Tamilmaranஓர் இனத்தின் ஒட்டிமொத்த இருப்பே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, அந்த இனம் தொடர்ச்சியான இராணுவ முற்றுகைக்குள்ளும், அடக்குமுறைச் சட்டத்துக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கும் நிலை தொடருமானால், அந்த இனத்திற்குரிய மாற்றுவழி குறித்து சர்வதேச சமூகத்தைச் சிந்திக்க வைக்கவேண்டிய நிர்பந்தத்தை தமிழர் தரப்பு ஏற்படுத்த வேண்டுமெனக் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி. தமிழ்மாறன் தெரிவித்திருக்கிறார்.

 

அத்துடன் அண்மைய ஆட்சிமாற்றம் வழங்கியுள்ள ஜனநாயக வெளியைப் பயன்படுத்தித் தமிழர்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் உள்நுழையும் சக்திகளின் பல்வேறு வடிவங்கள் தொடர்பிலும் தமிழர் தரப்பு கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் “ஜெனீவாத் தீர்மானம்- மெய்நிலையும் அரசியலும்”என்ற நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பீடாதிபதி தமிழ்மாறன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

 

பிரத்தியேகமாகக் கொழும்பு மிரருக்குக் கிடைக்கப்பெற்ற அவரது ஆய்வுரையின் ஒரு பகுதி:

 

“நீண்டகாலத்தின் பின்னர்கிளிநொச்சியில், பகிரங்கக் கூட்டமொன்றில், அதுவும் ஜெனீவாத் தீர்மானம் பற்றிய நூல் வெளியீட்டில் பேசக் கிடைத்தமையையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். இலங்கையில் நடந்தேறிய பாரதூரமான மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான நடவடிக்கை பற்றியே ஜெனீவாத் தீர்மானங்கள் நான்கும் பேசுகின்றன. நான்காவது தீர்மானத்தின் கீழ் கோரப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையின் பிற்போடல் பற்றியே தற்போது வெகுவாக விவாதிக்கப்படுகின்றது.

 

“போராட்டத்தின் தன்மைபற்றியோ அதன் நியாயத்தைப் பற்றியோ அல்லது அரசு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளின் சட்டத் தன்மை பற்றியோ இத்தீர்மானங்கள் எதுவும் பேசவில்லை என்பதை முதலில் கவனிக்கவேண்டும்.

 

சர்வதேசத்தின் அக்கறை

 

“நான்கு தீர்மானங்களிலும், அரசியல் தீர்வு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப் பரவலாக்கல் பற்றியும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டபோது உரிய வழிமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறுதலுடன் நிறுத்தி விடுவதால் போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றிய அபிப்பிராயம் எதனையும் கவனமாக விலக்கியுள்ளளன.

 

“இங்கேதான், நாங்கள் நியாயப்படுத்த வேண்டிய விடயங்களில் கவனக் குவிப்புச் செய்வது தற்போது என்றுமில்லாதவாறு அவசியமாகத் தேவைப்படுகின்றது.

 

“சர்வதேசத்தின் அக்கறை என்பது இதற்கு மேலாக இருக்க முடியுமா என்பதையும் நாம் எம்மைப் பார்த்துக் கேட்டேயாகவேண்டும். இது விடயம் எம்மவரை ஒரு முக்கோண வயப்பட்ட நிலைப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றது. சர்வதேசச் சட்டமீறல்கள் பற்றிய சர்வதேச சமூகத்தின் அக்கறை ஒருபுறம். இந்த அக்கறைகூட எந்தளவுக்கு இதயசுத்தியுடன் கூடியது என்பது வேறுவிடயம். ஆக, சர்வதேசச் சட்டமீறல் என்பது முக்கோணத்தின் உச்சியில் உள்ளது. மறுகோணத்தில் உள்ளது வல்லாதிக்க சக்திகளின் சுயநலனாகும். இதில் பிராந்தியசக்திகளின் நலன்களும் முதன்மை பெறுகின்றன.

 

“மூன்றாவது முனையிலுள்ளதே எமது அரசியல் தீர்வுபற்றிய விடயமாகும். போர்க்குற்ற மீறல்களைச் சர்வதேச சமூகம் தனது கையிலெடுத்துள்ளமை எமக்கான அரசியல் தீர்வுக்கான அக்கறை காரணமாக அல்ல என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் அதனை ஏன் நாங்கள் வலியுறுத்த வேண்டும்?

