தாம் ஆதரவுகளை வழங்கி காப்பாற்றி வரும் சிறீலங்கா அரசின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றும் நிகழ்வுகள் இந்த வாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது.

 

ஏன் இவ்வாறு நிகழ்கின்றது?

 

கூட்டமைப்பினர் மாறிவிட்டார்களா என்று ஒரு கணம் திகைத்துபோன தமிழ் மக்களுக்கு பின்னர் தான் புரிந்தது சிங்கள தேசத்திற்கான அரச தலைவர் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது.

 

அதாவது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் படலத்தை அவர்களின் வாக்குகளைப் பெற்ற கட்சி ஆரம்பித்துள்ளது. அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை என சம்பந்தர் தெரிவிக்கின்றார்.

 

ஆனால் சிறீலங்கா அரசின் பங்காளியாகவே இருந்து வரும் கூட்டமைப்பு அதனை வாக்களித்த மக்களுக்கு மறைக்கவே பொய் உரைக்கின்றது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா.

 

தமிழர் தாயகத்தில் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பால் அழிவடையும் இந்து மதத்தைக் காப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.

 

அதாவது ஐ.தே.க அரசுடன் உறவாடி அவர்களை மூன்று தடவைகள் ஆபத்தான கட்டங்களில் இருந்து காப்பாற்றிய சிறீதரனின் கட்சி தற்போது இந்தியாவிடம் கோரிக்கை விடுவது மக்களை ஏமாற்றும் செயல் என பிரபா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வைக்காணும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு இந்த தருணத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

 

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறீ ஜெயசேகரா என்ன கூறுகின்றார் என்றால், ரணில் அரசைக் காப்பாற்ற 50 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஐ.தே.க – த.தே.கூ என்ற கூட்டு அரசையே நடத்திவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

 

அதாவது ஒரு அரசியல் கட்சி தனக்கு வாக்களித்த சொந்த மக்களையே ஏமாற்றுவதை எமது பொது எதிரியான சிங்கள அரசியல்வாதிகளால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

 

இவற்றை எல்லாம் விடுத்து ஐ.நா நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவரும், தற்போது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் ஊடாக சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக போராடி வருபவருமான பிரதிநிதி ஒருவரை எமது குழு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

 

அவர் கூறிய கருத்தும் சிங்கள அரசியல் தலைவர்கள் கூறும் கருத்தம் ஒரேமாதிரியானதாகவே இருக்கின்றது. அதாவது அரசில் பங்கெடுக்கும் ஒரு கட்சி அதே அரசின் மீது குற்றம் சுமத்துவதை மேற்குலகமும், அனைத்துலக சமூகமும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கும். அதனை தமிழ் மக்கள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

மக்களின் அரசியல் தெளிவின்மையே இவ்வாறான கட்சிகள் தொடர்ந்து ஏமாற்றுவதற்கான காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.

 

அதாவது சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நாளை அறிவித்த பின்னர் தான் கூட்டமைப்பின் இந்த நாடகம் ஆரம்பமாகியுள்ளது. முழுக்க முழுக்க சிங்கள தேசத்திற்கான அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தமிழ் இனத்திற்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை.

 

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து கூட்டமைப்பினர் தென்னிலங்கை கட்சிகளுடன் வியாபாரம் செய்யலாம். ஆனால் கூட்டமைப்பின் இந்த கபடநாடகத்தை புறக்கணித்து ஒட்டுமொத்த தமிழினமும் சிங்கள தேசத்துக்கன அரச தலைவர் தேர்தலை இந்த ஆண்டில் இருந்து புறக்கணிக்க வேண்டும்.

 

அதுவே நாம் வேற்று தேசத்திற்குரிய ஒரு இறைமையுள்ள இனம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கும் சிங்கள அரசுக்கும் எடுத்துக்கூறும். எமக்கான பேரம்பேசும் அரசியல் சக்கதியாகவும் அது எதிர்காலத்தில் மாற்றம் பெறும்.