(NCCT) நிகழ்வில், ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்

0
603

denis-holiday-unகனடாவில் முதன் முதலாக அனத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) நிகழ்வில், ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் நீதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு FEB 16,2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 -11.30 மணிவரை மண்டபம் நிறைந்த மக்களுடன் RICHMOND HILL இல் அமைந்துள்ள SHERATON HOTEL இல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மனிதநேயச் செயல்பாட்டாளரும் 34 ஆண்டுகளாக ஐ.நா வில் சேவையாற்றியவரும், முன்னாள் ஐ. நா. வின் உதவிச் செயலாளர் நாயகமும், யேர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த மதிப்பிற்குரிய முனைவர் டென்னிஸ் ஹாலிடே அவர்கள் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் (NCCT) அழைக்கப்பட்டிருந்தார்.

மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்க பட்டிருந்த இந்த விருந்தோம்பல் நிகழ்வில் அனைத்து கட்சி கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நகரசபை முதல்வர் என பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்களும் வருகை தந்திருந்தமை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது. குறித்த நேரத்தில் ஆரம்பமான விருந்தோம்பல் நிகழ்வில் முனைவர் டென்னிஸ் ஹாலிடே அவர்கள் உரை மிகவும் சிறப்பாகவும் ஈழதமிழர்களின் எதிர்கால நலன் மற்றும் புலம்பெயர் தமிழரின் செயல்படுகள் குறித்தும் அமைந்ததோடு இலங்கையில் ஈழத் தமிழ் இனத்திற்க்கு நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை தனது ஆய்வுகள் மூலமும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் மூலமும் நிரூபித்தமை மக்கள் மத்தியில் மிகப்பெரும் நம்பிக்கையை தோற்றுவித்தது.

மேலும் அவர் தனது உரையில், இலங்கை தீவில் 1948 இல் இருந்து காலம் காலமாக ஆட்சி செய்த சிங்கள அரசுகளால் கட்டவிழ்க்கப்பட்ட தொடர் இனப்படுகொலைகள் வரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதி உச்சமானது. அத்தோடு தமிழினப் படுகொலை ஓயவில்லை. தமிழினப் படுகொலையின் 25 க்கும் மேற்பட்ட கூறுகளோடு அதன் சில வடிவங்கள் இன்னமும் இலங்கைத் தீவில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. டப்பிளின் தீர்ப்பாயம் அதை ஆய்ந்து அறிக்கையாக தந்துள்ளது.

ஐ.நா. தோற்றுப் போன நீதியை தீர்ப்பாயம் மீட்டு எடுத்து வந்துள்ளது. அனைத்துலகமும் இந்த தீர்ப்பாய அறிக்கை சொல்லும் உண்மைகளை ஏற்று நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழினப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் ஆகியும் அங்கே இன்னமும் மக்கள் சிங்கள அரசால் இனப்படுகொலைக்கு செய்யப்படுகின்றனர். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெறுகின்றது. ஈழத்தில் தமிழ்க் கர்ப்பிணிப் பெண்கள் கருசிதைவிற்க்கு உட்படுத்தப்படுவதில் இருந்து, சிங்களக் கலப்பு திருமணங்கள் என அனைத்துமே இனப்படுகொலையின் அங்கமென எடுத்து கூறினார். அதோடு இனப்படுகொலை என்றால் என்ன என்பதனையும் ஆழமான தனது அறிவின் மூலம் குறிப்பிட்டதோடு தொடர்ந்து உரிமைக்காக போராட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டார்.

இன்று உலகம் அறியவேண்டிய செய்தி யாதெனில் தமிழர்கள் இனிமேலும் இலங்கை தீவில் சிங்களத்தின் அடிமையாய் அழிவுகளுக்கு உள்ளாகி வாழ முடியாது. அவர்கள் விடுதலை பெறுவது ஒன்றே இன்றுவரையும் தொடரும் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமையும். அனைத்து உலகத்திடமும் இன்று மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய உண்மை இலங்கையில் இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருப்பது இனப்படுகொலையே என்பதாகும். சர்வதேச சுயாதீன யுத்தக் குற்ற விசாரணை ஒன்றின் மூலம் தமிழர்களின் மீதான இனப்படுகொலையாளி ஸ்ரீலங்கா அரசு தண்டனை பெறும் வரை தமிழர்கள் ஓயக்கூடாது. தமிழர்களுக்கு நீதி பிறக்க வேண்டும். அதற்கு மனிதம் போற்றும் அனைத்து நாடுகளும் கனடிய அரசு போல் குரல் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது மாந்த நேயம் போற்றும் மாந்தர்கள் கடன். தம் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது அந்த இனத்தை சேர்ந்த அனைத்து மக்களதும் கடன். தமிழர்கள் ஒவ்வொருவரும் நீதிக்காக குரல் கொடுக்கும் பரப்புரையாளர்களாக மாற வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே குரலாக ஒலித்தல் வேண்டும். அதுவே தமிழீழத்தின் திறவுகோல். தமிழீழம் கனவல்ல, அது ஒரு உண்மை, நிதர்சனம். இலங்கையில் ஈழத் தமிழ் இனத்திற்கு நடைபெற்ற இனப்படுகொலை நிரூபிக்கப்பட்ட பின் அதனை தொடர்ந்த சர்வதேச சுயாதீன வாக்கெடுப்பின் மூலம் தமிழீழமே தமிழரின் தாயகம் என்பது வாக்களிக்கப்பட்டு தமிழீழம் பிறக்க வேண்டும் என முன்னாள் ஐ. நா. வின் உதவி செயலாளர் நாயகம், மதிப்பிற்குரிய முனைவர் டென்னிஸ் ஹாலிடே அவர்கள் மிகவும் ஆணித்தரமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை மதிப்பிற்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டெனிஸ் ஹாலிடே அவர்கள் கனடியத் தமிழர் தேசிய அவையின் அழைப்பை ஏற்று 11ஆம் திகதி அன்று கனடாவிற்கு வருகை தந்தார். மறுநாள் பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும், கட்சியின் மற்றும் கட்சித்தலைவர்களின் ஆலோசகர்களையும் சந்தித்து இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளார்.

