ஸ்காட்லாந்து போல தனித் தமிழ்நாடு உருவாக பொது வாக்கெடுப்பு தேவை – மணியரசன்

0
782

பிரிட்டனிலிருந்து பிரிந்து தனிநாடு அமைக்க ஸ்காட்லாந்து மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக ஸ்காட்லாந்தில் இவ் வாண்டு கருத்து வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதுபோல் தமிழ் நாட்டிலும் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பொ மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதிய பத்தி வருமாறு:

தேர்தல் என்பது சனநாயகம்; தேர்தல் என்பது மயக்கும் மாயாசாலம்! தேர்தல் என்பது உரிமையின் வெளிப்பாடு; தேர்தல் என்பது அடிமை முறையைப் புதுப்பிக்கும் ஏற்பாடு! தேர்தல் என்பது மக்களுக்கு உழைத்திடக் கிடைக்கும் வாய்ப்பு; தேர்தல் என்பது மக்களைக் கொள்ளையடிக்கக் கிடைத்திடும் உரிமம்!

இப்படி இன்னும் எத்தனையோ வடிவங்களில் தேர்தல் எதிரும் புதிருமாகப் பயன்படுகிறது.

எந்த உண்மையும், நீதியும் காலம், இடம், சூழல், எடுத்துக் கொள்ளப்பட்ட சிக்கல் சார்ந்தே சரியானதாக இருக்கும் அல்லது தவறானதாக இருக்கும்.

சாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடில்லாமல் ஒரு நாட்டுக் குடிமக்கள் அனைவர்க்கும் சம மதிப்புள்ள ஆளுக்கொரு வாக்குரிமை என்ற சனநாயகம் எல்லா நாட்டிற்கும் எல்லா காலத்திற்கும் சரியான நீதியாக இருக்க முடியாது.

வெள்ளை இன ஆதிக்கம் சட்டப்படி நிலை நாட்டப் பட்டிருந்த தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இனத்தவர்க்கு சம வாக்குரிமையும் கருப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுப்பும் இருந்தது. வெள்ளையர்களுக்கும் கருப்பின மக்களுக்கும் சம மதிப்புள்ள ஆளுக்கொரு வாக்குரிமை வேண்டும் என்பது அங்கு ஒரு புரட்சி முழக்கமாக எழுந்தது. அந்த சமமான ஒரு வாக்குரிமை பெறுவதற்கான போராட்டங்களில் எவ்வளவோ மக்களும் தலைவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்; கொடுஞ்சிறைகளில் தள்ளப்பட்டனர். நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருப்பின மக்களின் தாயகம் தென்னாப்பிரிக்கா! அங்கு சுரண்ட வந்த வந்தேறிகளான வெள்ளை இனத்தவர் ஆளும் வர்க்கமாகி, மண்ணின் மக்களுக்கு சம உரிமை – சம வாக்குரிமைதர மறுத்தனர். எனவே ஆளுக்கொரு வாக்கு என்பது அங்கு சனநாயகப் புரட்சியின் பதாகை முழக்கமாக ஆனது.

தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டது எப்படி?

இப்போது இந்திய நாடாளுமன்றத்திற்கு நடை பெறும் தேர்தலில் காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு இனமக்களுக்கு சம மதிப்புள்ள ஆளுக்கொரு வாக்குரிமை என்பது சனநாயகமா?

maniyarasan
தமிழகத்தில் செயல்படும் தொலைபேசி அலுவலகங்களில், தொடர்வண்டி நிலையங்களில் எந்த மொழியைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்க உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பத்து இந்தி மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து அவர்களுக்குள் பெருபான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு செய்துள்ளார்கள். இது சனநாயகமா?

கிழக்கு மேற்காக ஒரு தெரு இருக்கிறது; அதில் தெற்கு வரிசையில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் வரவு – செலவு, தொழில் போன்றவற்றை முடிவு செய்ய அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்குள் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அக்குடும்பத்தினர்க்குள் ஒத்த கருத்து வரவில்லை என்றால் அவர்களுக்குள் பெரும்பான்மையினர் கூறும் கருத்தை முடிவாக்கிக் கொள்ள வேண்டும். இது சனநாயகம்!