 

“அரசியல் தீர்வுபற்றிய இலங்கையின் வாக்குறுதி இந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை சர்வதேச விசாரணைக்கான எமது விருப்புக்குத் தார்மீக பலத்தைக் கொடுக்கின்றது என்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. இதுவரை உள்நாட்டு மட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததே வரலாறாக உள்ளது. ஆயின், இனி நாங்கள் செய்ய வேண்டியது என்ன?

 

“எங்களைச் சந்திக்கின்ற இராஜதந்திரிகள் யாவரும் எதை எம்மிடம் இருந்து எதிர்பார்த்து வினாத் தொடுக்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். எமது இறுதி இலக்கு எது என்பதில் நாங்கள் மிகவும் குறியாக இருக்கும் மட்டும் இத்தகைய சந்திப்புக்கள் சரணாகதியாகிவிடும் என்று எவரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்ற ஜெனீவாத் தீர்மானங்களை எந்தளவுக்கு எதிர்காலத்தில் சர்வதேச அரங்குகளில் பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அதியுச்சப் பயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

 

சர்வதேச விசாரணை

 

“தமிழ்த் தேசியத்தின்பால் உண்மையான பற்றுறுதி கொண்டோர் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கும் வெறுமனே தேர்தல்கால சுலோகமாக அதனைப் பாவிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டினைத் தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். எல்லாமே சர்வதேச சமூகத்தினால் பெற்றுத் தரப்படும் என்று இலவுகாத்த கிளிகளாக ஏமாறுவதற்கு இன்னும் நாங்கள் தயாராக இல்லை.

 

“அதேவேளை,சர்வதேச சமூகத்தின் அழுத்தம் தொடர்ந்தும் இலங்கை அரசுமீது இருந்துவரவேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

 

“அந்தளவில், போர்க்குற்ற விசாரணையைப் பொறுத்தளவில், சர்வதேச விசாரணையை நாங்கள் அனைவருமே வேண்டி நிற்கின்றோம். ஆனால் அதுமட்டுமே எங்களது ஒரேயொரு இலக்காக அமைந்து விடும் அபாயத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.

 

“நீதி என்பதில் உள்நாட்டு நீதி, சர்வதேச நீதி என்று இரண்டு வகைகள் கிடையாது. நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறல் வேண்டும் என்பது நீதிக்கான அக்கறைமீதமைந்த விடயமாகும். ஆகவே, சர்வதேச விசாரணை என்பது அவசியமானதே.

 

“ஆயினும் அது எங்கள் கைகளில் இல்லாத ஒரு விடயமாகும். அதைத் தீர்மானிக்கும் சக்திகளுக்குமுக்கியமான அல்லது முன்னுரிமை பெறும் வேறு பல விடயங்கள் உள்ளன. அந்த விடயங்களுடன் எமது தேவைகளையும் ஒரே நேர்கோட்டில் அறிவார்த்தமான முறையில் கொண்டுவரவேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்பதில் அரசியல் நிதானம் மிகமிக அவசியமாகின்றது. இதற்காகவே அறிவார்த்தமான முறையில் என்று கூறுகின்றேன்.

 

“அதாவது, விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுத பலம் அத்தகைய நேர்கோட்டு முயற்சிக்குக் குந்தகமாகச் சித்தரிக்கப்பட்டமையால் தான் பல்வேறு சக்திகளின் துணையுடன் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். ஒரு விதத்தில் அது எமது இராஜதந்திரத்திலான பலவீனமே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எல்லாவிதமான ஆதரவும் பலமும் இருந்தும் ஏன் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் எமது செல்நெறி பற்றிய தெளிவு நிச்சயம் ஏற்படவே செய்யும்.