அத்தோடு கனடிய தமிழர் தேசிய அவையினரின் ஏற்பாட்டில் Mexico, Philipines மற்றும் Venezuela போன்ற நாடுகளின் தூதரகங்களுக்கும் சென்று இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதை தெளிவுபடுத்தினார். கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) மக்கள் சந்திப்புக் கூடத்தில் 2.14.2014 வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணியளவில் தமிழ் ஊடகவியளாளர்கள் சந்திப்பில் மக்கள் தீர்ப்பாயதின் அறிக்கை பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. 2.15.2014 அன்று கனடாத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினரை சந்தித்து ஈழத்துப் பெண்களின் அவலம் தீர்ப்பதற்கான வழிவகைகளை விரிவாக விளக்கினார்.

பின்னர் FEB 16, 2014 ஞாயிறு காலை பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அந்த மாணவர்களுடனான சந்திப்பு மிகவும் சிறப்பனதாக அமைந்ததாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். FEB 17, 2014 ஆம் திகதிவரை கனடாவில் தங்கியிருந்த முனைவர் டெனிஸ் ஹாலிடே அவர்கள் கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்ப்பாட்டில் கனடிய பாராளமன்ற உறுப்பினர்களையும் கட்சித் தலைவர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்தார். கனடிய தமிழர் தேசிய அவையினரால் (NCCT) முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு, அதன் நோக்கத்தை மிக சரியாக வெளிப்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கனடிய அனைத்து கட்சி பாராளுமன்ற மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் முதன் முதலாக ஈழத்தில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என வெளிப்படையாக பேசியது அங்கே நிறைந்திருந்த மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்திருந்ததை உணரமுடிந்தது. இனிவரும் காலங்களில் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) இவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் சுட்டிக்காட்டினர். நிகழ்வில் இளையோர், பல்வேறு அமைப்பினர், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் உணர்வாளர்கள் என பலர் வருகைதந்திருந்தனர். நிகழ்வின் நிறைவில் ஈழ தமிழ் மாணவி கீரா இரத்தினம் அவர்களால் வரையப்பட்ட எங்கள் தேசிய சின்னங்கள் ஒருசேர வரையப்பட்ட ஓவியம் ஏலத்திக்கு விடப்பட்டது. அத்தோடு ‘முள்ளிவாய்க்கால் கதறல்கள்’ என்னும் இறுவெட்டும் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக கனடிய தமிழர் தேசிய அவையினரின் (NCCT) கடந்த கால, நிகழ்கால, எதிர்கால செயல்திட்டங்கள் மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இன் நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் பின்வருமாறு: M.P Mark Adler, M.P Bruce Stanton, M.P Brad Butt, M.P Patrick Brown, M.P Olivia Chow, M.P John McCallum, M.P.P Glenn Murray, M.P.P Jagmeet Singh, ONDP President Neethan Shan, Markahm Mayor Frank Scarpitti, Councillor Gordon Landon, Councillor Logan Kanapathi, Councillor Raymond Cho, York Regional Police Sergeant John Khoshandish நிறைவான மண்டபம் நிறைந்த உணர்வாளர்களோடு கனடியத் தமிழர் தேசிய அவையினரால் நடத்தப்பட்ட நீதிக்கான விருந்தோம்பல் 2014, ஈழத்தில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதை நிறுவியதோடு அதனையே தொடர்ந்தும் ஐ.நா. வரை எடுத்து சென்று எமது தமிழீழ தேச விடியலுக்காக தொடர்ந்தும் பயணிக்கும் என்ற இலட்சிய உறுதிமொழியோடு இனிதே நிறைவடைந்தது.

முனைவர் டென்னிஸ் ஹாலிடே அவர்களின் முழுமையான உரை:http://www.youtube.com/watch?v=Ekg2HPPRFas&feature=share நிகழ்வின் நிழற் படங்களைப் பெற்றுக்கொள்ள:facebook.com/canadianncct மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவைதொலைபேசி: 416-830-7703 – 1.866.263.8622 மின்னஞ்சல்: info@ncctcanada.caஇணையத்தளம்: www.ncctcanada.ca