13ஆவது சட்டத்திருத்தமும் எதிர்கால செயல்திட்டமும் – கி.வெங்கட்ராமன்

0
681

Tamils-007தமிழீழச் சிக்கலை அதன் விடுதலை இலக்கிலிருந்து திசைமாற்றி சிதறடிக்க ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரிசையில் இப்போது இலங்கையின் 13ஆவது சட்டத்திருத்தத்தை மையமாக வைத்து திசை திருப்பும் அரசியல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.

இராசீவ்காந்தி, செயவர்த்தனா கையொப்பமிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியதாக இந்திய ஏகாதிபத்திய அரசு சொல்லி வந்த பொய் முழக்கத்திற்கு ஈழத் தமிழர்களையும், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களையும் அணி திரட்டும் முயற்சியாக கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

13ஆவது சட்டத்திருத்ததிற்கு எந்த குலைவும் வந்து விடாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என கலைஞர் அறிக்கைமேல் அறிக்கைவிடுகிறார்.

13ஆவது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க இந்தியப் பிரதமர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தனி ஈழம் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் செயலலிதா கடிதம் எழுதுகிறார். அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இணக்கமான பதில் கடிதம் அனுப்பியவுடன் தனது கோரிக்கையின்படி இந்தியஅரசு செயல்படுவதாக தமிழக முதலமைச்சர் விளம்பரப்படுத்துகிறார். பிரதமரின் கடிதம் மனநிறைவு அளிப்பதாக கலைஞரும் அறிக்கை விடுகிறார்.

இந்த 13ஆவது திருத்தததை ஏற்றுக்கொள்ளாமல் தமிழீழத் தனிஅரசு கோரிக்கையில் பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது, இனியாவது ஈழத்தமிழர்கள் இதனை ஏற்று தமிழர் சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரசாரும் ஆரிய-பார்ப்பனிய ஊடகங்களும் முழு வீச்சோடு கருத்துப்பரப்பி வருகின்றன.

13ஆவது திருத்தத்தில் ஈழத்தமிழர் இனசிக்கலுக்கு தீர்வு இல்லை, தீர்வு நோக்கிய முதல்படியாகவும் அது அமையவில்லை என்பதை இதற்கு முன்னும் விளக்கியிருக்கிறோம். இப்போது மீண்டும் அதனை வலியுறுத்துவதுடன் இப்போது இத்தீர்வு வலியுறுத்த படுவதற்கான பின்னணியை விளக்குவதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய-சிங்கள ஆரியக் கூட்டணி நேரடியாக படை வகையில் கைகோத்து களம் இறங்கிய இராசீவ்காந்தி –செயவர்த்தனா ஒப்பந்தத்தில் தொடங்கியது.

இந்த ஒப்பந்தத்திற்கு இசைய இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஒன்று செய்யப் பட் டது. அதுவே 13ஆவது சட்டத்திருத்தம் எனப்படும் 1987ஆகஸ்ட்டில் செய்யப்பட்ட இந்த 13ஆவது திருத்தமும் அதனடிப்படையிலான மாகாணசபை சட்டமும்தான் இப்போது தீர்வாகப் பேசப்படுகிறது.

13ஆவது திருத்தமும் மாகாண அவைச் சட்டமும் இலங்கையின் ஒற்றை ஆட்சித் தன்மையை மாற்றி அங்கே ஓர் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கிவிடவில்லை. இலங்கையின் அரசமைப்பு சட்ட விதி-2 “ஸ்ரீலங்கா குடியரசு ஓர் ஒற்றையாட்சி அரசாக இருக்கும்” என்று உறுதிபடக் கூறுகிறது. இதில் எந்த மாற்றமும் திருத்தமும் செய்யப்படவில்லை. அல்லது பிரான்சு, ஸ்பெ யின் போன்ற ஒற்றை ஆட்சி நிலவும் நாடுகளில் உள்ளது போல அதிகாரப் பரவல் நடந்து விடவில்லை. வடக்கு-கிழக்கு மாகாணம் ஈழத்தமி ழர்களின் வரலாற்று தாயகம் என்பது கூட ஏற்கப்படவில்லை.

