இந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன்.

 

அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க.

 

எல்லாத்துக்கும் முதல்ல ஒரு கேள்வி. தமிழ்தேசியம்ன்னா என்ன?

 

இதுவரை சரியான வரையறை அற்று, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொல்லி, குழப்பி, குழம்பி… யப்பா…முடியல.

 

உண்மையிலேயே தமிழ்த்தேசியம் என்றால் தான் என்ன…?

 

மிக எளிமையான பதில்… தமிழர்கள் வாழும் தேசம் தமிழர் தேசம். தமிழர் தேசத்தின் அரசியல் தமிழ் தேசியம்.

 

ஆக, தமிழர் நாடு தானே தமிழ்நாடு…? இங்கே நடக்கும் அரசியல் தமிழ்த்தேசிய அரசியல் தானே..?

 

அது தான் இல்லை. இங்கே நடப்பது தமிழர் ஆட்சியும் இல்லை. தமிழர் ஆட்சியிலும் இல்லை.

 

இது எப்படி சாத்தியம் என தானே கேட்கிறீர்கள்…? அது தான் இங்கே பிரமாதம். திராவிட அரசியலின் வெற்றி.

 

நம்மை உளவியலாக பலமற்றவர்களாக மாற்றி, சாதி எனும் நஞ்சை ஆழமாக விதைத்து, பொருளாதார திறம் அற்றவர்களாக உருவாக்கி, நம்மை விட மற்ற இனத்தானுக்கு அறிவு அதிகம் என நம்பி, அடிமையாக இருப்பதையே பெருமையாக எண்ணி தமிழர்களை வாழப் பழக்கியவர்கள் இந்த திராவிடர்கள்.

 

தமிழர் நிலத்தில், தமிழ் தேசியம் என்ற வார்த்தையையே தீண்டத்தகாத வார்த்தையாக்கி நிறுத்தியது இவர்களின் மிகப்பெரிய வெற்றி.

 

நம்மை எல்லாம் சாதிவெறியர்கள் ஆக்கியது இவர்களின் மற்றுமொரு வரலாற்று சாதனை.

 

ஆமாம், நாம் உண்மையிலேயே சாதி வெறியர்கள் தானா என கேட்டால், இல்லை என்பேன். இங்கே இன்று வரை நடக்கும் அத்தனை சாதி, ஆணவ கொலைகளுக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என கேட்கலாம். என் பதில் என்பது, எல்லா கொடுமைகளுக்கும், கொலைகளுக்கும் காரணம் தேடி வேர் வரை பயணித்தால், வியந்து போவீர்கள். எல்லா நிகழ்வுகளிலும் மாற்று இனத்தவன் ஒருவன் உள்ளிருப்பான். அல்லது, அவனிடம் ஊழியம் செய்யும் நம்மினத்தான் ஒருவனை ஈடுபடுத்தி இருப்பான்.

 

நமக்கு சாதி்வெறி, மொழிவெறி, இனவெறி பாடமெடுக்கும் அவர்களை பின்தொடர்ந்து பாருங்கள். அவர்கள் நம்மைவிஞ்சிய சாதி, மொழி, இன வெறியர்கள். நமக்கு பாடமெடுக்கும் ஒரு இந்திக்காரனிடம் நீ எல்லா இந்திகாரர்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறாயா என கேளுங்களேன். தெறித்து ஓடுவான். அவர்களின் சாதி வெறியில் துளிகூட நாம் இல்லை என்பதே உண்மை. நம்மினத்திலிருந்து எவர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை ஒரு சாதியில் அடைத்து, 5-10 சீட்டுகளுக்கு இவர்களின் தலைமைகளுக்கு கீழ் நிற்க வைத்தது திராவிட அரசியலின் திறனென்பேன். அதே நேரம், தமிழரல்லாதோர் அரசியலில் தனித்து செயல்பட, எந்த அடையாளமுமின்றி செயல்பட இந்த திராவிட அரசியல் முழு உரிமையும் வழங்கி உள்ளது.

