இந்தியாவின் விருப்பத்திற்கு அமைவாக சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்கிய அமெரிக்கத் தீர்மானம்

0
636

அமெரிக்காவின் தீர்மானம் நவநீதம் பிள்ளையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், இந்தியாவின் விருப்பத்திற்கு இணங்க சிறீலங்காவுக்கு காலஅவகாசத்தை வழங்கியுள்ளது. ஈழத் தமிழ் மக்களை மிகுந்த மனவேதனைக்கு உட்படுத்தியுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் தமிழ் இன உணர்வாளர்கள் பலரும் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களை இங்கு தருகின்றோம்.

தொடரும் கட்டமைக்கப்ட்ட இன அழிப்பிற்கான அங்கீகாரமே அமெரிக்கத் தீர்மானம்: பரணி கிருஸ்ணரஜனி

தமிழின அழிப்பின் சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை தரவரிசைப்படுத்தினால்,

01. ஐநா குறிப்பாக அதன் செயலாளர் நாயகம்

02. மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா

03. இந்தியா குறிப்பாக கொங்கிரஸ்

04. சிறீலங்கா

உண்மை இப்படி இருக்க கடைசி குற்றவாளியை கூண்டிலேற்றுமாறு நாம் முதல் குற்றவாளிகளின் சபையில் இராண்டாமவர் கொண்டு வரும் தீர்மானத்தை மூன்றாவதாக உள்ளவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். எத்தகைய அபத்தம் இது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து எமக்கு நீதியை வழங்குவார்கள் என்று நம்புவது முட்டாள்தனமாக இல்லையா?

இந்த ஒட்டு மொத்த குற்றவாளிகளை ஊடறுத்துத்தான் நாம் எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் நாம் பலமற்றவர்களாக பேரம் பேசும் வல்லமையற்றவர்களாக இருந்து கொண்டு அந்த நீதியை எதிர்பார்க்க முடியாது. இந்த உலக ஒழுங்கை பலம்தான் தீர்மானிக்கிறது. மக்கள் – மாணவர் புரட்சி வெடித்து நாம் வீதிக்கு வராதவரை இந்த உலகம் எம்மை கணக்கிலெடுக்கப்போதில்லை. எனவே போராட உறுதி எடுப்போம். தாயகம் -தமிழகம் -புலம் இணைந்த ஒரு கூட்டுச்சக்தியாக அணிதிரண்டு எமது பலத்தை நிருபிப்போம். எமது இந்த திரட்சிதான் மேற்குலம் மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் கொள்கைளில் மாற்றத்தை கொண்டுவரும்.

நாம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதற்கும் கீழாக ஒரு பிரேரணையை அமெரிக்கா முன்வைக்க இருப்பது தற்போது சற்றுமுன் ஜெனிவாவில் தெரிய வந்துள்ளது. அதில் தமிழர்களுக்கு ஒன்றுமேயில்லை. சிங்களம் தொடர்ந்து இன அழிப்பை மேற்கொள்வதற்கு சார்பான ஒரு தீர்மானம் என்றால் அது மிகையல்ல. Structural Genocide இற்குரிய ஆழமான ஆபத்தான திட்ட வரைபுகள் அதில் பொதிந்துள்ளன.

மெற்குலகத்திற்கும் சிங்களத்திற்கும் இடையில் “நாம் அடிக்கிற மாதிரி அடிக்கிறம் நீ அழுகிற மாதிரி அழு” என்ற விளையாட்டு இது. இதன் விளைவாக நாம்தான் தொடாந்து à®…à®´ நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளோம்.

எனவே நாம் போராட உறுதி எடுப்போம். எமது விடுதலையை உறுதிப்படுத்துவோம்.

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கி​றது!- பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை
neduma
அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.

ஐ. நா. மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ராஜபக்ச அரசே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்தவும் பாதிக்கப்படட மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.

ஆனால் இத்தீர்மானங்களை ராஜபக்ச அரசு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மீண்டும் அவருக்கு இரண்டாண்டு காலம் அவகாசம் கொடுப்பது என்பது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிப்பதற்கு துணை போவதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13வது சட்டத்திருத்தத்தின்படி வடக்கு மாநில முதலமைச்சருக்கு தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்ச சாகடித்து விட்டார். இப்போது 13வது சட்டத்திருத்தமே இல்லை. அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும்.

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.

ஈழவிடுதலையை முடக்கும் தீர்மானம் : திருமுருகன் காந்தி

Thirumurugan-gandhi-300
தமிழீழ விடுதலையை நீர்த்துப் போகச் செய்வதற்கும், புலிகளின் அரசியல் ஆதரவு ஈழவிடுதலை செயல்தளத்தினை முடக்குவதற்கும் மட்டுமே இந்த தீர்மானம் பயன்படப் போகிறது.

அமெரிக்கா ஏதோ யோக்கியமான தீர்மானம் கொண்டு வருகிறது, அதை இந்தியாதான் நீர்த்துப் போகச்செய்கிறது என்றெல்லாம் நம்பிக்கொண்டு பிரச்சாரம் செய்தவர்களை என்னவென்று சொல்வது?

கடந்த வருடம் கொண்டு வந்ததைப் போலவே இவ்வருடமும், இலங்கைக்கு தமிழினப்படுகொலையை நடத்தி முடிக்க மேலும் அவகாசத்தினை கொடுத்திருக்கிறார்கள்.

