இனப்படுகொலையாளி மகிந்த சிறீலங்கா அரசிடம் சலுகைகள் பெற்று அதற்காக பணியாற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் 30 நாட்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம் – பதவியையும் இழக்கும் அபாயம்!

 

ஜ.நா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் சிறீலங்கா அன்றைய மகிந்த அரசு விழுத்திய போது அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர் தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் 50 வயது நிரம்பிய முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி.

 

இதற்காக இவர் குடும்பமாக இரண்டு தடவைகள் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார்.

 

முதல் தடவை ஏப்ரல் 2013 இலும் இரண்டாம் தடவை யூலை 2013 என குடும்பமாக சென்றுள்ளார். இரு தடவைகளும் முதல் தர விமான இருக்கைப் பயணங்கள் ஜந்து நட்சத்திர விடுதிகளில் தங்கல் என இவர்களின் அனைத்து பயணச் செலவுகளையும் சிறீலங்கா அரசே பொறுப்பேற்றுக் கொண்டது. அச் செலவு 50 ஆயிரம் பிரித்தானிய பவுண்களில் இருந்து ஒரு லட்சம் பவுண்கள் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது சிறீலங்கா பணத்தில் 1 கோடியே 4 லட்சத்தில் இருந்து 2 கோடியே 8 லட்சம் வரையாகும். இதற்கு பின்னரான காலப்பகுதியில் அதாவது 2013 நவம்பர் கடைசிப் பகுதியில் அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் சிறீலங்கா பயணம் செய்து யாழ்ப்பாணம் சென்றதும் போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற வேண்டும் எனவும் சிறீலங்காவில் வைத்து வலியுறுத்தியிருந்தார்.

 

பின்னர் 2014 மார்ச் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மார்ச் 19ஆம் நாள் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டு அன்றைய பிரதமர் டேவிட் கமரனுக்கு பேர்ஸ்லி கடிதம் எழுதியுள்ளார்.

 

இயன் பேர்ஸ்லியின் அவ்விடயங்களை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் பிரித்தானியப் பத்திரிகை டெய்லி ரெலிகிராவ் ஆதார பூர்வமாக வெளியிட்டது.

 

இவரது செயற்பாடு பிரித்தானிய பாராளுமன்ற நடைமுறையை பாரதூரமாக மீறும் செயலாகும்.

 

தான் தவறு இழைக்கவில்லை எனவும் விசாரணைக்கு தான் தயார் என்றும் பேர்ஸ்லி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பாராளுமன்ற விசாரணைகளில் முடிவே யூலை 18 2018இல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பரிகாரம் இவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டு அதிகபட்ச தண்டனையாக 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

 

புதிய பாராளுமன்ற ஒழுக்ககோவை நடைமுறைகளின் படி 10 நாட்களுக்கு மேல் ஒருவர் பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டால் இவரது தொகுதி வாக்காளர்களில் 10 சதவீதமானோர் இவரை மீளப் பெறவேண்டும் எனக்கோரி ஒரு மனுவை கையொப்பம் இட்டு கையளித்தால் இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதுடன் இவர் தொகுதியில் இடைத்தேர்தல் நடாத்தப்படும்.

 

இதற்கான முன்னெடுப்பில் ஏனைய கட்சிகள் உடனடியாக இறங்கியுள்ளதால் இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து இவர் பதவியை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.

 

இவர் மகிந்த அரசால் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் தற்போதை ரணில் அரசின் கையாளாகவும் இவர் தொழிற்பட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதும் இவர் சார்ந்த வட அயர்லாந்து மற்றும் ;சிறீலங்கா வர்த்தக உடன்பாடுகள் குறித்து தான் சிறீலங்கா தூதுவர் அமரி விஜயவர்தனாவுடள் பேசியதாக அவருடன் எடுத்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.

 

தமது அரசிற்கு துரோகம் இழைக்கும் வகையில் அந்நிய அரசொன்றிற்கு ஒடிக்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல நாடுகளில் உள்ளனர்.

 

இவ்வாறானவர்களுக்கான அச்சுறுத்தலாகவே இப்பிரித்தானிய ஒழுங்கு நடவடிக்கை அரங்கேறியிருக்கிறது.

 

சிவவதனி பிரபாகரன்.

Comments are closed.