இந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை தமது அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகள் சார்ந்த குடும்பங்களும் தவறாக பயன்படுத்தி வருவது காலம் காலமாக இந்தியாவில் நிகழும் ஜனநாயகச் சீர்கேடுகளில் முதன்மையானது. ஆனால் மோடி தலைமையிலான பாரதிய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பின்னர் இந்தியா மிகவும் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

 
அரசியல் வாதிகளின் மனித உரிமை மீறல்களையும், மத்திய அரசின் இனப்பாகுபாடுகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் குரல் கொடுப்பவர்கள் ஆயுதவழிகளில் அடக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடிப் பகுதியில் தமது உரிமைகளை கேட்டுப் போராடிய பொதுமக்களின் பிரதிநிதிகளை திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை செய்த இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போது இந்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்பவர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

 
சமூக ஆவலர்கள், தமது உரிமைக்காக போராடுபவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்பவர்கள், மக்களின் நலன்சார்ந்த ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் பலரை இந்திய காவல்துறையினர் எதுவித காரணங்களுமின்றி பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 
தூத்துக்குடி இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியதற்காக மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளின் குடும்பங்களும் தமது சுயநோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் இந்த சம்பவங்களானது இந்தியாவில் மனிதர்கள் வாழமுடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற அச்சம் அங்கு வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

 
இந்தியாவில் ஆட்சி செய்யும் பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழியவேண்டும் என்று கூறியதற்காக கனடாவில் ஆய்வுத்துறையில் கல்விகற்கும் மாணவி ஒருவரை சட்டத்திற்கு முரணாக ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக இந்திய காவல்துறை கைது செய்துள்ளதுடன் அரச இயந்திரமாக மாறியுள்ள இந்திய நீதித்துறையும் அவரை சிறையில் அடைத்துள்ளது.

 
மாணவி சோபியா மீதான இந்த நடவடிக்கை இந்தியாவின் மற்றுமொரு ஜனநாயக விரேதச் செயலாகும். கஷ்மீர் பகுதியில் இந்திய படையினர் மேற்கொண்டுவரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மிகவும் அழுத்தமாக கூறிவரும் நிலையில் இந்தியா முழுவதிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் தமது கவனங்களைச் செலுத்த வேண்டும் என இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
இந்திய மத்திய அரசின் இன ஓடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் மாநிலங்களில் கஷ்மீருக்கு அடுத்த நிலையில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. அங்கு வாழும் மக்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கோ அல்லது தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கோ உரிய உரிமைகளை இழந்தவர்களாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 
இந்திய அரசின் இந்த ஜனநாயக விரோதப்போக்கும், மற்றும் இனவிரோத நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் மிகப்பெரும் ஆபத்தான விடயமாகவே அமைந்துவிடும். இது அந்த பிராந்தியத்தில் வாழும் ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைவதுடன், அங்கு வாழும் மக்களும் தமது சுதந்திரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இது ஆசியப் பிராந்தியத்தின் உறுத்தித் தன்மைக்கும் ஆபத்தானது.

 
எனவே இந்தியாவில் இடம்பெறும் இனவிரேத மற்றும் சட்டவிரேத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அங்கு ஒரு ஜனநாயகச் சூழ்;நிலையை தோற்றுவிக்க அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வரவேண்டும். இந்தியாவில் இடம்பெறும் சட்டவிரேத மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் ஏனெனில் இந்திய நீதித்துறை மற்றும் காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

 
இந்த துறைகளாலும், அங்கு உள்ள அரசியல்வாதிகளாலும் தாம் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடம் உண்டு, எனவே அனைத்துலக விசாரணைகளுக்கான தேவை ஒன்று அங்கு வாழும் மக்களுக்கு உருவாகியுள்ளது.

 
எனினும் காஷ்மீரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் அவசியம் என்ற கருத்தை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் அண்மையில் முன்வைத்தபோது இந்தியாவின் நீதித்துறை அமைச்சர் அதனை கடுமையாக எதிர்த்ததுடன், இந்த நிகழ்ச்சியில் பெரும் கூச்சலும் போட்டிருந்தார் ஆனால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளையோ அல்லது அரசியல் வாதிகளின் வெளிநாட்டு பயணங்கள் மீதான தடைகளையே மேற்கொள்வதன் மூலம் இந்த விசாரணகளுக்கு இந்தியாவை உடன்பட வைக்க முடியும்.

 

இதன் மூலம் அனைத்துலக சமூகம் இந்தியாவில் ஒரு ஜனநாயகத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என ஈழம் ஈ நியூஸ் அங்கு வாழும் மக்களின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றது.

 
ஈழம் ஈ நியூஸ்