 

இதனை எல்லாம் எதிர்த்து யாருமே பேசவில்லையா என கேட்கலாம். நிறைய பேர் பேசி இருக்கிறார்கள், பாவேந்தர் உட்பட. ஆனாலும், இவர்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டு, மாற்று இனத்தோரே பன்னெடுங்காலமாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். வரலாறு நமக்கு சொல்லும் செய்தி, கடந்த 200 வருடங்களாகவே ஊடகமும், அரசியலும் அதிகாரமும் தமிழர் அல்லாதோரிடமே. அதன் துணை கொண்டு, எதிர்க்கேள்வி கேட்டோர் எல்லோரையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

எல்லாம் சரி. இப்போது இந்த தமிழ் தேசியம் ஏன் பேசுபொருள் ஆனது என கேளுங்களேன். அங்கே தான் ஒளிந்திருக்கிறது ஒரு வரலாற்று பேரதிர்வு.

 

தமிழ் தேசிய அரசியலை 2009க்கு முன், 2009க்கு பின் என இரு வேறாக பிரிக்கலாம். 2009க்கு முன், ஒரு அரங்க அரசியலாக, கல்வியில் கரைகண்டோர் மட்டுமே உரையாடும் கருத்தியலாக, பிரிவினைவாத விவாதமாக இருந்த தமிழ் தேசிய கருத்தியல், ஈழப்போருக்கு பின், திராவிடத்தின் மீதான எதிர்ப்பு, எதிர்பாராத விதமாக தமிழ்த்தேசியம் பேசும் தலைமைகளை உருவாக்கியது. அதுவும் திராவிட பாதையில் பயணித்த சீமானை, தமிழ்தேசியவாதி ஆக்கியது. திராவிடத்தை பேசிய நான் சொல்கிறேன், அது ஒரு பொய் கருத்தியல் என சீமான் பேசும்போது நம்பிக்கை கூடிப் போனது.

 

திராவிடம் நம்மிடையே சாதியை ஒழித்து, ஏற்றத்தாழ்வு அழித்து, பொதுவுடைமையை விதைத்தது என்ற கருத்தியல் அடிபட தொடங்கியது. திராவிட முகமூடி கிழியத்தொடங்கியது. திராவிடத்தின் தீமைகள் ஒவ்வொன்றாய் வெளிவராத தொடங்கியது. தமிழ்த்தேசியக் களம் வெகுசன அரசியலாக விரிவடைய தொடங்கியது. இளம் தலைமுறை தமிழ் பிள்ளைகள் திராவிட அரசியல் செய்யும் தந்தையின் அரசியலில் இருந்து விலகி, தமிழ் தேசிய கருத்தியலுக்கு பயணப்பட்டனர். தமிழ்த்தேசியத்தை அய்யா மணியரசன் போன்றோர் அரசியல் அல்லா களத்திலும், சீமான் போன்றோர் அரசியல் களத்திலும் முன்னெடுத்து செல்லத் தொடங்கினர். இவர்கள் பின்னால் திரண்ட, திரளும் இளைஞர் கூட்டம் திராவிடத்துக்கு எதிரான கருத்தியலை ஆழமாக உள்வாங்க தொடங்கியது. சீமானும் மணியரசனும் கூட மாறிப்போகலாம். ஆனால், இந்த இளைஞர் கூட்டம் மாற வாய்ப்பே இல்லை என சொல்லுமளவுக்கு தீவிர திராவிட எதிர்ப்பு கொண்டவர்களாக உருவானார்கள்.

 

இதனை எல்லாம் திராவிட தலைமைகள் எப்படி ஏற்றுக்கொண்டது என்ற கேள்வி வரலாம். அது தான் விதி. தமிழ் தேசிய கருத்தியல் வளமாக வளரும் போது, திராவிட தலைமைகள் எல்லாம் செயலற்று போனது காலம் நடத்தும் விளையாட்டு. ஸ்டாலினையும் வைகோவையும் காலம் விளையாட்டாக பார்க்க வைத்தது மிகப்பெரிய குறியீடு. மதிமாறன்கள் எல்லாம் திராவிட தூண்களாக வேண்டிய துர்பாக்கிய நிலைமை. கருத்தியலாக என்றோ தோற்றுப்போன திராவிடம், இன்று தலைமைகள் இல்லாமல் அதன் இறுதி நாட்களை எண்ணுகிறது.

