விளையாட்டை விளையாட்டாக பார், சினிமாவை சினிமாவாக பார் அதில் அரசியல் கலக்காதே என்று அவ்வப்போது குரல்கள் எழும், ஆனால் இந்த குரல்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக எழாது. ஆதிக்கத்தில் உள்ளவனை காப்பாற்ற நடுநிலை எடுக்கும் அறிவுசீவிகள் எடுக்கும் நிலை தான் இது.

With-You-Withut-You
With You, Without You என்ற படமும் அப்படித் தான். ஆதிக்கத்தில் உள்ள சிங்களவனுக்கு இந்த படம் புத்தி சொல்லலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனையை பதிவு செய்ய தவறி இருக்கிறது. இது சிங்களவர்களுக்கான படம். தற்போது நடந்து வரும் போலி “மறுவாழ்வு” திட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என்றே இதை காண வேண்டியுள்ளது. சிங்களவர்களுக்கு வலி உள்ளது என்று படம் சொல்கிறது. இது தான் போருக்கு பின்னர் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் சிங்களம் செய்து வரும் பிரச்சாரம். அதை திறம் பட செய்திருக்கிறது இந்தப் படம். ஒரு கலை நேர்மையாக இருக்கும் போது மட்டுமே அது சிறந்த படைப்பாக மாறுகிறது. இந்த படத்தில் அந்த நேர்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். திரைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

1. படத்தின் களம் குறிப்பாக காலம் தெளிவாக இல்லை. 2009 ஈழ போருக்கு முந்தையதா? அதற்கு பின்னானதா? கதை சொல்லவில்லை

2. திரிகோண மலையில் ஒரு ராணுவ முகாமில் தமிழ் பெண் சில சிங்கள ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது, திரிகோணமலையில் கடந்த பத்தாண்டுகளாக தமிழர் படைகளுக்கும் – சிங்கள இராணுவத்திற்கும் மோதல் நடந்ததா என்ற கேள்வி எழுகிறது? பதில் இல்லை

3. படத்தின் நாயகி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறார், எப்படி? யாழ்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பேசுவது இலகுவானதா?

4. சிங்களவர்களால் பிரச்சனை என்று நம்பும் ஒரு பெண், சிங்களப் படைகளால் தனது சகோதரர்களை பலிகொடுத்த ஒரு பெண், பெற்றோர்களை தொலைத்து தனியாக இருக்கும் ஒரு தமிழ் பெண், ஒரு சிங்கள ஆணைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா? போர் காயங்களை தமிழர்கள் மறக்கத்துவங்கி விட்டார்கள் என்று இயக்குனர் நிறுவ முயல்கிறாரா?

5. யாழ்பாணத்தில் உள்ள திரையரங்குகளில் போர் காட்சிகளை மட்டுமே திரையிடுவார்கள் என்று அந்த தமிழ் பெண் கூறுகிறார்.

6. ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ விரனை திருமணம் செய்த அப்பெண், அவன் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் காப்பாற்றியவன் என்று தெரிந்தவுடம் அதிர்ச்சிக்குள்ளாகுவதாக கதை சொல்கிறது. ஆனால் அவனை மன்னித்து மீண்டும் அவனுடன் வாழ முனைகிறாள். தொடர்ந்து மனச்சிதைவுக்குள்ளாகும் அவள், உன்னைக் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடு என்றவாறே தற்கொலை செய்து கொள்கிறார். இது தமிழர்கள் சிங்களவர்கள் அன்பு செலுத்தினால், அவன் பல கொலைகளை செய்த ராணுவ வீரனாகவும் இருந்தாலும் மன்னிக்கிறார்கள் என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ இனப்படுகொலை மறந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது இது.

ஒரு படத்தின் திரைக்கதை, படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாமும் உலகத் தரத்துடன் இருந்தாலும் அது சொல்ல வரும் நியாயம் என்பது மிக முக்கியம், குறிப்பாக அரசியல் சார்ந்த படங்கள். அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக அரசியல் நியாயத்தை மழுப்பும் செயலையே செய்திருக்கிறது.

சரவணன் குமரேசன்.