அரசியல் தீர்வுக்கான ஐ.நா. சபையின் தோல்வியுற்ற தீர்மானம்! – யாதவன் நந்தகுமாரன்

0
577

UN-Srilankaவருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் உத்தேச தீர்மானத்தின் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களும் சருவதேச விசாரணை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கையரசும் காத்திருக்க உலகம் கடந்த ஆண்டு தோல்லியுற்ற தீர்மானத்துக்காக மீண்டும் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறது.

உணர்வுகள் மூலமும் வார்த்தைகளுள்ளும் தேடமுடியாத முள்ளிவாய்க்கால் பேரவலம்‚ யுகங்களையே விழுங்கிய பெருந்துயர் இன்று பேராற்றலாகி உலகின் கைகளில்‚ தமிழர்களின் இதயங்களில் தகித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 2013 இல் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினையும் அத் தீர்மானம் வெற்றிபெற்றதா என்பதையும் பார்த்தால் ஐ.நா 2013 இலே கூடத் தோற்று விட்டமை புலனாகும்.

கடந்த ஆண்டில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தில் இரு முக்கிய விடயங்கள் இருந்தன. வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் (மாற்றம்) ஏற்பட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது ஒன்று. போரினால் அழிவுற்ற தமிழ் மக்கள் அழிவிலிருந்து மீழெழுவதற்கான மறுவாழ்வுத் திட்டத்திற்கு சருவதேச நிபுணர்களின் தொழில்நுட்ப உதவி (Technical Assistance) பெறப்பட வேண்டும் என்பது மற்றொன்று. சருவதேசம் தமிழ் மக்களின் 50 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்குரிய தீர்வாக வடமாகாண சபையைக் கருதி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தமிழ் மக்கள் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்படி ஐ.நா. சபையைக் கோரவில்லை. ஆனால் ஐ.நா. தீர்மானத்தை மதித்து வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஏகோபித்த முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்திருந்தார்கள். வடமாகாண சபை அமைக்கப்பட்டது. இன்று வட மாகாண சபையால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளமை நீரூபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னைநாள் முதலமைச்சராய் இருந்த சுதந்திரக் கட்சி அரசின் பிள்ளையானே தன்னால் ஒரு சாதாரண கடைநில ஊழியரைக் கூட நியமிக்க அதிகாரமில்லால் இருந்ததை சில வருடங்களுக்கு முன்னர் பகிரங்கமாகக் கூறியிருந்தார். வடக்கில் ஐ.நாவின் பிரேரணையை செயற்படுத்த எந்த ஏது நிலையும் இல்லை என வடமாகாண சபை மூலம் கடந்த ஆண்டில் ஐ.நா.விற்கு தமிழர்கள் நீரூபிக்க வேண்டியிருந்தது.

வடமாகாண சபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என ஐ.நா. சபை கருதி 2013 இல் இத் தீர்மானத்தைக் கொணர்ந்ததா? அல்லது இத்தீர்மானம் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வாக இந்தியாவால் இடைச் செருகப்பட்டதா? ஐ.நா. வின் தோல்வியுற்ற இத் தீர்மானத்தை பிரேரித்தவர்களா இவ்வாண்டும் பிரேரணையைத் தீர்மானிக்கப் போகின்றனர்?

கடந்த ஆண்டு தான்கொணர்ந்த தீர்மானம் தோற்றதெனின் ஐ.நா. எவ்வாறான தீர்மானத்தைக் இவ்வாண்டு கொண்டு வரவேண்டும்? 2013 முன்மொழிந்த தீர்மானம் இலங்கையில் தோல்வியடைந்ததில் இருந்து ஐ.நா. பாடம் கற்றிருந்ததா? எல்லோருமே சிங்கள அரசினால் தமிழ் மக்கள் மீது இழைகப்பட்ட குற்றங்களுக்காக‚ இன அழிப்புக்காக சருவதேச சுயாதீன விசாரணை ஒன்று நிகழ வேண்டும் என்று கோருகின்றனர். இச் சருவதேச விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர இயலுமா? அல்லது ஐ.நா. எதிர்பார்க்கும் அரசியல் தீரவைத்தான் பெற்றுத் தர இயலுமா? அல்லது 2009 மே இற்குப் பின்னரும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பைத் தடுக்கத் தான் இயலுமா?

இலங்கையரசு இதுவரை நம்பகரமான உள்ளக விசாரணையை நடத்தவில்லை எனவே இலங்கையரசு மீது சருவதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானித்துள்ளதெனின் இச் சருவதேச விசாரணையைத்தான் தமிழ் மக்ககள் இன்று கோருகின்றனரா? தமிழ் மக்களின் விருப்பந்தான் என்ன? தமிழ் மக்களின் விருப்பத்தை அறிய ஐ.நா. மேற் பார்வையில் பொதுவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை ஐ.நா. பொறி முறை யொன்றை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் தனித்துப் பிரிந்து செல்ல விரும்புகிறார்களா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அடிமைகளாக வாழ விரும்புகிறார்களா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க சர்வசன வாக்கெடுப் பொன்றை தமிழ் மக்கள் மத்தியில் நடத்த ஐ.நா. ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும். இதற்கான புறச் சூழலை ஏற்படுத்த ஐ.நா. தனது பலத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற வகையிலேயே ஐ.நா. தீர்மானம் அமைய வேண்டும். இதுவே தோல்வியுற்ற கடந்த ஆண்டுத் தீர்மான்திற்கு சரியான மாற்று வழியாகும். ஏனெனில் தமிழ்மக்களுக்கு மாகாண சபையைத் தீர்வாகத் தரச் சொல்லித் தமிழ் மக்கள் கேட்க வில்லை. ஐ.நா. தீர்மானமே மாகாண சபையாக இருந்தது. தமிழ் மக்கள் இத் தீர்மானத்தை மதித்து தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்தார்கள். இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட சாதாரண அதிகாரத்தைக் கூட வடமாகாண சபையால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஐ.நா. தீர்மானம் தோல்வியடைந்தது.