ஆனால் எதிரே வடக்கு வரிசையில் உள்ள, தங்களுக்கு எந்த உறவும் இல்லாத பத்துக் குடும்பத் தினருடன் ஒன்றாகச் சேர்ந்து, அவர்களுக்குள் வரும் பெரும்பான்மைக் கருத்தை இந்தத் தெற்கு வரிசைக் குடும்பத்திற்குரிய முடிவாக ஆக்குவது சனநாயகமா? அது சனநாயக மன்று; ஏமாற்று வேலை; மோசடி ஏற்பாடு. ஒரு குடும்பம் ஏமாறுகிறது, பத்து குடும்பம் ஏமாற்றுகிறது.

பத்து இந்தி மாநிலங்களும் ஒரு தமிழ்நாடும் சேர்ந்து வாக்களித்து, தமிழ்நாட்டில் தொலைபேசி அலு வலகங்களில் – தொடர் வண்டி நிலையங்களில், வங்கிகளில் என்ன மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று “சனநாயகப்படி’’ பெரும் பான்மை முடிவெடுத்து இந்திதான் என்று தீர்மானித்தார்கள். இது சனநாயகமா? இல்லையில்லை ஏமாற்று வேலை; மோசடி நட வடிக்கை!

கச்சத்தீவு ஒரு போதும் தமிழ்நாட்டிற்குரியதாக இருந்த தில்லை என்று இந்திய அரசு உச்சநீதி மன்றத்தில் உறுதி மொழி ஆவணம் தாக்கல் செய்துள்ளது.

கச்சத்தீவு காலம் காலமாகத் தமிழ்நாட்டின் உரிமையாக இருந்தது. அதை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்தது தவறு, தமிழ் நாட்டின் நிலமாகக் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை தீர்மானம் போட்டது. ஆனால் இத்தீர்மானத்திற்கு அதிகாரம் இல்லை. ஏன்? இந்தியாவில் உள்ள இதர மாநில சட்டப் பேரவைகளும் நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்களைத் தவிர மற்றெல்லா மாநில உறுப்பினர் களும் இந்திய அரசு, இலங்கைக்குக் கச்சத்தீவைக் கொடுத்ததை ஆதரிக்கின்றன. தமிழகக் குரல் சிறுபான்மைக் குரல்; செயலுக்கு வராது! எதிர் வரிசையில், எந்த வகையிலும் உறவும் உரிமையும் இல்லாத பத்துக் குடும்பத்தினரைசேர்த்துக் கொண்டு “சனநாயக முறைப்படி’’ பெரும் பான்மை பார்த்து முடிவெடுத்தால் அரங்கேறும் ஏமாற்று வேலை – கச்சத்தீவு தொடர்பாக அரங்கே றியுள்ளது.

அறுநூறு தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ, இப்போதும் அன்றாடம் சிங்களப் படையாட்களால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதையோ, இலங்கைச் சிறையில் அடைக்கப்படுவதையோ தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநில அரசும் சட்டப்பேரவையும் கண்டிக்கவில்லை. நாடாளுமன்றம் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. நாடாளுமன்றத்தில் தமிழர்கள் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளார்கள். தொடர் பில்லாத எதிர்வரிசையைச் சேர்ந்த பத்துக் குடும்பங்களுடன் தெற்கு வரிசை ஒரு குடும்பம் சேர்ந்ததால் ஏற்பட்ட அதே தீவினைதான் இது. நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்காகத் தமிழக உறுப்பினர்கள் ஒப்பாரி வைக்கலாம் – கூச்சல் போடலாம்; கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. கச்சத்தீவை மீட்க சட்டம் இயற்ற முடியாது.

காரணம், அங்கு நாம் சிறுபான்மை.

2008 – 2009 இல் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் சிங்கள இன வெறி அரசால் இனப்படு கொலை செய்யப்பட்டார்கள்.

தில்லி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் ஆவேசப்பட்டுப் பேசினார்கள்; அழுதுபார்த்தார்கள்; ஆனால் இலங்கை அரசுக்கெதிராக ஒரு கண்டனத் தீர்மானம் போட முடியவில்லை. நடந்தது இனப்படு கொலைதான் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் அங்கு நாம் சிறுபான்மை. ஒரு தேசிய இனத்திற்கு ஒருநாடு என்ற உலக நடைமுறைக்கு மாறாக பல்வேறு தேசிய இனங்களோடு தமிழர்கள் பிணைக்கப்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் நாம் செயற்கையாக சிறுபான்மையாக்கப் பட்டுள்ளோம்.

நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் பகைவன் ஒருவனால் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலைகாரன் யார் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் எதிர் வரிசையில் அந்தப் பத்து வீட்டுக்காரர்களும் ஒத்துக் கொண்டால்தான் அந்தக் கொலைகாரன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும் என்றால் அந்த “சனநாயகத்தை” ஏற்றுக் கொள்வோமா? மாட்டோம்! ஆனால் நம் இன ஈழ உறவுகளை இனக் கொலை செய்தவர்கள் சிங்களவர்கள் என்பதை இந்திய நாடாளுமன்றம் ஒத்துக் கொள்ள வில்லை என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே இந்திய நாடாளுமன்றத்திடம் கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்போமா? வேறு முடிவுக்குப் போக மாட் டோமா?

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக, சட்ட விரோதமாக கர்நாடகம், தமிழகத்திற்குரிய காவிரித் தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொள்கிறது. தில்லி நாடாளு மன்றம் சனநாயகப்படி தலையிட்டு சட்டப்படி வரவேண்டிய காவிரி நீரைத் திறந்து விட்டதா? இல்லை.

tamil-nadu0
காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்திற்குச் செல்லாமல் தமிழக சட்டப்பேரவையால் தடுக்க முடிகிறதா? இல்லை. தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டிற்குச் சொந்த மில்லை; இந்திய அரசுக்குச் சொந்தம்! ஏன் இந்த அவலம்? எந்த உறவு மில்லாத எதிரிவரிசைப் பத்துக் குடும்பத்தோடு நாம் இணைக்கப்பட்டிருப்பதால், பெரும்பான்மை அடிப்படையில், நம் சொத்தான நெய்வேலி அவர் களின் அதிகாரத்தின் கீழ் போய் விட்டது.

இன்னும் எத்தனை எத்தனை உரிமைகள் பறி போய்விட்டன! நம் மண்ணில் கிடைக்கும் நரிமணம் பெட்ரோலியம், குத்தாலம் எரிவளி இவற்றில் தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

நாம் விளைவிக்கும் நெல், கரும்பு, பருத்தி முதலியவற்றுக்குத் தில்லியில்தான் விலை தீர்மானிப் பார்கள். தில்லியில் நம் கருத்து எடுபடுமா என்றால் அதுவும் எடு படாது; காரணம் நாம் சிறு பான்மை!

தமிழகத்தில் உள்ள ஏழு கோடித் தமிழர்கள் சிறுபான்மை ஆனது எப்படி? எந்த உறவும் இல்லாத எதிர் வரிசைப் பத்து குடும்பத்தாரோடு நாம் இணைக் கப்பட்டதால் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டோம்!

47,22,701 பேர் மக்கள் தொகை கொண்ட நார்வேஜியர்கள் நார் வேயில் சிறுபான்மை இல்லை. காரணம் அவர்கள் இனத்துக் கென்று உள்ள நாடு நார்வே. அவர்கள் 1905 வரை சுவீடனில் இணைத்திருந்தார்கள். 1905 இல் பிரிந்தார்கள். இன்றும் சுவீடிஸ் இனத்தோடு சேர்ந்திருந்தால் நார்வேஜியர்கள் சிறுபான்மையாக இருந்திருப்பார்கள். இப்போது சுவீடிஸ் மக்கள் தொகை 91,19,423.

ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இனங்கள், சற்றொப்ப 100 நாடுகளில், பெரும்பான்மை என்ற பெருமித உணர்வோடு, அதனதன் நாட்டில், இறையாண்மையுடன் ஆட்சி செய்து கொண்டுள்ளன.

பதினாறு கோடி மக்கள் தொகை கொண்ட வங்காளதேசம் 20 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்குப் பாகிஸ்தானோடு சேர்ந்திருந்தால் வங்காளிகள் சிறுபான்மை இனமாகத்தான் இருந்திருப்பர். மேற்குப் பாகிஸ்தானின் உருது மொழிதான் வங்காள தேசத்திலும் நடுவண் ஆட்சி மொழியாக இருந்திருக்கும். 1952 இல் உருது மொழியைக் கிழக்குப் பாகிஸ்தான் (வங்காள தேசம்) மீது மேற்குப் பாகிஸ்தான் திணித்தது. வங்கமொழியைக் காப்பதற்காக உருதுத் திணிப்பை எதிர்த்துப் போராடினார்கள். டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் 4 பேர் 1952 பிப்ரவரி 21 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த பிப்ரவரி 21 தான் இன்று உலகத் தாய் மொழிநாள்! இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்கப் போராடிய போது 1965 இல் 300 பேர்க்கு மேல் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நாம் இந்தியாவுக்குள் இருப்பதால் நம்மொழிப் போர் நாள் உலக ஏற்பிசைவு பெற முடியவில்லை.

