வெடி விபத்துக்கும் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் எந்த விதமானத் தொடர்பும் கிடையாது

0
665

kudamkulam-09ikஅணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்
26.11.2013
ஊடகச்செய்தி

கூத்தங்குழி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தாது மணல் கம்பெனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு குழுக்கள் இயங்கி வருகின்றனர். அந்த ஊரைச் சார்ந்த மக்கள் பல கடலோர கிராமங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். பலர் இடிந்தகரை கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுனாமி காலனியில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் வசித்து வந்த ஒரு வீட்டில் இன்று (நவம்பர் 26, 2013) மாலை சுமார் 6:40 மணியளவில் பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் சிலர் இறந்திருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இந்த சம்பவத்துக்கும் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் எந்த விதமானத் தொடர்பும் கிடையாது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வில் இடிந்தகரை மக்களுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் இல்லை. எங்கள் போராட்டம் அறவழிப் போராட்டமாகவேத் தொடர்கிறது என்பதையும், வன்முறையில் எங்களுக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஏற்கெனவே கூத்தங்குழியில் தாது மணல் பிரச்சினையில் ஒரு குழு இன்னொரு குழுவைத் தாக்கி நடந்தத் தகராறில், புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதி மன்றம் புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று (நவம்பர் 25, 2013) உத்தரவிட்டது. இன்றைய நாளிதழ்களில் இந்த செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போராட்டக் குழு