இலங்கையில் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100-நாள் வேலைத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ். மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்வி.பி.மங்களராஜா ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Internally-displaced-Sri--005
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டும் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவர்களுக்கு என்ன நடந்தது என பொறுப்பு கூறவேண்டும் போன்றன உள்ளிட்ட கோரிக்கைகளை அருட்தந்தை மங்களராஜா முன்வைத்துள்ளார்.

சரணடைந்து காணாமல்போயுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் மற்றும் அருட்தந்தை ஜிம் பிரவுண் உள்ளிட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் யாழ். மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு கோரியுள்ளது.

இராணுவத் தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உள்ள இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையில் நீதியும் உண்மையும் நிறைந்த ஒரு நிலையான சமாதானத்தை உருவாக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும், நடந்துமுடிந்த தேர்தலில் அமோகமாக வாக்களித்துள்ள வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கின்றது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பெண்கள், நோயாளிகள், வயதானவர்கள், குடும்ப உழைப்பாளிகள் என பலதரப்பட்டவர்கள் இருப்பதாகவும், பெண்களில் சிலர் தமது பிள்ளைகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

மீள்குடியேற்றம்

வலிகாமம் வடக்கு, மன்னார் முள்ளிக்குளம், கிழக்கு மாகாணத்தில் மூதூர் போன்ற இடங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாகவும் அதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் புதிய ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாத காரணத்தினால் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தமது பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிரதேசத்தில் இருந்த 45 பாடசாலைகள் செயலிழந்திருப்பதனால் அந்த மக்களுடைய கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு, மயிலிட்டி பிரதேசத்தில் மக்கள் தமது கடற்தொழிலை இழந்து சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கின்றமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் யாழ். மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு கோரியிருக்கின்றது.

முழுமையான அறிக்கையை இங்கு பார்க்கலாம்:
100 day Prog.

பி.பி.சி.