என் வாழ்நாள் அனுபவத்தோடு உங்களுக்கு கூறினால் புரியும் என்று நினைக்கிறேன்.

2009 ம் ஆண்டு ஈழப்போராட்ட வழக்கு ஒன்றில் அழைத்து சென்று 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கினார்கள். என் கால் முறிக்கப்பட்டது. நரம்புகள் தொய்ந்து போக கால்களை பிளந்து கட்டைகளைக் கொண்டு அடித்தனர்.

வெள்ளி பகல், சனி இரவு வரை பயிற்சி காவலர்களுக்கு எப்படி அடிக்க வேண்டும் என்று என்னையும் முதுகுளத்தூர் பூசேரி கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி என்ற தம்பியையும் பயன்படுத்தினர்.

என்னை காவல்நிலையத்தின் மத்தியில் நிறுத்தி வைத்தனர். பத்துக்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்களை அழைத்து வரிசையில் நிற்க வைத்தனர். ஒவ்வொருவராக என்னை அறையச்சொன்னான் இன்ஸ்பெக்டர். அவர்களால் என்னை அடிக்க மனமில்லாமல் மெதுவாக அறைந்தனர்.

உடனே அந்த இன்ஸ்பெக்டர் ” என்ன அறை இது? இப்டி அடி ” என்று என் கண்ணத்தில் அறைந்தான். பின் வேறு வழியின்றி வரிசையாக கண்ணத்தில் மாற்றி மாற்றி அறைந்தனர். காவல்நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் முதற்கொண்டு பல காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் செய்த தவறு என்ன தெரியுமா? ஈழத்தில் போர் நடப்பதை நிறுத்த சொல்லி காரைக்குடி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். இதுதான் குற்றம்.

காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்தவன் அய்யாத்துரை. அத்தனை அதிகார துஷ்பிரயோகத்திற்கும் காரணம் அவன்தான். நான் போராடியது ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில். ஆனால் அவன் என்னை அடித்தது எப்படி தெரியுமா? ” ஏன்டா மறப்பயலுக சேட்டையை இங்கேயும் வந்து காட்டுறயா?” என்று. ஏனெனில் அந்த இன்ஸ்பெக்டர் பள்ளர் சமூகம். முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் பகுதி.

இந்த தாக்குதல், அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. அதன்பின் தான் சாதியும் தமிழர் சமூக அரசியல் வாழ்க்கையும் பற்றிய தேடல் அதிகமானது. அதுவரை சாதிபற்றி சிந்தித்ததே கிடையாது.

இதில் முக்கியமானது என்னவென்றால் நான் மறவர், உடன் அதே சித்திரவதையில் பாதி பெறும் தம்பி தமிழ்மணி பள்ளர் சமூகம். இருவரையும் ஒரே அறையில் வைத்து அடிக்கும்போது சொன்ன வார்த்தை ” பள்ளனும் மறவனும் சேர்ந்து புரட்சி பன்றிங்களோ? என்று கத்தியவாறு தாக்கினான்.

பூட்டிய இருட்டு அறைக்குள் ஜட்டியோடு 15 நிமிடங்கள் தொடர்ந்து கட்டைகளாலும், பூட்ஸ் கால்களாலும் சித்திரவதை செய்யப்பட்டேன். இரவில் உடைபட்ட காலினை கிழிந்துகிடந்த சட்டையை கழிவறை தண்ணீரில் நனைத்து இறுக்க கட்டிக்கொண்டு வலியோடு பாதி மயக்கத்தில் தூங்கி காலையில் எழுப்பப்பட்டேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் காரைக்குடி நீதிபதியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பொதுவாக அப்போது காரைக்குடியில் நீதிபதி நல்லவர் வல்லவர் என்று சிலரால் பேசி கேள்விப்பட்டுள்ளேன். அவரிடம் நடந்ததையெல்லாம் சொன்னால் காவலர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற கற்பனையில் நானும் சென்றேன்.

