அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong) நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது.இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின.
Flag2நேற்று  மாலை 6.00 மணிக்கு இக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

 

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நகரம் ஜீலோங் நகரமாகும். தமிழர்கள் யாருமே வசிக்காத ஒரு நகரமாக இருந்து வந்த இந்நகரத்தில் அண்மைக்காலத்தில்தான் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் குடியமர்த்தியது அவுஸ்திரேலிய அரசு.

 

இந்நகரத்திலுள்ள தொழிற்சங்கம் ஏற்கனவே இரண்டு முறை தமது கட்டடத்தின் கொடிக்கம்பத்தில் தமிழீழத் தேசியக்கொடியை முறைப்படி ஏற்றிப் பறக்க விட்டதூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
அந்தவகையில் மூன்றாவது முறையாகவும் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிப் பறக்க விட்டுள்ளார்கள் இத்தொழிற்சங்கத்தினர்.

 

இந்நிகழ்வைத் தொடக்கி வைத்த ஜீலோங் நகரத் தொழிற்சங்கச் செயலாளர் Tim Gooden அவர்கள், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைப் பற்றியும், தமிழரின் உரிமைப் போராட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்து, தமது தொழிற்சங்கம் ஏன் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறது என்றும் விளக்கினார்.

 

Jin-flaஅத்தோடு, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்ட கடந்த இரண்டு தடவைகளும் எவ்வாறு சிங்களப் பேரினவாதிகள் தமக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்பதையும் கூறி, இம்முறையும் நாளையிலிருந்தே தொலைபேசி அழைப்புக்கள் தமக்கு வரத் தொடங்குமென்றும் கூறினார்.

 

நிகழ்வில் பேசிய தமிழ்ச் செயற்பாட்டாளர் அரன் மயில்வாகனம் அவர்கள், தமிழீழத் தேசியக்கொடியின் வரலாற்றை எடுத்துக்கூறியதோடு, இக்கொடி எவ்வாறு எமது விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைக்கான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என்பதையும் கூறினார்.

 

அத்தோடு ஜீலோங் தொழிற்சங்கமும் ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் எமது போராட்டத்துக்கு நல்கும், ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

 

நிகழ்வில் அடுத்ததாக கொடிப்பாடல் இசைக்கப்பட Tim Gooden அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இக்கொடி சிலநாட்கள் ஜீலோங் நகரத் தொழிற்சங்கக் கட்டடத்தில் வானளவாப் பறந்து கொண்டிருக்கும்.