அனைத்துலக பூகோள அரசியல் வலைக்குள் சிக்கிய சிங்கங்கள் தமக்குள் மோதலை ஆரம்பித்துவிட்டன. சிங்களச் சிப்பாய்களின் அணிவகுப்பின் போது சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் முன்னாள் இந்திய பிரதமரான காலம் சென்ற ராஜுவ் காந்தியை தாக்கிய போது அமைதி காத்த இந்திய தேசம் தற்போது சிறீலங்கா அரச தலைவரை கொல்ல துணிந்து நிற்கின்றது.

 
சிங்கள தேசம் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட போது அவர்களை மயில் இறகால் தடவிக் கொடுத்து செல்லமாக கண்டித்த மேற்குலகம் தற்போது சிங்கள தேசத்தின் துட்ட கெமுனுக்களை போர்க்குற்றவாளிகள் என வெளிப்படையாகக் கூறுகின்றது. சிறீலங்காவிற்கான பொருளதாரா உதவிகளை முடக்கப்போதவதா மிரட்டுகின்றது.

 
தேடுவாரற்கு கிடந்த தமிழர் தரப்பை சந்திப்பதற்கும், விடுதலைப்போர் தொடர்பில் தமிழ் மக்களை உசுப்பேற்றுவதற்கும் மேற்குலகமும் இந்தியாவும் போட்டி போடுகின்றன. திடீரென யாழப்பாணம் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவாளன் தமிழ் மக்களின் விடுதலைப் போரை முன்னெடுக்க தாம் ஆதரவு தருவதாக சபதமிடுகின்றார்.

 
தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் தாம் உதவுவோம் என கூறுகின்றார். மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் ஆதிக்கப்போட்டியில் சிறீலங்கா பிளவுபட்டு நிற்கின்றது. தமது ஆட்சி அதிகாரங்களை இழந்த சிங்கள தேசம் தற்போது நாடாளுமன்றத்தை சட்டவிரோதமாக கலைத்துவிட்டு மீண்டும் ஒரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றது.

 
எதிர்வரும் தேர்தலில் சிங்களத் தரப்பில் எந்த பிரிவு ஆட்சியை கைப்பற்றினாலும், அவர்களை மறு தரப்பு நிம்மதியாக ஆட்சி புரிய விடப்போவதில்லை, சிங்கள தேசத்தில் 1971 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஜே.வி.பி கலவரம் போன்றதொரு கலவரத்தை ஏற்படுத்த மேற்குலகம் முனைந்து நிற்கின்றது.

 
எனவே தான் வன்முறைகளும், கலவரங்களும் ஏற்றடலாம் என அமெரிக்கத் தூதரகம் எதிர்வு கூறும் அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுகின்றது.

 
அதே சமயம், தமிழ்த் தரப்பையும் தமது கைக்குள் கொண்டுவர இரு தரப்பும் முனைப்புக் காட்டுகின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது ஒரு மிகவும் சிறந்த சந்தர்ப்பமாகும், ஆனால் அதனை கையாள்வதற்கு எமக்கு மிகவும் சிறந்த தலைமைகள் களத்திலும், புலத்திலும் தேவை.

 
தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் களத்தில் அவர்களுகான பணியை இதுவரையிலும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டே உள்ளது. அதனை மறுக்கவும் முடியாது. அதாவது அவர்கள் செயற்திறனற்ற முறையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவக் கதிரைகளை நிரப்பியவாறு ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளனர்.

 
ஆனால் இந்த வெற்றிடத்தை கலைத்து மீண்டும் செயற்திறன் மிக்க தமிழத் தேசியத்தின் மீது பற்றுள்ளவர்களை கொண்டுவரும் சந்தர்ப்பத்தை சிறீலங்காவின் நாடாளுமன்றக் கலைப்பு எமக்கு வழங்கியுள்ளது.

 
அதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட தமிழத் தேசிய மக்கள் முன்னனி தற்போது கடுமையாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது தற்போதைய உறுப்பினர்களை மீள் ஆய்வு செய்ய வேண்டும்.

 
புலம்பெயர் தமிழ் மக்களும் தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருக்காமல், தாயகத்தில் உள்ள தமது உறவுகளுடனும், நண்பர்களுடனும், பாடசாலை தோழர்கள் மற்றும் தோழிகளுடனும் பேச வேண்டும். எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற கருத்தை தாயகத்து மக்களிடம் விதைக்க வேண்டும்.

 
அரசியல் கட்சியின் பெயருக்காக வாக்களிக்கும் வழக்கத்தை நாம் மாற்ற வேண்டும், தகுதியானவர்களை நாம் தேடவேண்டும். ஒட்டுக்குழுக்களும், தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகள் சார்பாக போட்டியிடுபவர்களும் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

 
தமிழத் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் எதனைச் செய்தாலும் அதனை மறைத்து அவர்களுக்கு மீண்டும் ஆதரவுகளை தெரிவித்து தமிழ் மக்களின் விடுதலையை முறியடிப்பதற்கு அதன் பல ஆதரவாளர்களும், அவர்களுக்கு ஊக்கமளித்து தமிழ்த் தேசிய ஆதரவாளர்களை புறம்தள்ளும் பல ஊடகங்கள் தாயகத்திலும், புலத்திலும் உள்ளன.

 
ஆனால் அவர்களை முறியடித்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் நாம் சமூக வலைத்தளங்களையும், தாயகத்து மக்களுடனான தொடர்புகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

 
தமிழத் தேசியத்தை கட்டியெழுப்புவதிலும், தமிழ் மக்களின் விடுதலைக்கு உழைப்பதிலும் ஈழம் ஈ நியூஸ் தனது முழுமையான பங்களிப்பை வழங்கும், அதற்கான உங்கள் ஆதரவுகளையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

 
ஈழம் ஈ நியூஸ்.