இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடமாகாண ஆளும் தரப்பை சந்திக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டடுள்ளது.

ஸ்கொட் மொரிசன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறியை இரகசியமாக சந்தித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அரசாங்க தரப்பை மட்டும் சந்தித்துச் சென்றமை பெரும் தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மவை சேனாதிராஜா கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கூட சந்திக்கவில்லை என மாவை சுட்டிக் காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவுஸ்திரேலிய அரச தரப்பு இலங்கை வரும்போது தம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்ததாக மாவை குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தம்மை சந்திப்பார், பேச்சுவார்த்தை நடத்துவார் என தாம் பெரிதும் எதிர்பார்த்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.

எனினும் தம்மை சந்திக்காதது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி தமது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள அவுஸசதிரேலிய தூதுவரிடம் இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.