபட்ட, அந்த கவுரவத்தை வழங்கிய புலிகளின் போராட்ட வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட ஒரு வழிகாட்டியான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை ‘புலிகள் மக்களை சுட்டார்கள், பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்கள், பிரபாகரன் பாசிஸ்ட், அவரது அதிகார போதையால்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள்’ என்று வரலாற்று புரட்டு செய்தது மட்டுமல்ல அதை ஒரு இயக்கமாவே முன்னெடுத்த ஒரு நபரை அழைத்து பேச வைத்தது தாக்கரீதியாக சரியானதுதானா? இது எத்தகைய அரசியல்? இதன் மூலம் மக்களுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

 

என்ன கொடுமை என்றால் தமிழரசுகட்சி சந்திரிகாவை அழைத்ததற்கு ததேமமு யினரும் அவர்களது பினாமிகளும் பொங்கி வழிந்திருப்பதுதான்.. வடிவேலுவின் மொழியில் இதைக் கேட்டால், ‘ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், மற்றவனுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?’

 

மிக எளிமையான கேள்விதான் எம்மிடம் இருக்கிறது. தந்தை செல்வாவின் அரசியலுக்கு முரணான அரசியல் பார்வை கொண்ட, தமிழின கொலையாளிகளில் ஒருவரான சந்திரிகா எப்படி தந்தை செல்வா நினைவப் பேருரையை நிகழ்த்தப் பொருத்தமற்றவரோ.. அதே போன்றுதான் தமிழின அழிப்பை மறைத்து புலிகளை போhக்குற்றவாளிகள் என்று பறைசாற்றும் ஒருவர் புலிகளால் மாமனிதராக கவுரவிக்கப்பட்ட ஒருவரின் நினைவப் பேருரையை நிகழத்த முடியாது என்பதே..

 

விலங்குப் பண்ணையினஇ; பாத்திரங்களாக உருமாறிக்கொண்டிரக்கும் தமிழரசுக்கடசியிடமும் ததேமமு யிடமும் இதற்கான பதில்கள் எப்போதும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை.

 

ததேமமு தமது அரசியல் வங்குரோத்துதனத்தின் காரணமாகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. பதவி காய்ச்சல் புலி எதிர்ப்பில் கொண்டே முடித்திருக்கிறது. பதவி கதிரைகளுக்காக தடம்மாறி “புலீ நீக்கம்” செய்யும் அரசியலை ததேமமு செய்வதாக அரசல் புரசலாக உலாவிய செய்திகளை தற்போது தினம் தினம் உறுதிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

புலிகள் போர்க்குற்றவாளிகள், மனித உரிமைகளை மீறினார்கள் என்று ஒரு புறமும் மறுபுறம் தேர்தல் நேரங்களில் புலிகளை “மாவீரர்கள்’ என்றும் புகழ்பாடி இரட்டை அரசியல் செய்துவரும் கூட்டமைப்புக்கு மாற்றாக மாவீரர்களின் தியாகங்களிலிருந்து அவர்கள் வழி நின்று தம்மை கட்டியெழுப்பியிருப்பதாக சபதம் செய்து அரசியல் செய்ய புறப்பட்ட ததேமமு இப்போது மாவீரர்களையும் தலைவர் பிரபாகரனையும் வசைபாடும் கும்பல்கனை இணைத்து “புலி நீக்கம்” செய்யும் அரசியலில் இறங்கியிருக்கிறது.

 

இதற்குத்தானே கூட்டமைப்பு இருக்கிறது. இதற்கு ஏன் இன்னொரு கட்சி? கூட்டமைப்பிற்கான மாற்று என்று ததேமமு ஐ வேறு பிரித்து பார்க்கும் இடைவெளியாக இருந்த ஒரே ஒரு கோடு இதுதான். அதை ததேமமு தானே அழித்துவிட்டிருக்கிறது. இனி மக்கள் முன்போய் நிற்பதற்கான தார்மீக அறம்தான் என்ன? அதன் அரசியல்தான் என்ன?

 

உண்மையிலேயே இந்த இனம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இந்த கொடுமைகளையெல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு பிறகும் இந்த அரசியல் தலைமைகளை நம்புவது ஒரு இனத்தின் அரசியற் தற்கொலையாகவே இருக்க முடியும்.

 

மே 18 தமிழின அழிப்பின் பிற்பாடு புலிகளை களத்திலிருந்து அகற்றிய மேற்குலக -பிராந்திய சதி வலையமைப்பு அவர்களின் கடைசி எச்சங்களையும் அகற்றும் நோக்குடனேயே கூட்டமைப்பிலிருந்து புலிகளால் நியமிக்கப்பட்டவர்களையும் புலிகளின் அனுதாபிகளாக அடையாளம் காணப்பட்டவர்களையும் வெளியேற்ற வைத்தது.