 

“அதே வகையில், இன்று எம்மிடமிருக்கும் பலம் என்ன என்பதையும் நாமே மதிப்பிடவேண்டிய தருணம் இதுவாகும். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் சிலமுயற்சிகளில் ஈடுபடுவதற்கான நெகிழ்ச்சியினைத் தந்துள்ளது. அதனையும் எம்முள் சிலர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

 

தெளிவானதொரு நிலைப்பாட்டின் அவசியம்

 

“இந்த ஆட்சி மாற்றத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் தொடங்கி சர்வதேச சமூகத்திடம் எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது வரை ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்கும் விதத்தில் ஒருமித்த குரல் இன்று தேவைப்படுகின்றது.

 

“என்னைப் பொறுத்தவரையில்,வரலாற்று ரீதியில், இலங்கை அரசுக்கு அதன் பன்மைத்துவ மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் விதத்தில் அமைந்த, ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான உள்ளார்ந்த இயலுமை இல்லை என்றே கூறுவேன். இன்றும் அதனை வலுப்படுத்தும் சம்பவங்களே நடந்தேறி வருகின்றன. இந்த இயலாமை சர்வதேச சமூகத்திடம் எந்தளவுக்கு அறிவார்த்தமான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியே.

 

“வடக்கு கிழக்கின் குடிப்பரம்பல் மாற்றப்பட்டு வரும் முறையும், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் முறிவும், இராணுவப் பரம்பலும் ஓர் இனத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவது மட்டுமே எமது தலையாய பிரச்சனையாக இருக்க முடியாது. அதற்கும் மேலாக, ஓர் இனத்தின் இருப்பே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, தொடர்ச்சியான இராணுவ முற்றுகைக்குள்ளும், அடக்குமுறைச் சட்டத்துக்குள்ளும் அந்த இனம் வைக்கப்பட்டிருக்கும் நிலை பல தசாப்தங்களாகத் தொடருமானால், அந்த இனத்துக்குரிய மாற்றுவழி என்ன என்பதையிட்டுச் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டிய ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். இது வெறுமனே வாய்ச் சவாடல்களால் சாதிக்கக்கூடிய விடயமல்ல.

 

“எனவே தான் விரும்பியோ விரும்பாமலோ நாம் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியாக வேண்டியுள்ளது. தீர்வுத் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. சர்வதேச ஆலோசனைகளை உடனடியாக உதறித்தள்ளிவிட முடியாதுள்ளது. இவை யாவற்றிலும் ஈடுபடும்போதிலெல்லாம் நமது இறுதி இலக்கு என்ன என்பதில் குறி தவறாமல் இருக்கும் வரை அரசியல் ரீதியில் நாம் தோல்வியடைய முடியாது. ஆனால், எத்தனை காலத்துக்குத்தான் இப்படி இழுபறிப்படுவது என்ற வினா எழுவதையும் தவிர்க்க முடியாது.

 

நைஜீரியப் பட்டறிவு

 

“1967-70 களில் நைஜீரியாவில் பயாஃரா விடுதலைப் போராட்டம் தனிநாட்டுப் பிரகடனத்தில் போய் முடிந்து பின்னர் இராணுவ ரீதியில் தோல்வியடைந்தபோது நைஜீரியா மேற்கொண்ட சில முன்மாதிரி நடவடிக்கைகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

 

“என்ன காரணத்தால் பிரிவினைப் போராட்டம் தோற்றம் பெற்றதோ அதை நன்கு ஆராய்ந்து, அத்தகைய மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏற்கனவே இருந்த கூட்டாட்சி முறைமைக்கும் மேலாக, ‘இல்போ’ மக்களுக்கு அதிகரித்த சுயாட்சியை வழங்கியது நைஜீரிய அரசு. அத்தகைய ஒரு பெருந்தன்மையான ஏற்பாட்டை இலங்கை அரசு மேற்கொள்ளும் என்பது கற்பனையான எதிர்பார்ப்பேயாகும்.

 

தொடரும் மகாவம்ச மனப்பாங்கு

 

“எனவேதான், அரசின் இயலுமை பற்றிப் பேசவேண்டும். இயலாமை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஏனிந்த அரசினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடியவில்லை? ஏனிந்த அரசினால் மதவாதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை? ஏனிவர்களால், எத்தகைய ஆட்சிமாற்றத்தின் பின்னரும் ஒற்றையாட்சிக்கு அப்பால் பேச முடியாதுள்ளது? ஏனிவர்களால் அரசியல் தீர்வு பற்றி பெரும்பான்மை இனத்தை நம்பிக்கை கொள்ளச் செய்ய முடியவில்லை? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தையே கருத வேண்டியுள்ளது? இந்த மகாவம்ச மனப்பாங்கிலிருந்து ஆளும் இனம் விடுபடக்கூடிய சாத்தியமுள்ளதா? எட்டப்பட்ட உடன்படிக்கைகள் யாவுமே மீறலில் போய்முடிந்ததேன்?