இலங்கை நாடாளுமன்றம் என்பது ஒரே அவைதான் மக்களவை, மாநிலங்களவை என்ற இரண்டு அவைகளைக் கொண்டதாக திருத்தி அமைக்கப்படவும் இல்லை.

சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை அதிகாரங்கள் மாகாண அரசுக்குக் கிடையாது. இத்திருத்தத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட 9ஆவது அட்டவணை மாகாண அவையின் அதிகாரத்திற்குட்பட்ட இனங்களை வரிசைப்படுத்தி பட்டியல்-1 (List-1) என்று அறிவித்திருக்கிறது அதன் படி இலங்கை முழுவதற்கும் காவல் துறை ஆய்வாளர் நாயகம் (IGP) ஒருவரே. அவருக்கு கீழ்தான் இலங்கையின் ஒட்டு மொத்த காவல் துறையும் இயங்கும் அவருக்குக் கட்டுப்பட்டு மாகாணத்திற்கு துணை ஆய்வாளர் நாயகம் (DGP) இருப்பார். இவரை நியமிப்பதும் இலங்கை நடுவண் அரசே.

இலங்கை அரசமைப்புச் சட்ட 9ஆவது அட்டவணையில் இணைப்பு-2 ன்படி “மாகாணத்தின் நிலம் இலங்கை குடியரசு ஆட்சிக்கு உரிமை உடையதாகவே இருக்கும். அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் நில பறிமாற்றங்களும் இலங்கைக் குடியரசு ஆட்சி அதிகாரத்திற்குட் பட்டதே” என்று கூறுகிறது.

இந்தியாவில் நிலம், மற்றும், நில விற்பனை, நில பரிவர்த்தனை ஆகியவை மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த நிலை கூட 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப் படவில்லை.

ஈழத்தமிழர்களின் வாழ்வை பொருத்தளவில் காவல்துறை அதிகாரமும், காணி (நிலம்) தொடர்பான அதிகாரமும் உயிரானவ. இவை இரண்டும் மாகாண அரசுக்கு கொடுக்கப்படவில்லை. அங்கு உள்ள சிக்கலே சிங்களக் காவல்துறை இனவெறி காடையர்களாக செயல்படுகிறது என்பதாகும். அதே போல் இலங்கை அரசு தமிழீழ தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி அங்குள்ள நிலங்களை சிங்களர்களுக்கு வழங்குவது என்பது இன்னொரு முக்கியச் சிக்கல் இவை இரண்டுமே சிங்கள அரசிடம் தொடர்ந்து இருப்பது தீர்வை நகர்த்திச் செல்கிறபடி நிலையாகக் கூட அமைய முடியாது.

அதுமட்டுமின்றி 13ஆவது திருத்தப்படி உருவாக்கப்பட்ட மாகாண அவைக்கும் மாகாண முதலமைச்சருக்கும் வடக்கு கிழக்கு மாகாணம் தொடர்பாக வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) போடும் அதிகாரம் கிடையாது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தின் மீது ஒரு சிறிய வரி, உள்ளூரில் பயணிக் கும் வாகனங்கள் மீது வரி,வீட்டுவரி என மிக அற்பமான வரி விதிக்கும் அதிகாரம் மட்டுமே மாகாண அரசுக்கு வழங்கப்பட்டது. மாகாண செலவுக்கென்று இலங்கையின் நடுவண் அரசு நிதி அளிக்கிறது. அதுதான் மாகாணத்திற்கான மிகப் பெரும்பான்மையான நிதி.

இந்த நிதியைக் கூட மாகாண முதலமைச்சர் அல்லது அவரது அமைச்சரவை கையாள முடியாது. எந்த செலவு செய்வதாக இருந் தாலும் குடியரசுத் தலைவரின் இசைவு பெற வேண்டும் என இலங்கையின் அரசமைப்பு சட்ட விதி 19(14) வரம்பு விதிக்கிறது.

