காதல் செய்வோம்..

 

இன அழிப்பு பின்புலத்தில் மனித உறவுகள் எப்படி சிதையும் என்பதற்கு ஈழத் தமிழர்களாகிய நாம் சமகால உதாரணங்களாகும்.

 


இனஅழிப்பின் பக்க விளைவாகவும் போருக்கு பிந்திய சமூகத்தில் தோற்றம் பெறும் அடிப்படை சிக்கல்களின் – முரண்பாடுகளின் விளைவாகவும், குறிப்பிட்ட இனக் குழுமத்திற்குள் பல்வேறு வகையான மனப் பிறழ்வுகளை – உளவியற் சிக்கல்களை அடையாளம் காண முடியும்.

 

நம்மில் ஒவ்வொருவரும் – புலம் பெயர்ந்திருந்தாலும் கூட குறைந்தது 10 உளவியற் சிக்கலுக்குள் எம்மை பொருத்திக் கொண்டவர்களே.. ஆளாளுக்கு புற- அக சூழலின் விளைவாக இதன் தாக்கத்தின் அளவு வேறுபடுமேயொழிய முற்றாக இல்லை என்று கூற முடியாது.

 

நேரடியாக வன்னி இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்தவர்களின் நிலையை இங்கு வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

 

இதுவே மனித உறவுகளின் சிதைவாக உருவம் எடுக்கிறது.

 

குறிப்பாக மே18 இற்குப் பிறகு ஆண் – பெண் உறவுகள் ஒரு விபரீத பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

 

அன்பு,பாசம்,காதல் என்பவை ஒரு வகையான ஊனமுற்ற உளவியலின் வழியே அணுகப்படுவதால் அது முழுமையற்று உறவுகள் துண்டிக்கப்படுகின்றன,

விளைவாக திருமணம், குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்பட்டு ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை.

 

விளைவு, பண்பாட்டு சிக்கல் தொடக்கம் பொருண்மிய, உளவியல், பாலியல் முரண்பாடுகளுக்கு இது வழி சமைத்திருக்கிறது.

 

இது பல சமூக ஏற்றத்தாழ்வுகளையும் – இனத் தளம்பலையும் கட்டமைக்கிறது.

 

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அத்தோடு மேலதிகமாக ஆண் – பெண் உறவுகள் முறிவது இன அழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனத்திற்கு ஆரோக்கியமான ஒரு படிநிலை அல்ல.

 

இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.

 

அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இது தவறாகப் பார்க்கப்படும் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

 

இந்த பின் புலத்தில் நின்றுதான் காதலர் தினம் போன்ற நிகழ்வுகளை நாம் அணுக வேண்டும்.

 

மேற்படி புரிதல்களுடன் தாயகத்தில் காதலர் தினம் விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தினமாக இருக்கிறது.

 

ஆண் – பெண் உறவின் மகத்துவத்தை புரிய வைத்து ஒரு இனமாக நாம் நீடித்து நிலைத்து நிற்கும் உளவியல் சூட்சுமங்களை தன்னகத்தே கொண்டுள்ளது ‘ காதலர் தினம்’

 

மனித வாழ்வு மீதான தீராத காதலே ஒரு விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்தது.

 

அந்தப் போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்க நாம் காதல் செய்வோம் – உறவுகளை தக்க வைப்போம் – ஒரு இனமாக நிலைத்து நிற்போம்.