இப்பொழுது தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,38,871 பேர். பிரிட்டனின் மக்கள் தொகை 6,33,95,574, பிரான்சின் மக்கள் தொகை 6,59,51,611. ஆனால் தமிழ் நாடு எதிர் வரிசையில் நம்முடன் எந்த உறவும் இல்லாத பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களோடு பிணைக்கப்பட்டதால் நாம் சிறு பான்மையாய் இருக்கிறோம். அவ்வாறான பிணைப்பு இல்லாத தால் பிரித்தானியரும், பிரஞ்சுக்காரர்களும், தங்கள் நாட்டில் பெரும் பான்மையாய் இருக்கிறார்கள்.

ஒரு தேசிய இனத்திற்கு ஒரு நாடு அமைவதுதான் உலக நடை முறையாக உள்ளது. பெரும்பாலான நாடுகள் அவ்வாறு அமைந்துள்ளன. அந்த அளவுகோல் படி அமையாத தேசங்கள் புதிது புதிதாக விடுதலை பெற்றுக் கொண்டுள்ளன.

இந்த உலக நடைமுறை தமிழ்த் தேசிய இனத்திற்கும் பொருந்தும்.

கங்காணி அரசியல்:

தமிழ்நாட்டிலிருந்து 1952 முதல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லிக்குப் போகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசி, தீர்மானம் கொண்டு வந்து இதுவரை எந்த உரிமையை மீட்டார்கள்? பட்டியல் இடமுடியுமா? இந்தித் திணிப்பைத் தடுத்தார்களா? காவிரி முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு உரிமைகளைக் காத்தார்களா? ஈழத்தமிழர் மீது 1987 இல் இராசீவ்காந்தி நடத்திய படையெடுப்பைத் தடுத்தார்களா? இந்தியப்படை ஈழத் தமிழர்களை அழித்ததைத் தடுத்தார்களா? 2008 – 2009 இல் இந்தியா பின்னிருந்து இயக்கிய ஈழப் போரை நிறுத்தி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் காத்தார்களா? இல்லை; இல்லை!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை இரண்டுமாதங்களாகக் கொண்டாடிக் கொண்டுள்ளார்கள். என்ன சாதிப்பதற்காக இந்தக் கட்சிகள் அணி சேர்கின்றன? இவை ஏற்கெனவே என்ன சாதித்தன! பதவி – பணம் – விளம்பரம் என்ற மூன்றைத் தவிர இந்தக் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு என்ன பெரிய இலட்சியம் இருக்கிறது?

இந்தியாவால் அடிமைப்படுத் தப்பட்டுள்ள தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள் வது போல் ஒரு மயக்கத்தை உருவாக்குவதற்காகவும் – தமிழ் நாட்டின் அத்தனை இழப்புகளுக்கும் துன்பதுயரங்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள்தான் முதன்மைக் காரணமே தவிர இந்திய அரசு அல்ல என்று திசை திருப்பி விடுவதற்காகவும்தான் – இந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்நாட்டில் இந்தியா நடத்துகிறது. வடவர்களுக்குப் பெரும் பெரும்பான்மை இருப்பதால் தமிழர்களைப் போன்ற “சிறுபான்மையினர்’’ தில்லி நாடாளுமன்றத்தில் எதுவும் செய்து விட முடியாது என்ற நம்பிக்கை இந்திய ஏகாதிபத்தியத்திற்கு இருக்கிறது.

maveerar2
தமிழ்நாட்டுக் கட்சிகள் தன்னலப் பதவிப் போட்டியில் தங்களுக்குள் ஒன்றை யொன்று எதிர்த்து, தங்களுக்குள் பகைமை உருவாக்கிக் கொண்டு – உண்மையான பகைவனான இந்திய ஏகாதிபத்தியத்தை தமிழர்களின் பார்வையிலிருந்து தப்பவிடுகின்றன.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை சார்ந்த எந்த இலட்சியமும் இந்தத் தேர்தல் கட்சிகளிடம் இல்லை. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெற வில்லையென்றால் கட்சி காலியாகி விடும் என்ற அச்சத்தில் இந்தக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இலட்சிய முள்ள கட்சி நடத்தவில்லை; அரசியல் கம்பெனி நடத்துகிறார்கள்.

இக்கட்சிகளின் தேர்தல் செயல் பாடுகள் சாரத்தில் இந்திய ஏகாதி பத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்ப்பதாகவே இருக்கின்றன.