மத்தியில் உள்ள இலங்கையின் அனைத்து சிங்களக் கட்சிகளையும் சேர்ந்த ஆட்சியாளர்களில் ஒருவர் கூட வடமாகணசபை இயங்குவதற்கு வழிவிடவேண்டும் என்று குரல் கூடக் கொடுக்கவில்லை. வட மாகாண சபைக்குரிய அதிகாரத்தை விடுங்கள் இலங்கையின் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கிய வாகனங்களையோ அன்றி வாகனங்களைத் தீர்வையின்றி கொள்வனவு செய்யும் அனுமதிப்பத்திரங்களையோ ஏன் இன்று வரை இலங்கையரசு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. தோல்வியுற்ற ஐ.நா. தீர்மானத்திற்குரிய மாற்று வழி தான் என்ன? தமிழ் மக்களின் விருப்பததை அறிவதே வழி. மக்கள் இவ் விருப்பத்தை 1977பொதுத் தேர்தலிலேயே வெளிப்படுத்தியிருந்தார்கள். பின்னர் 2004 பொதுத் தேர்தலிலும் மீள வலியுறுத்தியிருந்தார்கள். இன்று சருவதேசம்‚ ஐ.நா. செய்யத்தக்க ஒரே பணி தமிழ் மக்களின் விருப்பத்தை அறிவதே.

2008 – 2009 இல் தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது மௌனம் காத்த ஐ.நா. பிரதிநிதிகள் இன்றும் வடபகுதிக்கு வருகின்றார்கள்; போகின்றார்கள். தமிழ் மக்களின் விருப்பம் என்ன என்று எப்போதாவது மக்களைக் கேட்டார்களா? தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்டா கடந்த ஆண்டு தீர்மானம் கொணர்ந்தார்கள்?

மாகாண சபை இயங்க முடியாத இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனியரசை அமைக்க விரும்புகிறார்களா என்பதை பொது வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் அறிவதுதான்.

ஒரு மிகப் பெரிய தேசமே இலங்கையிடம் 70 ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருக்கிறது. அவ் அடிமைப்பட்ட தேசத்தின் இராசதந்திரிகளின் ஆலோசனை பல தடவை தோற்றுப் போனதை ஐ.நா. உணரத் தவறுமெனில் இவ் ஆண்டும் ஐ.நா. தோற்றுப் போகும்.

2014 மார்ச்சில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இலங்கைக்கு நிபுணர்குழுவை அனுப்பவும் இலங்கை மீது சில கட்டுப்பாடுகளை விதித்தும் கொண்டுவரப்படும் உத்தேச தீர்மானம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை. யாருக்கு ஐ.நா. தண்டனை வழங்கப் போகிறது? இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்து குற்றமிழைத்த இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவிற்கா அல்லது சனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கா? ஆணையிட்டவர்களுக்கா அல்லது நேரடியாகக் குற்றமிழைத்த இலங்கை இராணுவத்திற்கா? சருவதேச விசாரணை சாத்தியமற்றது என்பதையும் உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வாய்ப்பே இல்லை என்பதையும் சருவதேச விசாரணை தமிழ் மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதையும் ஐ.நா. உணரத் தவறிவிட்டதா? முற்றுமுழுதான இராணுவ ஆக்கிரமிப்பினுள் தமிழினத்தை கருவழிக்கும் இரகசிய வேலைத்திட்டங்கள் வடகிழக்கில் முன்னேடுக்கப்படுவதை ஐ.நா.சபை உத்தேசித்துள்ள சுயாதீன சருவதேச விசாரணை என்ற தீர்மானம் தடுத்து நிறுத்தப் போவதில்லை என்பதை ஐ.நா. சபை நிபுணர்களால் அறியமுடியாமல் போய்விட்டதா?

ஐ.நா. சபை இலங்கைத் தமிழர்களை அழிவிலிருந்து பாதுகாக்க விரும்பின் ஐ.நா. படையை அனுப்பி (இந்தியப் படையை அல்ல) வடகிழக்கிலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பொது வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப் படவேண்டும். தமிழ் மக்கள் போரழிவிலிருந்து மீண்டு தமக்கான பாதுகாப்பை உருவாக்கிக் கொள்வதற்கு ஐ.நா.சபை உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேற் கூறப்பட்ட விடயங்களைக் கருத்திலெடுக்காது ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் போர்க்குற்றத்திற்கான சருவதேச சுயாதீன விசாரணை என்ற தீர்மானம் 2014 இலும் ஐ.நா.சபையின் தோல்வியுற்ற தீர்மானமாகவே இருக்கும்.