சரி. மாகாண அரசு விதித்து வசூலிக்கிற திரையரங்க வரி போன்றவற்றையாவது மாகாண முதலமைச்சர் கையாள முடியுமா என்றால் அதற்கும் அனுமதி கிடையாது. இலங்கை அரசமைப்புச் சட்ட விதி 24(1) ‘மாகாண நிதியை ஆளுநர் அனுமதி பெற்று முதலமைச்சர் கையாள வேண்டும்’ எனக் கூறுகிறது. நம் ஊர் ஊராட்சி மன்றத் தலைவரை விடவும் கீழான அதிகார நிலையில் அங்கு மாகாண முதலமைச்சர் வைக்கப்பட்டார்.

குருதி சிந்தி உயிரீகம் செய்து விடுதலை வேண்டி நின்ற தமிழீழ மக்கள் மீது இதைத்தான் தீர்வு என்று 13ஆவது சட்டத் திருத்தம் திணித்தது. வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலைப்புலிகள் இதை ஏற்க மறுத்ததில் வியப்பில்லை.

இந்த மாகாணச் சட்டத்தின் படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாண அவைக்கான தேர்தலையும் நடத்தினார்கள். அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்ததை ஏற்று கிட்டத்தட்ட தமிழீழ மக்கள் அனைவருமே வாக்களிக்க மறுத்தனர். ஆயினும் எட்டப்பன் வரதாஜபெருமாள் விரல் விட்டு எண்ணக்கூடிய வாக்குகளைப் பெற்று வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக திணிக்கப்பட்டார். இந்தியப்படையின் நிழலில் முதலமைச்சராக உலாவந்த அந்த வரதராஜபெருமாள் இந்திய அமைதிப்படை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தோற்று 1.3.1990 அன்று திரும்பிய போது அதன் கடைசி விமானத்தில் அவரும் ஏறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

அவ்வாறு இந்தியாவிற்கு ஓடி வருவதற்கு முன்னால் அந்த பொம்மை முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கூறியது கவனம் கொள்ளத் தக்கது.

அவர் சொன்னார் “நான் இந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஆனால் என் அலுவலகத்திற்கு ஒரு கதிரை (நாற்காலி) வாங்கு வதற்குக் கூட இலங்கைக் குடியரசுத் தலைவரின் இசைவும் நிதியும் பெற வேண்டியிருக்கிறது” என்றார். அதனால் இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஒரு தலைபட்சமாக தமிழீழ விடுதலையை அறிவிப்பதாக வரதராஜ பெருமாள் கூறினார்.

இதனால் அன்றைய இலங்கை பிரதமர் பிரேமதாசா வடக்கு கிழக்கு மாகாணங்களை கலைப்பதாக அறிவித்தார்.

இந்தியஅரசு வலியுறுத்தும் 13ஆவது சட்டத்திருத்ததின் நிலையும் அதன் வழியாக உருவாக்கப்பட்ட மாகாண அரசின் அதிகார நிலையும் இதுதான்.

அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லற்கரிய மாபெரும் ஆற்றலாக ஓங்கி இருந்ததால் அவர்களை அழிப்பதற்கு இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு ஓர் உத்தியாக 13ஆவது திருத்தத்தை சிங்கள பெரும்பான்மை நாடாளுமன்றம் அன்றைக்கு ஏற்றுக் கொண்டது.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாததால் இன்றைய சிங்கள பெரும்பான்மை நாடாளுமன்றம் படுசொத்தையான 13ஆவது திருத்தத்தைக் கூட ஏற்க முடியாது என்று கூறுகிறது.

சிங்களம் எந்த ஒரு சிறு உரிமையையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்காது, ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களோடு ஓர் அரசமைப்பின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் இதில் பெற வேண்டிய படிப்பினையே தவிர 13ஆவது திருத்தம் சிறப்பானது என்று வாதிடுவது அல்ல.

இது இப்போது 13ஆவது திருத்தத்தை வலியுறுத்துகிற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு முகப்பட்ட ஓர் விடுதலை இயக்கம் தமிழீழத் தாயகத்தில் இல்லாத சூழலை பயன்படுத்தி ஈழத்தமிழர் களின் அடிமை நிலையை நிரந்தரமாக்குவதற்கு 13ஆவது சட்டத் திருத்தத்தை தீர்வாக திணிக்க முயல்கிறார்கள்.