கருத்து வாக்கெடுப்பு

தமிழ்நாட்டில் உண்மையில் நடத்தப்பட வேண்டிய ஒரே தேர்தல், கருத்து வாக்கெடுப்புதான். 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு ஏராளமான உரிமை இழப்புகள், உயிர் இழப்புகள் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன.

வெள்ளையன் தமிழக மன்னர்களையும் படைகளையும் தூக்கிலிட்டும், பீரங்கியால் சுட்டுக் கொன்றும் தமிழகத்தை இந்தியா என்ற புதிய நிர்வாகக் கட்டமைப்பில் இணைத் தான்.

அவன் வெளியேறிய போது 1947 – இல் தமிழர்கள் இந்தியாவோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்களா இல்லையா என்று சனநாயக முறைப்படி நம் கருத்தைக் வெள்ளைக்காரன் கேட்கவில்லை. வெள்ளையனின் பீரங்கியால் இணைக்கப்பட்ட இந்தியா விடுதலை பெற்றதும் இந்தியத் தலைமை யின் துப்பாக்கிகளாலும், இரும்புச் சட்டங்களாலும் தமிழர்களாகிய நாம் மேலும் இறுக்கமாகப் பிணைக்கப் பட்டோம்.

“வடவர்கள் நம்மவரும் இல்லை, அவர்கள் நல்லவரும் இல்லை’’ என்று ஒருகாலத்தில் அண்ணா சொன்னார். “தனிநாட்டுக் கோரிக் கையைக் கைவிட்டு விட்டோம் என்றாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்று 1968 இல் முதலமைச்சராக இருந்த போது அண்ணா சொன்னார்.

1938 இல் தமிழறிஞர்களும் பெரியாரும் சேர்ந்து நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போரில் முதன்முதலாக “தமிழ்நாடு தமிழர்க்கே’’ என்று முழக்கம் கொடுத்தனர். 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் தமிழர்களுக்கான சுதந்திரம் இல்லை என்று கூறி பெரியார் அந்நாளைத் துன்பநாளாகக் கடைபிடித்தார். 1973 செப்டம்பர் 17 தமது பிறந்தநாள் விடுதலை மலர்க்கு எழுதிய கட்டுரையில் “இனி சுதந்திரத் தமிழ்நாட்டிற்குத் தான் போராட வேண்டும்’’ என்றார் பெரியார்.

சி.பா. ஆதித்தனார் தனித் தமிழ்நாடு கேட்டார்.

மேற்கண்ட தலைவர்கள் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை முதன்மைப்படுத்தி தொடர்ந்து போராடாமல் போனாலும் தமிழ் இனத்தின் நீண்ட நெடுங்காலக் குரலைத்தான் அவர்கள் அவ்வப் போது வெளிப்படுத்தினார்கள்.

எனவே தனிநாட்டுக் கோரிக்கைக்கு நமக்கொரு தொடர்ச்சி 1938 மொழிப் போரிலிருந்து இருக்கிறது.

ஓர் இனம் தனது கடந்த கால வரலாற்றில் உள்ள பலவீனமான பகுதிகளை விட்டுவிட்டு பலமான பகுதிகளை எடுத்துக் கொண்டு அவற்றை மேலும் பலப்படுத்தி புரட்சிகரத் திட்டமாக மக்கள் முன்வைக்க வேண்டும். அப்படிப் பட்ட இனம் தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்; அயல் இனத்திற்கு அடிமைப்படாமல் சுதந்திர வாழ்வை அமைத்துக் கொள்ளும்.

இப்பொழுது தமிழ்நாட்டில் நடைபெற வேண்டியது கருத்துவாக் கெடுப்பு (referendum); இந்திய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு அல்ல. இந்தியாவோடு சேர்ந்திருக்கிறீர்களா அல்லது – தனிநாடு அமைத்துக் கொள்கிறீர்களா என்று தமிழ் மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதுதான் இன்றைய கால கட்டத்தில் சனநாயகத் தேர்தல்! நாடாளுமன்றத் தேர்தல் நமது அடிமைத் தனத்தை நாமே புதுப் பித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் நாம் கோரும் கருத்து வாக்கெடுப்பு தீவிரவாத மல்ல. இது ஒரு சனநாயகக் கோரிக்கை. பிரிட்டனிலிருந்து பிரிந்து தனிநாடு அமைக்க ஸ்காட்லாந்து மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக ஸ்காட்லாந்தில் இவ் வாண்டு கருத்து வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதுபோல் தமிழ் நாட்டிலும் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழின உணர்வாளர்கள், தமிழ்த் தேசியர்கள் இந்த வகையில் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.