ராஜபக்சேவினை தண்டிப்பதற்கான அரசியல் வேறு, ஈழவிடுதலைக்கான அரசியல் வேறு. ராஜபக்சேவினை தண்டிப்பதன் மூலம் ஈழவிடுதலையை வென்றுவிடலாம் என்று பிரச்சாரம் வலுவாக நடக்கவே செய்கிறது. 2011இல் இதை எச்சரித்தோம். அமெரிக்கா-இந்தியா-இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ராஜபக்சேவினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஆட்சி மாற்றம் செய்துவிட்டு வேரொருவரை கொண்டுவர இந்த மனித உரிமை மீறலை பயன்படுத்துகிறார்கள். இதை ராஜபக்சேவே கடந்த மாத பேட்டியில் கொடுத்திருக்கிறார்.

இதை 2011இல் ஐ.நாவின் நிபுணர் அறிக்கை வெளியிட்ட பொழுதே இதை எச்சரித்தோம். அப்பொழுதிருந்து இன்றுவரை எங்கள் மீது “சிங்களக் கைகூலிகள், இந்திய உளவாளிகள்” என்று பட்டம் கட்டுவதை மட்டுமே செய்தார்களே ஒழிய எங்களது கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை..

ஐ.நாவும், அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலந்தும் இணைந்து ”ஆட்சி மாற்றமே தமிழர்களுக்கு தீர்வு” என்கிற வேலையை செய்கின்றன. இதனாலேயே ராஜபக்சே இவர்களை எதிர்க்கிறார். தமிழர் விரோத அரசியலை செய்வதால் நாமும் எதிர்க்கிறோம்.

இவர்களின் சுருக்க அரசியல்:

இங்கிலாந்து -அமெரிக்காவின் விருப்பம் : ஆட்சி மாற்றம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் நல்லிணக்க அடிப்படையில் வாழ்வது, புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.

இந்தியா: ஆட்சி மாற்றம், 13 வது சட்ட திருத்ததின் அடிப்படையில் மாகாண உரிமைகள். தமிழ்தேசிய கூட்டமைப்பினைக் கொண்டு இலங்கையிடம் பேரம் பேசுதல். புலிகள்-தமிழீழ ஆதரவு அரசியலை முடக்குவது.

ஐ.நா: இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளை வலுபடுத்துவது, சீர்திருத்துவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இலங்கையர்களாக வாழ நல்லிணக்க-உண்மை அறியும் முறையை ஏற்படுத்துவது. இதற்கான இடைக்கால நீதி வழங்கு முறையை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கான காரணத்தினை ஏற்படுத்துவது.

இந்த நோக்கங்களை நிறைவேற்றுமளவிற்கும், தமிழர்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கும், தமிழகத்தில் சூழலை உருவாக்க ’அமெரிக்க-ஐ.நா அதரவு’ கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கு என்.ஜி.ஓக்களை களம் இறக்குவது. இவர்களுக்கு துணையாக அரசியல் இயக்கங்களை மாற்றுவது.

மேல் சொன்ன அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. நெருக்கடிக்குள்ளாக்கும் எந்த ஒரு கேள்வியையும் இவர்களை நோக்கி எழுப்பாமல் தமிழ்ச் சமூகம் எப்பொழுதும் போல கடந்து போகுமோ என அச்சமே இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் வேண்டும்: ராமதாஸ்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ramadoss-smiling-300
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரனையில் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அது குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அமெரிக்கத் தீர்மானம் வரவேற்றுள்ளது.

அதேநேரத்தில், இலங்கையில் சிங்கள அரசும், விடுதலைப்புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அது குறித்த குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகமே விசாரிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையில், உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதற்கு காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு மாநிலத் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இத்தகைய சூழலில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மட்டுமின்றி, இனப்படுகொலை குறித்தும் சர்வதேச விசாரணை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். ஐ.நா. மனித உரிமை ஆணையளராக இருக்கும் நவிப்பிள்ளை ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவராக இருப்பதால், இலங்கைக்கு எதிரான விசாரணை சரியாக நடக்கும் என்று நம்பலாம். ஆனால், அவரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவிருக்கும் நிலையில், அதன்பின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை எந்த அளவுக்கு நியாயமாக நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, எந்த வகையில் பார்த்தாலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலைகள் ஆகியவை குறித்து நம்பகமான, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதன் மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் வழங்க முடியும்.

எனவே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானத்தில் இதற்கான திருத்தங்களை இந்தியா கொண்டு வர வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்யும்படி தமிழக கட்சிகள் வலியுறுத்திய போது கடைசி வரை இழுத்தடித்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் நேரம் இல்லாததால் இனி திருத்தம் செய்ய முடியாது என கைவிரித்து விட்டது.

இந்த முறையும் கடைசி வரை இழுத்தடிக்காமல் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு வேண்டுகோள்!

தொல்.திருமாவளவன் அறிக்கை

அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் அதில் நிறைவேற்றப்படுமா? என்ற அய்யம் எழுந்துள்ளது. அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் வரைவு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், இனப்படுகொலை தொடர்பாகவோ, பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றோ எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் உரையாற்றிய அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்கள் இலங்கை குறித்த திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் அறிக்கையைப் பாராட்டி வழிமொழிந்துள்ளார். முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றிய கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டு விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து இந்தியா இதுவரை கருத்து எதுவும் கூறாமல் வழக்கம்போலவே மவுனம் காக்கிறது. வரைவுத் தீர்மானத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமது கருத்தைத் தெரிவிப்போம் என அது கூறி வருகிறது. வரைவுத் தீர்மானம் இப்போது வெளிகியுள்ள நிலையில் இனப்படுகொலையை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை என இந்தியா வலியுறுத்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்திய அரசு தமது கருத்தை வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்