தமது மிலேனியம் சலஞ் உடன்பாட்டை சிறீலங்கா அரசு தனது சொந்த அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திவருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு அது தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

முன்னைய ஐ.தே.க அரசு அமெரிக்காவிடம் நாட்டின் இறைமையை விற்றுள்ளதாக குற்றம் சுமத்திவரும் கோத்தபாயா ராஜபக்சா அரசு தற்போது பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் உடன்பாட்டு விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளதானது தேர்தல் உள்நோக்கம் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உடன்பாட்டின் நிதியான 480 மில்லியன் டொலர்களில் 10 மில்லியன் டொலர்களை முன்னைய அரசு பெற்றுக்கொண்டுள்ளதாக அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளபோதும் அமெரிக்கா அதனை மறுத்துள்ளது.

சிறீலங்காவுடன் மேற்கொண்ட மிலேனியம் சலஞ் உடன்பாடு தொடர்பான நிதி உதவி எதுவும் இதுவரை சிறீலங்காவுக்கு வழங்கப்படவில்லை எனவும், அந்த விவகாரத்தை தற்போதைய சிறீலங்கா அரசு அரசியல்மயப்படுத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று முன்தினம் (27) தெரிவித்துள்ளதாவது:

480 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த உடன்பாட்டின் நிதி இதுவரை சிறீலங்கா அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் சிறீலங்கா அரசு அதனை அரசியல் விவகாரமாக்கி வருகின்றது. நாம் இந்த நிதியை 30 நாடுகளுக்கு 37 தடவைகளுக்கு மேல் வழங்கியிருக்கின்றோம்.

எனினும் இந்த நிதியை ஏற்பதும், மறுப்பதும் சிறீலங்காவை பொறுத்தது என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த உடன்பாடு தொடர்பில் விசாரணைகளை மே;றகொள்வதற்காக சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா அமைத்துள்ள குழுவனது இரண்டு தடவைகள் தலா 7.4 மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் நிதியை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவம் எனினும் அது வழங்கப்பட்ட கணக்கு இலக்கங்கள் தொடர்பில் தகவல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் இந்த குழு தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்காவை சினமடையவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here