“ஈழத்தமிழர்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் டெசோவின் அடிப்படை நிலைபாடு என்றாலும் இடைக்கால தீர்வாக 13ஆவது சட்டத்திருத்ததை செயல்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்” என டெசோ தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார்.

“தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தை நினைவுபடுத்தும் அதே வேளை 13ஆவது திருத்தத்தை செயல்படுத்த இந்தியஅரசு ஆவன செய்ய வேண்டும்” என செயலலிதா தனது பங்கிற்கு நாடகமாடுகிறார்.

உண்மையில் கருணாநிதிக்கு இந்திய அரசின் நிலைபாட்டைத் தவிர வேறு நிலைபாடு கிடையாது என்பதை வேறொரு சிக்கலில் அவர் அளித்த அறிக்கையே ஒப்புதல் வாக்கு மூலமாக விளக்கும். குசராத் முதலமைச்சர் மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பட்ட கடிதத்தில் தி.மு.க. எம்பிக்கள் கையெழுத்திடவில்லை என விளக்கி 25.7.2013 அன்று அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “தி.மு.க.வை பொருத்தவரை மத்திய அரசின் எந்த ஒரு வெளிநாட்டுக் கொள்கையிலும் அதன் உள் விவகாரங்களில் குறிக்கிடுவதில்லை என்பதை நான் பலமுறை குறிப்பிட்டுருக்கிறேன்” என்று கூறுகிறார். எப்போதுமே தி.மு.க.வின் நிலைபாடு இதுதான். இலங்கை அரசு குறித்த இந்திய அரசின் நிலைபாட்டை பொருத்தும் இதே நிலைதான்.

இது இந்திய அரசின் நிலைப்பாடு மட்டுமல்ல. அமெரிக்க வல்லரசின் நிலைப்பாடும் இதுதான்.
அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அளித்துள்ளனர். “அமெ ரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக்கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது.

ஐ.நா.மன்றம் 2005 ஆம் ஆண்டு “பாதுகாக்கும் பொறுப்பு” (Responsibility To Protect- R2P) என்ற சட்டத் தீர்மானத்தை இயற்றியது.

“ஒவ்வொரு உறுப்புநாடும் இனக் கொலையிலிருந்தும் போர்க் குற்றங்களிலிருந்தும் இனத் தூய்மையாக்கலிலிருந்தும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களிலிருந்தும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன” என்று இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு செய்யத்தவறும் நாடுகளை அறிவுறுத்துவது அது இயலாத போது அந்நாடுகள் இத்தீர்மானத்தின்படி நடந்து கொள்வதற்கு நெருக்கமாக துணை செய்வது அதுவும் இயலாத சூழலில் ஐ.நா.வின் ஒப்புதலோடு படை நடவடிக்கை உள்ளிட்ட நேரடி தலையீட்டில் இறங்குவது என இதன் செயலாக்கத்திற்கான படி நிலை வழி காட்டலையும் ஐ.நா.வின் இத்தீர்மானம் வழங்குகிறது. இத்தீர்மானத்தின் படி எந்தெந்த நாடுகள் தொடர்பாக அமெரிக்கா செயல்படவேண்டும் என எடுத்துரைப்பதே ஆல்பிரைட்-வில்லியம்சன் அறிக்கையாகும்.

இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட்-வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்கஅரசு இலங்கைஅரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்துகிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலைபாடும் அமெரிக்க வல்லரசின் “நல்லிணக்கத்திற்குத் துணைபுரிந்தது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத்திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட்டுச் சதி வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

2009க்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது 2011க்குள் தமிழீழ விடுதலை கோரிக் கையை கொன்று புதைப்பது என்ற பீக்கான் திட்டம் (Beacon Project) சற்று தாமதமாக செயலாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சப்பான், இந்தியா, நார்வே, உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைக்கு எதிராக தீட்டிய திட்டமே பீக்கான் திட்டம் என்பதை இதற்கு முன் பல முறை விளக்கியிருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத அமைப்பு என வரையறுத்து தடை செய்த முதல் மேற்குலக நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கை பிளவுப்படக் கூடாது அதை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும் என்பது அமெரிக்க-இந்திய வல்லரசுகளின் உறுதியான திட்டமாகும்.

