அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார்

0
621

sister-missingகாணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா படையினரால் அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளா நவிப்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல்போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றிருந்தவர்.

இந்நிலையில் கிரிமினல் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி சிறிலங்கா அரச படையினர் அச்சிறுமியின் வீட்டினைச்சுற்றி வளைத்திருந்தனர்.

பிந்திய செய்திகளின்படி அச்சிறுமி மட்டுமே சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காவல்துறை ஒருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, சிறிலங்கா இராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலை மூடிமறைத்துள்ளார்.

சிறுமியின் கதை :

என் அண்ணாவ தாங்கோ .., ” ” என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க… “என காணாமல்போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் .

அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள்.

இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள்.

புளியம்பொக்கணை முசுறன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி தர்மபுரம் மகா வித்தியாலையத்தில் தரம் 8 லில் கல்வி கற்று வருகிறாள்.

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி.

இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார்.

இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார்.

அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள்.

பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள்.

அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள்.

அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள். தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் L.L.R.C புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள்.

அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள்.

அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்.

கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய்.

தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை.

தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள்.

தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள்.

அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள்.

குறித்த சிறுமி பற்றி தாய் கூறுகையில்

இவள் அண்ணா வேணும் என்று அழுது கொண்டு இருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்துகிறாள் இல்லை. வீட்டிலும் வெறித்து பார்த்து கொண்டு இருப்பாள். திடீர் திடீர் என அண்ணா வேணும் என அழுவாள்.

ஏம்மா அண்ணாவை விடுனம் இல்லை ? அண்ணாவை எங்கே தடுத்து வைச்சிருபாங்கள் ? அண்ணாவை இன்னுமா சித்திரவதைப்படுத்துவாங்க ? எப்ப அம்மா அண்ணாவை விட்டுவாங்க ? என்றெல்லாம் கேட்டு அழுவாள் எனக்கு என்ன சொல்லுரதேன்றே தெரியாமல் இருக்கும்.

பள்ளிக்கூடம் போகாமல் என்னோடு போராட்டங்களில் கலந்து கொண்டு அண்ணா வேணும் என்று அழுகிறாள். பள்ளிக்கூடம் போய் படி என்றா அண்ணா முதல்ல வரட்டும் அப்புறம் படிக்கலாம் என்கிறாள்.இப்ப இவளை நினைச்சு இவள் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது.என அன்று ஒருநாள் அவள் தாயார் கூறினார்.

அந்த சிறுமியோ என் அண்ணா எங்கே ? என் அண்ணாவ எங்கே வைச்சிருக்கிறீங்க ? ஏன் என் அண்ணாவை என்கிட்ட இருந்து பிரிச்சு ஏன் என்னை அநாதை ஆக்கினீங்க ? எனக்கு என் அண்ணா வேணும் என கதறி அழுது கொண்டே இருந்தவள் இன்று அவளும் கடத்தப்பட்டு விட்டாளாம்.