 

“75% வீதமான மக்களின் சம்மத்துடன்தான் 25 % வீதமான மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமாயின் அது எப்போது நடந்தேறும்?

 

ஓலாண்ட் தீவு: ஒரு மாதிரி

 

“1920களில், சோவியத் யூனியனின் படைகள் ஃபின்லாந்திலிருந்து வாபஸ்பெறப்பட்டதன் பின்னர், சுவீடனுக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் அமைந்திருக்கும் ‘ஓலாண்ட் தீவு’மக்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுந்தது. அவர்கள் சுவீடனின் ஒரு பகுதியாக இணைவதா? ஃபின்லாந்தின் ஒரு மாகாணமாக மாறுவதா? அன்றேல் சுதந்திரத் தனிநாடாக உருப்பெறுவதா என்ற வினாவில் கருத்தொற்றுமை எட்டப்படாத நிலையில் ‘சர்வதேச சட்டவாளர் ஆணைக்குழு’வின் அபிப்பராயத்தை அன்றைய நாடுகள் அவை (League of Nations) கோரியிருந்தது.

 

“இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின் மேலேயே ‘ஓலாண்ட தீவு’ மக்களுக்கு ஃபின்லாந்துக்குள்ளான சுயாட்சி வழங்கப்பட்டது. இதன்போது கருத்துரைத்த சட்டவாளர் குழு முக்கியமானதொரு சர்வதேசச் சட்ட நிலைப்பாட்டை விளக்கியது.

 

“ஓர் அரசுக்குள் இருக்கும் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான மக்கள் குழுவுக்கான சுயாட்சித் தீர்வை வழங்குவதில் அந்த அரசு தொடர்ச்சியான தோல்வியைக் காணுமாயின் அந்த மக்கள் குழு மாற்று வழிகளை நாடுவதில் தவறிருக்க முடியாது. ஆனால், அங்ஙனம் நாடுவதற்கு முன்னர் அந்த அரசின் அத்தகைய இயலாமை நிரூபிக்கப்பட வேண்டும்.” இதுவே அவர்கள் கொடுத்த விளக்கமாகும்.

 

“ஆகவே எங்களுடைய இலக்கு எதுவாக இருக்க வேண்டும், எதை நோக்கியதாக எங்களது பயணம் அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு செயற்படவேண்டிய காலமிது.

 

விஷமிகள் குறித்த அவதானம்

 

ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வழங்கிய ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி நாங்கள் செயற்பட முன்னர் எங்கள் செயற்பாடுகளை முடக்கும் வகையில் உள்நுழையும் சக்திகளின் பல்வேறு வடிவங்கள் தொடர்பிலும் நாம் கவனமாயிருத்தல் வேண்டும். புதிய குரல்கள், கவர்ச்சியான கோஷங்கள்,உணர்ச்சியூட்டும் வீரவசனங்கள், வலைவீச்சுக்கள் என்பவற்றின் பின்னால் உள்ள சூத்திரதாரிகளையும் இயக்கு சக்திகளையும் அடையாளம் காணுதல் அவசியம். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இரட்டிப்பாவது தவிர்க்க முடியாததே.

 

“அதே நேரத்தில், இந்த ஆட்சிமாற்றம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அரியதொரு வாய்ப்பினைப் புலம்பெயர் உறவுகள் வேறுவிதத்தில் உரியவாறு பயன்படுத்தினால் ஒரு சிலரின் உலகத்தை இலங்கைத் தீவுக்குள் மட்டுமாக முடக்கிவிட முடியும். அது பற்றியும் சிந்திக்கலாம்,” என்று திரு தமிழ்மாறன் பரந்துபட்ட நடைமுறைசார் அரசியல் கருத்துக்கள் நிறைந்த தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.

 

நன்றி : கொழும்பு மிரர்