வீதிதோறும் அமெரிக்க ஏகாதிப் பத்தியத்தை எதிர்த்து தொண்டை கிழிய முழக்கமிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவின் விருப்பத்தைதான் தமிழீழச் சிக்கலுக்கான தீர்வாக முன் வைக்கிறது.

அமெரிக்க-இந்திய அச்சும் அவர்களது தமிழ்நாட்டு கங்காணிகளான டெசோவும், செயலலிதாவும், இந்த அச்சின் இடதுசாரி தளபதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும் ஒரே குரலில் ஒன்று பட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தம் என்று வலியுறுத்துவதற்கான காரணம் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்களிடமும் தமிழீழ கருத்துவாக்கெடுப்புக் கோரிக்கை வலுவடையாமல் சிதைப்பதற்குதான்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுநலவாய நாடுகளின் (காமன்வெல்த்) உச்சிமாநாடு நடக்ககூடாது என்றும், அவ்வாறு நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் கோரிக்கை தமிழர்களிடம் வலுப் பெற்று வரும் காலமிது. இனக் கொலைக் குற்றவாளி இராசபட்சே கும்பல் பன்னாட்டு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் வளர்ந்து வருகிறது. இச்சூழலில் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடந்து அதன் விளைவாக வரும் இரண்டு ஆண்டுகளுக்கு காமன் வெல்த் அமைப்பின் தலைவராக இராசபட்சே அமர்த்தப்பட்டால் பன்னாட்டு விசாரணையிலிருந்து அவரை பாதுகாத்து விடலாம் என இந்தியா கணக்குப் போடுகிறது.

கடந்த மார்ச்சு ஏப்ரலில் நடந்த மாபெரும் தமிழ் மாணவர் எழுச்சி மீண்டும் தலை தூக்கி தமிழீழ கருத்துவாக்கெடுப்பு, இராசபட்சே மீது பன்னாட்டு விசாரணை என்பது வலுபெற்றுவிடக் கூடாது என்பதில் தமிழீழ எதிரிகள் அனைவரும் ஒரே அணியில் நிற்கிறார்கள்.

தமிழீழம் தொடர்பான கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் போன்றவற்றிற்கு, செயலலிதாஅரசு தடை போடுவதன் பின்னணி இதுதான்.

13ஆவது திருத்தத்தை அப்படியே ஏற்க முடியாது என பசில் இராசபட்சே கொக்கரிப்பதை வைத்து 13ஆவது திருத்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏதோ ஆகப் பெரிய தீர்வு இருக்கிறது என்று படம் காட்ட இந்திய அரசும் அதன் கங்காணிகளும் முயல்கிறார்கள். தமிழீழத்திற்கான கருத்துவாக்கெடுப்பு என்பதை அரசியல் விவாத அரங்கத்திலிருந்து வெளியே தள்ளுவதற்கான சதியே இது.

இதனை சம்பந்தம் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்க வைப்பதற்கு இந்திய அரசு அழுத்தங்கள் கொடுத்து வருகிறது. இக்கூட்டணியின் சார்பில் வடக்கு மாகாணத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள நீதிபதி விக்னேசுவரன் ஒன்று பட்ட இலங்கைக்குள் கூடுமான வரை அதிகாரம் பெறுவதுதான் தீர்வு என பேசத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ஈழத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழீழ மக்களிடம் ஓர் சிதைவை ஏற்படுத்த இந்த சதிகாரர்கள் முயல்கிறார்கள்.

இந்தச் சதியை முறியடித்து தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு, பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயை நிறுத்துவது என்ற முழக்கங்களை அரசியல் அரங்கத்தில் இது தொடர்பான மைய பொருளாக நிலை நிறுத்த ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் விழிப்போடு இருந்து விரைவாகச் செயலாற்ற வேண்டும்.

காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக்கூடாது என்பதை உடனடிச் செயல் முழக்கமாக முன் வைத்து நமது இலக்கு நோக்கிய அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2013 ஆகஸ்ட்டு 15-30 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் கி.வெங்கட்ராமன் இதழின் இணை ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்.

http://kannotam.com