putinதமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் முயற்சியில் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து, அதனை கொண்டு சிங்கள அரசையும் இந்தியாவின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவும், அதன் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் சபையும் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றியதற்கு கிடைத்த வெற்றியே நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் சாரமாகும்.

 

யூகோஸ்லாவாக்கியாவை வீழ்த்துவதற்கு இனஅழிப்பு என்ற பதத்தை கண்டறிந்து அதனை பயன்படுத்தி உலகத்தின் கண்களை மறைத்து யூகோஸ்லாவாக்கியாவை சிறிய துண்டுகளாக உடைத்த அமெரிக்காவுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் பொஸ்னியா சேர்பியாவை விட மிக மோசாமான படுகொலைகளை சந்தித்த தமிழ் மக்களின் இன்னல்களை இனப்டுகொலை என கூறுவதற்கு தயக்கமாக உள்ளது.

 

சிங்க அரசின் அரவணைப்புக்காக ஏங்கித் தவிக்கும் ஓபாமா அரசுக்கு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஒரு வழிதான் கலப்பு விசாரணை என்பது. அதாவது படுகொலைகளை செய்தவனும், பக்கத்து வீட்டுக்காரனும் இணைந்து விசாரணைகளை நடத்துவார்களாம்.

 

அந்த விசாரணைகளின் முடிவுக்காக இன்னும் பல பத்து ஆண்டுகள் தமிழ் இனம் காத்திருக்க வேண்டும். அந்த விசாரணைகளுக்கும் சிறீலங்கா அரசு பல தடைகளை கொண்டுவரும் அதனை தீர்ப்பதற்கும் பல வருடங்கள் உருண்டோடிவிடும். அதன் பின்னர் வரும் புதிய தலைமுறை தமிழீழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை மறந்துவிடுவார்கள். இது தான் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் திட்டம்.

 

கலப்பு விசாரணை என்பது தமிழ் மக்களுக்கு புதிதானது அல்ல. தற்போது பயன்படுத்தப்பட்ட சொல் மட்டுமே புதிது ஆனால் கலப்பு விசாரணை என்பது சிறீலங்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டே இடம்பெற்று தோல்வி கண்ட ஒரு பொறிமுறை என்பதை பலரும் மறந்திருப்பார்கள்.

 

2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மரின் தலைமையில் அனைத்துலக அவதானிப்பாளர்கள் குழுவின் துணையுடன் சிறீலங்கா அரசு 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைத்த அரச தலைவர் விசாரணைக்குழுவானது இடை நடுவில் காணாமல் போயிருந்தது.

 

தருஸ்மருக்கு கொடுப்பதாக பேசியிருந்த ஊதியப்பணத்தைக் கூட சிறீலங்கா அரசு கொடுக்காது அவரை துரத்திவிட்டதாக கொழும்பை தளமாகக் கொண்ட த சன்டே ரைம்ஸ் எழுதியிருந்தது.

 

அதனைப் போலவே சிறீலங்கா அரசினால் நியமிக்கப்படும் அரச சார்ப்பு நீதியாளர்களும், இந்தியாவினாலும், அமெரிக்காவினாலும் நியமிக்கப்படும் நீதியாளர்களும் தமிழ் இனத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு சேறடிக்கும் பணிகளையும், சிங்கள அரசுடன் இணைந்து செயற்பட்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது நிலையை உறுதிப்படுத்தும் பணிகளையும் திறம்படவே செய்வார்களே அல்லாது தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கான நீதியை நாம் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்ப முடியாது.

 

இதற்கு மற்றுமொரு சான்று என்னவெனில் தனது பணியாளர்களை வன்னிப் பகுதியில் இருந்து வெளியேற்றி சிங்களத்தின் இனஅழிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததே ஐக்கிய நாடுகள் சபை தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த இனஅழிப்பின் பிரதான குற்றாவாளி ஐ.நா தான்.

 

எனவே அமெரிக்கா மீதான தமிழ் மக்களின் சிறிதளவு நம்பிக்கையும் தற்போது தகர்ந்துபோயுள்ளது. ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு என்ற கொள்கை தோல்வியை தழுவியுள்ளது. எனவே விளாடீமிர் பூட்டினுக்கான தமிழர் அமைப்பு ஒன்றை ஆரம்பிப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயம்.

 

ஏனெனில் சிங்கள அரசும் காலம் காலமாக அதனை தான் மேற்கொள்கின்றது. சீனாவுடனான உறவுகளை பலப்படுத்தியே மேற்குலகத்தை தனது பக்கம் திருப்பியுள்ளது.

 

ஓட்டுமொத்த தமிழ் இனமும் தமது அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் சிந்திக்கவும், எதிரிகளை துல்லியமாக இனம்காணவும் வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை ஐ.நாவின் அறிக்கை எமக்கு வழங்கியுள்ளது.

 

ஈழம் ஈ நியூஸ்