 

இதில் வேடிக்கை யாதெனில், திராவிடம் தன் சாவிலிருந்து தப்பிக்க, போய் சேர்ந்த இடம், தன் வாழ்நாள் எதிரி என நம்மை எல்லாம் நம்பவைத்த ஆரியத்திடம். இவர்களின் கணக்கு, திராவிடம் தோற்றாலும், அதனை நிரப்புவது, ஆரியமாக இருக்க வேண்டும். அப்போது தான் திராவிடம் தன்னை மறுபடியும் உயிர்ப்பிக்க முடியும். ஆனால், ஆரியம், தமிழ்நாட்டில் காலூன்ற, திராவிடம் விதைத்த ஆரிய எதிர்ப்பு கருத்தியலே எதிராக நிற்பது திராவிடத்தின் போதாத நேரம்.

 

இப்போது தமிழ் தேசியம் செய்ய வேண்டியதெல்லாம், இடைவிடாது திராவிடத்தை அடிப்பது தான். ஆனால், தமிழ்த்தேசிய தலைமைகள் பேசும் தமிழ்த்தேசியத்தில் மாறுபாடுகள் உண்டு. அதனை எல்லாம் மறந்து, ஒன்றாகி திராவிடத்தை அடிப்பது அவசியமானது. அதே நேரம், ராமதாசும் திருமாவும் பயணிப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். அவர்கள் ஆரிய, திராவிட அடிமைகளாகி பல ஆண்டுகள் ஆயிற்று. இவர்களை தாண்டிய ஆளுமைகள் வருவார்கள். அது காலத்தின் கட்டாயம்.

 

இனி திராவிடம் எழ வாய்ப்பே இல்லை. அது சாகும். வேகமாகவே சாகும்.

 

தமிழ்த்தேசியத்தை வெல்ல விடாமல் செய்ய, எல்லாம் செய்யும் திராவிடம். சாதி மோதல்கள் நடக்கலாம், மதக்கலவரங்கள் நடக்கலாம். பல உயிர்கள் கூட பலியாகலாம். என்ன நடந்தாலும், தொடர்ந்து தமிழ்த்தேசியம் முன்னேற வேண்டியது அவசியம்.

 

இன ஓர்மைக்கு எவ்விலையும் கொடுக்கலாம். ஆனால், இறுதியில், இனமே வென்றாக வேண்டும். இது ஒரு வரலாற்று வாய்ப்பு. சாதிய உணர்வை சாகடித்து, இன உணர்வை இருகப் பற்றிக்கொள்வது மிக அவசியம்.

 

ரஜினி, கமல் என நடிகர்களும் கூட தமிழ் தேசியத்திற்க்கெதிராக இறக்கப்பட்ட முயற்சிகள் தான். அது பலிக்க விடாமல் செய்யவேண்டியது மிக அவசியம். மாற்று இனத்தானிடமிருந்து நாம் கற்க வேண்டிய மிக முக்கிய ஒன்று, இன ஓர்மை. இனத்தானை விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டியது முக்கியமான ஒன்று.

 

இறுதியாக ஒன்று.

 

இனியும் தமிழ் தேசியம் வெல்லுமா என கேள்வி கேட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். அது வென்று விட்டது. இனி, பகை முடிக்க வேண்டியது மட்டுமே மீதி. அதுவும் முடித்து முழுமையாக வெல்லுவோம் என்பது விதி.

 

தமிழர் காலம் மீண்டும் வருகிறது. மீண்டு வருகிறது. அதனை தொடங்கும் தலைமுறை நாமென்பது பெருமை. அதுவரை ஒற்றுமையாக இருப்பது கடமை.

 

– இரா. தாமரைச்செல்வன்
29.08.2018