நீதிபதி கேட்டார். உங்கள் மீது சப் இன்ஸ்பெக்டரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள் உண்மையா என்றார். பொய் என்றேன். அடித்தார்களா என்றார். ஆம் இரவு பகலாக சித்திரவதை செய்தனர். காலினை ஊண்ற முடியாமல் இருப்பதையும் பார்த்தார். எந்த பேச்சும் இல்லை. ஒரு வார்த்தைகூட காவலர்களைப் பார்த்து பேசவில்லை. 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அப்போது என் மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஐயா எச் ராஜா சொன்னதுமாதிரி நீதிபதியாவது மயிராவது என்றே எண்ணியவாறு வெளியே வந்தேன். காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாக என் வாழ்க்கையில் விளையாடியது.

சிலநாள் கழித்து என் பாதைகளை சற்று மாற்றினேன். அதே காரைக்குடியில் ஒரு சாதிய ரீதியிலான மேடையில் பேச நேர்ந்தது. மேடைக்கு கீழ் அவன் காவலுக்கு நின்றான். தேவர் குருபூஜை நெருங்கிய நேரம் அது. உச்சக்கட்ட கோபத்தில் ” சாதியின் பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒரு நாய் வரும் குருபூஜைக்குள் அடிபட்டு சாகும்” என்று பேசினேன். முகத்தை பார்க்க முடியாமல் நின்றான்.

பேசியது மட்டுல்ல. அந்த தாக்குதலுக்குப்பின் அவனையும் அந்த காவல் நிலையத்தையும் சிதைப்பது மட்டுமே முதல் குறிக்கோள் என்று இருந்தேன். தேவர் குருபூஜைக்கும் 10 நாட்களுக்கு முன்னர் விடுப்பு எடுத்து ஊருக்கு ஓடிவிட்டான். அதன்பின் போலி மருந்து விற்பனைக்கு தொடர்பு, வழக்கு கொடுக்க வந்த பெண்ணுக்கு செல்போனில் பாலியல் தொல்லை என்று ஆதாரத்தோடு ஊடகத்தின் வழியாக நிரூபித்தேன். இடைநீக்கம் செய்தார்கள். பின் கல்லலில் பணியாற்றினான். இப்போது இருக்கிறானா செத்துட்டானா தெரியவில்லை.

அதைத்தொடர்ந்து சில பொய் வழக்குகளை போட்டு கடந்த ஆண்டுவரை சிறையில் வைத்து மகிழ்ந்தனர். இன்று அப்படியான கோபம்தான் மனதில் இல்லையே தவிர என்றும் ஆறாத புண்ணாக உள்ளது.

எப்பேற்பட்ட துறையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்ற ஆதங்கம் நிறைய உண்டு. சமூக கட்டமைப்பில் மிக முக்கியமான ஒரு துறை பெரும் கேடுகெட்ட நிலைக்கு மாறியுள்ளது.

ஈழம் பற்றி அறிந்ததால், தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்ந்த வீட்டில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன் என்ற முறையிலும் , அவருக்கு உணவிட்ட தாயின் உணவை இரண்டு ஆண்டுகள் உண்டு மகிழ்ந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். ஈழத்தில் காவல்துறை எவ்வாறு இருந்தது என்பதை தமிழ்நாடு காவல்துறை அறிந்துகொள்ள வேண்டும்.

காவல்துறையின் கண்ணியமிக்க நபர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார்கள். நான் பார்த்ததில்லை. அப்படி இருந்தால் நீங்கள் உயர் பதவிக்கு முன்னேறுங்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு கீழுள்ளவர்களை கண்ணியப்படுத்துங்கள்.
உங்களையும் மண்தான் தின்று அழிக்கப்போகிறது என்பதை மறக்காதீர்கள்.

தமிழ்நாடு ஈழம்போன்ற ஒரு நாடாகவும், அதுபோன்ற கண்ணியமிக்க காவலர்களை தமிழ்நாடு பெறவேண்டும் என்ற ஆசை இதுவரை நிறைவேறவில்லை. இனிமேல் தானாக நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இல்லை. இயற்கை இப்படியானவர்களுக்கு பாடம் புகட்டும்.

இயற்கை கொடுக்கும் தனிமனித துன்பங்கள், பிணிகள் தீயவர்களை மனிதனாக மாற்றும். நல்லதே நடக்கட்டும்.

– ஏனாதி பூங்கதிர்வேல்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here