 

இந்த புலிநீக்க அரசியல் சதிவலைக்கு எதிர்வினையாகவும் மாற்றாகவுமே ததேமமு தோற்றம் பெற்றது. தேர்தல் அரசியலில் உடன்பாடில்லாவிட்டாலும் மேற்படி நோக்கங்களுக்காகவே நாம் ததேமமு ஐ ஆதரித்து கடும் பிரச்சார போரை முடுக்கிவிட்டோம்.

 

ஆனால் காலமும் சூழலும் மனிதர்களையும் அமைப்புக்களையும் கொள்கை சரிவுக்குள் தள்ளும் என்ற பொதுவிதிக்கு ஏற்பாக ததேமமு தமது தோற்றத்தின் நோக்கத்தையே மறந்து அதற்கு எதிர்நிலை எடுத்திருப்பது துரதிஸ்டவசமானது. ததேமமு தற்போது புலிநீக்கம் செய்பவர்களாலும், புலி எதிர்ப்பாளர்களாலும் தன்னை மிக வேகமாக நிரப்பிக் கொண்டுவருகிறது.

 

மே 18 இற்கு பிறகு புலிநீக்க அரசியலை செய்ய புகுந்த மேற்குலக -பிராந்திய சதி வலையமைப்பு தற்போது மிச்சம் மிதியாகவுள்ள – செயற்திறனற்றிருந்தாலும் கொள்கையளவில் ஒரு பேசும் சக்தியாகவுள்ள கூட்டமைப்பை உடைக்க தலைப்பட்டுள்ளது. அதற்கு ஒரு கருவியாக ததேமமு என்ற குதிரையை தட்டிவிட்டிருக்கிறார்கள்.

 

ததேமமு ஐ அதன் தோற்றத்தை – அதன் அரசியல் உள்ளடக்கத்தை விமர்சித்தது மட்டுமல்ல அதை நிர்மூலம் செய்யும் சக்திகளாக அடையாளம் காணப்பட்ட சக்திகள் தற்போது ததேமமு காக வாக்கு வேட்டையில் குதித்துள்ளதன் பின்புலம் இதுதான். தம்மை ஒரு கருவியாக பாவித்து தமிழ்த்தேசிய அரசியலுக்கு முடிவுகட்டும் நகர்வுகன் நடப்பதை கூட புரியமுடியாமல் பதவி காய்ச்சலில் மயங்கிக் கிடக்கிறது ததேமமு. மிகவும் துயரம் நிறைந்த நிலை இது.

 

உதாரணத்திற்கு ஒரு சம்பவம். யதீந்திரா என்ற மே இற்கு பிறகு தீடீர் ஞானோதயம் பெற்ற ஒருத்தர் ததேமமு இன் அரசியலை மிக மோசமாக விமர்சித்து வந்தவர். சம்பந்தர் சொன்னால் தீக்குளிக்க கூட தயாராக உள்ளவர் போல் காட்சியளித்தவர். அவர் தற்போது ‘கூட்டமைப்பை உடைக்காமல் சாகமாட்டேன்’ என்று சபதம் எடுக்காத குறை. அனேகமாக வரும் தேர்தலில் கஜேந்திரகுமார் தோற்றுபோனால் முதலாவது ஆளாக யதீந்திரா தீக்குளிப்பார் போல் தெரிகிறது.

 

TNPFஇவற்றையெல்லாம் பார்த்துவிட்டு நிலாந்தன் தொடக்கம் யதீந்திரா வரை பல “தீடீர் ” ஞானோதயக்காரர்களுக்கு split personality குறைபாடு என்றுதான் பலர் கருதுகிறார்கள். இப்படி தட்டையாக நாம் மதிப்பிடக்கூடாது. தமிழ்த்தேச அரசியலை நிர்மூலம் செய்ய அன்னிய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவர்கள் மாறி மாறி எடுக்கும் அவதாரங்கள் இவை.

 

தமிழின அழிப்பில் அமெரிக்க – சிங்கள வலையமைப்பின் மிக முக்கிய ஒரு பாத்திரமாக செயற்பட்ட நபர் வழுதி என்கிற பரந்தாமன். இவரை பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஆனால் ததேமமு யினருக்கு இவரின் முழு அகராதியும் தெரியும். இந்த வழுதியின் ஒரு பிம்பம்தான் யதீந்திரா.

