ஸ்கொட்லாந்து எமக்கு கற்றுத்தந்துள்ள பாடம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0
624

‘நாம் தோற்றகடிக்கப்படலாம் ஆனால் தனிநாட்டுக்கான எமது கனவு ஒருபோதும் சாவடையாது’ தனிநாட்டுக்கான வாக்கெடுப்பின் பின்னர் தனது பதவியை துறந்தபோது ஸ்கொட்லாண்டின் முதலமைச்சர் அலக்ஸ் சல்மன்ட் தெரிவித்த கருத்து இது.

கடந்த வியாழக்கிழமை (18) இடம்பெற்ற வாக்கெடுப்பில் இரண்டு இலட்சம் வாக்குகளால் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து தோல்வி கண்டிருந்தது. 16 இலட்சம் மக்கள் ‘ஆம்’ எனவும், 20 இலட்சம் மக்கள் ‘இல்லை’ எனவும் வாக்களித்திருந்தனர். வெற்றிபெறுவதற்கு 18 இலட்சம் வாக்குகளை அவர்கள் பெற்றிருக்கவேண்டும்.

தனது மாணவப்பருவத்தில் இருந்து இனத்திற்கான அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்த சல்மன்ட் தற்போதும் மனம் தளரவில்லை. வாக்களிக்கும் உரிமையை மாணவர்களின் கைகளில் கையளித்து விடுதலைக்கான பணியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வுபெற்றுள்ளார்.

alex-salmond9
பிரிந்து செல்லவேண்டும் என 45 சதவிகித மக்கள் வாக்களித்ததே மிகப்பெரும் வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. 300 ஆண்டு காலமாக தனது பிடிக்குள் ஸ்கொட்லாந்தை வைத்திருந்த பிரித்தானியா அங்கு குடியேற்றங்களையும், தொழில் நிறுவனங்களையும், வங்கிகளையும் அமைத்ததுடன், நிர்வாகத்துறை, நிதித்துறை என பல பிரிவுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி அந்த பிரதேசத்தின் விகிதாசாரத்தையே மாற்றியமைத்திருந்தது.

ஸ்கொட்லாந்து மக்கள் பலரும் தொழில் நிமிர்த்தமாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். அது மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் தொழில் வாய்ப்புக்காகவும், வேறுபல நோக்கங்களுக்காகவும் ஸ்கொட்லாந்தில் குடியேறியவர்களும் அதிகம்.

இவர்கள் எல்லோரினதும் வாக்குகளே கடந்த வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தின் தலைவிதியை தீர்மானித்தது. ஸ்கொட்லாந்து பிரிந்தால் பலருக்கும் வேலை பறிபோய்விடும், பொருட்களின் விலைகள் உயர்ந்துவிடும், வீட்டுக்கடன்களின் வட்டி விகிதம் உயரும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு கொசோவாக்கு பின்னால் உள்ள வரிசையில் ஸ்கொட்லாந்து காத்திருக்க வேண்டும், வடகடல் எண்ணை வற்றிவிடும் என்ற அச்சுறுத்தல்கள் ஸ்கொட்லாந்து நாட்டவர் அல்லாதவர்களின் வாக்குகளை தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக திருப்பிவிட்டிருந்தது.

பிரித்தானியாவின் எந்த ஒரு ஊடகமும் ஸ்கொட்லாந்து மக்களிற்காக குரல்கொடுக்கவில்லை. தாம் கூறுவது பொய்யானது என்றபோதும் அவர்கள் அது தொடர்பில் கவலைகொள்ளவில்லை. எனினும் 16 இலட்சம் மக்கள் தனிநாட்டுக்காக வாக்களித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து மக்கள் இல்லை என வாக்களித்தால் உடனடியாக அதிக அதிகாரங்கள் பகிரப்படும் என பிரித்தானியா அரசியல் கட்சிகள் கூறிய உறுதிமொழிகளும் தற்போது அந்தரத்தில் ஊசலாடுகின்றன.

happy-sad-1-522x293
அதிகாரங்கள் ஸ்கொட்லாந்துக்கு மட்டுமல்லாது, வேல்ஸ், வடஅயர்லாந்து, ஏன் இங்கிலாந்து மக்களுக்குக் கூட பகிரப்படவேண்டும் என்ற கதைகள் தற்போது கூறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு என்ற பிரச்சனை சிக்கலாக்கப்பட்டு வருகின்றது. எனினும் அவர்கள் சில அதிகாரங்களை கொடுக்காது தப்பமுடியாது.
ஆனால் ஸ்கொட்லாந்தின் நிகழ்வுகளை மிகவும் கவனமாக உள்வாங்குவதன் மூலம் பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.

