ராஜிவ்கொலை வழக்கு சிறைவாசிகளில் “ஏழு பேரில் ஒருவரான’ இரா.பொ. இரவிச்சந்திரனும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தான் இருந்து வருகிறார். வேலூர் மத்தியச் சிறையில் இருந்தவர் 2009-லிருந்து மதுரை மத்தியச் சிறையில் உள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று சிறைக்குள்ளும் பரவியுள்ளது. இது பற்றிய செய்திகளும் வெளியானது. சமூக ஊடகங்களிலும் வந்தது. அதையொட்டி மதுரை சிறையிலும் நோய்த் தொற்று பரவியது.

அதனையொட்டி, இந்த நேரத்திலாவது தன் மகன் ரவியை மூன்றுமாத சிறைவிடுப்பில் விடவேண்டும் என்று ரவியின் தாயார் ராஜேஸ்வரி அம்மாள் டி.ஜி.பி மற்றும் சிறைத்துறை மற்றும் தமிழக முதல்வருக்கு என உரிய அதிகார மட்டத்திற்கு எல்லாம் விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு மதுரை சிறைக் கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள பதில் கடிதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

எல்லாவித இழுத்தடிப்பு வழக்குகளும் முடிந்த நிலையில் கடந்த 19.2.2014 அன்று முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள், உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் சதாசிவம் அவர்களின் தீர்ப்புக்கு பிறகு, தமிழக சட்டமன்றத்திலேயே, ‘எழுவரையும் விடுதலை செய்கின்றோம்’ என அறிவித்தார்.

மத்திய அரசின் பதிலுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்தார். உரிய மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டு விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என்ற தீர்ப்பின் அடிப்படிடையில் அப்படி முடிவெடுத்து அறிவித்திருந்தார்.

அதெல்லாம் முடியாது, இது மத்திய அரசின் சி.பி.ஐ. போட்ட வழக்கு. மாநில அரசுக்கு அதிகாரமில்லை, எங்களுக்குதான் உள்ளது என்று அப்போது மத்திய ஆட்சியில் இருந்த சோனியாவின் காங்கிரஸ் அரசு(சி.பி.ஐ) நீதிமன்றத்திற்கு சென்றது. தடை வாங்கியது.

அந்த வழக்கும் ஒரு நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. ஒரு வழியாக 2018-ல் முடிவுக்கு வந்து, “அவர்களை விடுவிக்கும் உரிமை Artical 161-ன் படி மாநில அரசுக்கு உள்ளது” என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது.

அதன் பேரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ‘செல்வி ஜெயலலிதா அவர்கள் சொன்னதை நாங்கள் நிறைவேற்றுவோம்‘ என்ற அடிப்படையில் 9.9.2018-ல் தன் அமைச்சரவைக் கூட்டத்தைக்கூட்டினார். ராஜிவ்கொலை வழக்கு தண்டனை சிறைவாசிகள் ஏழு பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை முறைப்படி நிறைவேற்றினார். அதை முறைப்படி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு…

இன்று வரை 22 மாதங்களாகக் ‘காத்துக்கொண்டிருக்கும் நிலையில்”…

இந்த சிறைத்துறை கண்காணிப்பாளர், “இது மத்திய அரசின் செயல் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்ட விதிமுறையின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால், அவருக்கு விடுப்பு வழங்க பரிந்துரை செய்ய இயலாது” என்று கடிதம் அனுப்பியுள்ளார்..

என்றால்,, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேறு, சிறைத்துறை வேறா? இருவர்களும் வேறு வேறு மாநிலத்தில் இருக்கின்றார்களா? மாநில முதல்வரே தன் அமைச்சரவைக் கூட்டத்தைக்கூட்டி ஏழு பேரையும் விடுவிக்கின்றோம் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு காத்திருக்கும் இந்த நேரத்தில்…

முதல்வரின் கீழ் இருக்கும் சிறைத்துறை மட்டும், “பழைய குருடி கதவைத் திறடி” என்று பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது நியாயமா?

ஒன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும். அல்லது, சிறைத்துறை நிர்வாகம் எழுதிய கடிதம் உண்மையாக இருக்க வேண்டும்.

இரண்டில் எது உண்மை?

முதல்வரின் நல்லெண்ணத்தின் மீது ‘வேறு ஏதாகிலும் குழப்படிகள்’ நடக்கின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது..

சிறைக்கடித நகல்- வழக்கறிஞர் திருமுருகன், மதுரை.

பதிவு பா. ஏகலைவன் அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here