 

வழுதி தற்போது கூட்டமைப்பை உடைக்கும் திருப்பணியில் மும்முரமாக இருக்கிறார். ஆட்சி மாற்ற அரசியலின் பின் எஞ்சியுள்ள தமிழ்த்தேச அரசியலை நிர்மூலம் செய்யும் பணியில் குதித்துள்ள மேற்குலக நிகழ்ச்சி நிரலின் விளைவாகவே வழுதி வகையறாக்கள் ததேமமு க்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு வேட்டையில் குதித்துள்ளார்கள்.

 

அத்தோடு கேபி என்னும் குமரன் பத்மநாதனின் வலையைமைப்பை சேர்ந்தவர்கள், அல்லது அவரின் அனுதாபிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் எல்லோரும் தற்போது ததேமமு க்கு வெளிப்படையாகவே ஆதரவு கரம் நீட்ட தொடங்கியிருக்கிறார்கள். அதை சமூகவலைத்தகளங்களில் வெளிப்படையாகவே பார்க்கலாம்

 

கடந்த தேர்தலின் ததேமமு யிடம் போது இல்லாத என்ன கொள்கையை தற்போது கண்டு இவர்கள் நெருங்குகிறார்கள் என்பது அந்த அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.

 

பதவி கண்ணை மறைக்க “எதிரிகள் ஏன் தம்மை நெருங்குகிறார்கள்?” என்ற கோணத்தில் ஒரு சிறிய பார்வையை தன்னும் செலுத்த முடியாமல் அவர்களுடன் தம்மை கொஞ்சிகுலாவ தயார்செய்கிறது ததேமமு. மிகப் பெரிய வரலாற்று பழியில் சிக்கப் போகிறோம் என்ற உண்மை இன்னும் ததேமமு க்கு உறைக்கவேயில்லை.

 

இந்த இடைவெளியில் முன்னாள் உதயன் ஆசிரியர் வித்தியாதரன் வேறு கூட்டமைப்பை உடைக்க மேற்படி வலையமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ளார். அதற்கு பலிக்கடாக்களாக சில முன்னாள் போராளிகளை தயார் செய்கிறது மேற்படி பிராந்திய – மேற்குலக சதி வலையமைப்பு.

 

தமிழர் தாயகமெங்கும் குடியேறியுள்ள சிங்கள, முஸ்லிம் குடியேற்றவாசிகள், மற்றும் ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்ற துரோக கும்பல்கள், ரணில் மற்றும் மகிந்தவின் நகர்வுகள் என்பதையும் தாண்டி வித்தியாதரன், மற்றும் ததேமமு யின் பிரவேசத்தினால் வடக்கு கிழ்க்கிலிருந்து தமிழர் தரப்பு தேர்தலில் போதிய ஆசனங்களை கைப்பற்றுவதென்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 

தமிழரசுக்கட்சி மற்றும் ததேமமு உடன் ஏனைய கட்சிகளும் இணைந்து மாணவர்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ள ஒரு ‘கூட்டு’ அமைப்பையே மக்கள் விரும்புகிறார்கள். அதுதான் சரியானதும் கூட. ஆனால் கெடு குடி சொல் கேட்குமா?

 

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் கட்சிகள் உட்பட ஆளாளக்கு 2 ஆசனங்களை கைப்பற்றுவதனூடாக தமிழ்த் தேசிய அரசியலே நிர்மூலம் செய்யப்படப்போகிறது. இதில் ததேமமு தான் தாங்களும் வெல்லாமல் பெரிய உடைப்பை ஏற்படுத்தப்போகிறது. இது தேவையா? ததேமமு முரண்பாடுகளையும் தாண்டி இது குறித்து சிந்திக்குமா ? என்பதே பலரின் அவாவாக இருக்கிறது.

 

ஆனால் எமது பார்வை இதில் வேறுபட்டேயிருக்கிறது. பிராந்திய – மேற்குலக சதியை புரிந்து கொள்ளாமல் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயே மோதி தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது “தேர்தல் அரசியலினாலும் அரசியல்வாதிகளினாலும் தமக்கு ஏதும் நடக்கப்போவதில்லை” என்ற இறுதி முடிவுக்கு மக்களை உந்தி தள்ளும். விளவாக மக்கள் போராட உந்தப்படுவார்கள். அது மக்கள் – மாணவர் புரட்சிக்கான அடித்தளமாக இருக்கும்.

 

அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களையும் நம்பி ஆயுதங்களை மவுனித்த போராளிகள் அடுத்த கட்ட நகர்வு குறித்து சிந்திக்க வழி பிறக்கும்.

 

எனவே தமிழ் அரசியல்வா(வியா)திகளின் இந்த ‘விலங்குப்பண்ணை’ விளையாட்டை நாம் இரசிக்கவே செய்கிறோம்.

 

ஈழம்ஈநியூஸ்.