300 வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்தை தனது பிடிக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர் அங்கு மெல்ல மெல்ல மேற்கொண்ட நில அபகரிப்பு, குடியேற்றம், இனக்கலப்பு போன்ற விடயங்களே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழத்தின் வடக்கிலும், அதற்கு முன்னரே கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கில் துரிதமாக மேற்கொள்ளப்படும் சிங்களக்குடியேற்றங்கள், அரச நிர்வாகங்களில் நியமனம் செய்யப்படும் சிங்கள அதிகாரிகள், சிறீலங்கா படைகளில் இணைக்கப்படும் இளம் தமிழ் பெண்கள், சிங்கள படையினராலும், சிறீலங்கா அரசினாலும் கையகப்படுத்தப்படும் தமிழ் மக்களின் நிலங்கள் என்பன இனவிகிதாசாரத்தை சிதைக்கும் முயற்சிகளாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சில துறைகளில் 50 விகிதத்திற்கு மேற்பட்ட சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னர் எல்லைக்கிராமங்கள் ஊடாக நிகழ்ந்த குடியேற்றங்கள் தற்போது இதயப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையின் கொள்கைவகுப்பாளர் இந்திய அரசு தான்.

எவ்வாறு தமிழகத்தை ஏனைய மாநிலங்களின் மக்களைக் கொண்டு ஆக்கிரமித்து அந்த மாநிலங்தின் அரச இயந்திரத்தையும், சினிமா துறையையும் இந்திய மத்திய அரசு முடமாக்கியதோ அதே போன்றதொரு நிகழ்வுகளை சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் தாயகப்பகுதிகளில் அது மேற்கொள்கின்றது.

தமிழ் மக்கள் சிங்களம் பேசவேண்டும் என சிறீலங்காவுக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் அண்மையில் தெரிவித்த கருத்தின் உள்நோக்கமும் அதுவே. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்தித் திணிப்பைப் போன்றது இது.

எனினும் சிறீலங்கா அரசானது தனக்கும், இந்தியாவுக்கும் ஆதரவான தமிழ் அரசியல்வாதிகளையும், துணைஇராணுவக்குழுக்களையும் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தி வருகின்றது.

அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தை என சிறீலங்கா அரசும், இந்திய அரசும் அடிக்கடி கூறுவதும், அதன் மூலம் காலத்தை இழுத்தடிப்பதும் இந்த இனவிகிதாசாரத்தினை மாற்றி அமைப்பதற்கான கால அவகாசத்தை பெறுவதற்காகவே. தமிழ் மக்களின் தாயகக்கோட்பாடுகளை சிதைப்பதற்கு சிறீலங்கா அரசுக்கும், இந்திய அரசுக்கும் கால அவகாசம் தேவை. அதனை பெறுவதற்காகவே அவர்களை தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்திவருகின்றனர்.

ஒரு இனமானது அதன் தாயகப்பிரதேசத்தில் தனது இனவிகிதாசாரத்தை பேணத்தவறினால் என்ன நிகழும் என்பதை கடந்த வாரம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற தேர்தலும், 20 வருடங்களுக்கு முன்னர் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தலும் எமக்கு கற்றுத்தந்துள்ளன.

Ltte-fighter
ஸ்கொட்லாந்தில் குடியேறிய வேற்று இனத்தவர்கள் தமது வேலை பறிபோய்விடும் என பதறியதும், பிரித்தானியாவில் வசிக்கிறோம் என கூறுவதில் பெருமை உண்டு என எண்ணியதும் தான் ஸ்கொட்லாந்தின் தோல்விக்கு முக்கிய காரணம்.

எதிர்வரும் காலத்தில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கில் ஒரு வாக்கெடுப்பு நிகழும்போது அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களும் வாக்களிக்கத் தகுதியானவர்களே என சிறீலங்கா அரசு கூறுமானால் வாக்கெடுப்பின் வெற்றி என்பது கேள்விக்குறியானதே.

எனவே தான் எல்லைகளை பாதுகாப்பதிலும், இனவிகிதாசாரத்தை பேணுவதிலும் விடுதலைப்புலிகள் முன்னர் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். விடுதலைப்புலிகளின் படை பலம் தான் அதனை பேணுவதில் அவர்களுக்கு உறுதுiயாக இருந்தது.

ஆனால் இன்று தமிழ் மக்களின் படை பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாது, தாயகம் என்ற கோட்பாட்டையும் இல்லாது செய்யும் பணிகளையே இந்திய மத்திய அரசும், சிறீலங்கா அரசும் சத்தமின்றி தமிழீழத்தில் மேற்கொண்டு வருகின்றன.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.