இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுகின்றது – கல்லம் மக்ரே

0
783

callum-macrae22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய “சேனல் 4 ஆகச்சமீப காணொளி” திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே:

கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா?

கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-engineering நடந்ததை/நடப்பதை நாம் உணர முடிகிறது. எனது தனிப்பட்ட கருத்தில் இனப்படுகொலைக்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் போர் குற்றங்களும் கூட. ஒரு சர்வதேச விசாரணைக்கான உடனடி காரணிகளாக இவை நிற்கின்றன.

கேள்வி: அமெரிக்காவின் தீர்மானம் எந்த அளவில் அழுத்தம் உள்ளதாக இருக்கும்?

பதில்: கடந்த காலங்களில் இலங்கையில் தொடர்ந்த குழப்பநிலைக்கு மேற்குலக நாடுகளை இலங்கை குறை கூறி வந்துள்ளது எனவே தனது ராஜதந்திர எல்லைக்குள் நின்று இலங்கை மீது நெருக்கடியை உண்டாக்கும் அளவுக்கு அமெரிக்காவின் தீர்மானம் இருக்கலாம்.சென்ற ஆண்டை காட்டிலும் இன்னும் அழுத்தமான தீர்மானத்தை எதிர்பார்க்கலாம். இது ஒரு இடைக்கால தீர்வையேனும் தர கூடியாதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

கேள்வி: இந்த பிரச்சனையில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்ய தயாராக இருக்கிறீர்கள்?

பதில்: நான் முதலில் ஒரு பத்திரிக்கையாளன். நடந்த உண்மைகளை பதிவு செய்வதும், எனது படைப்பின் மீது எழுப்பப்படும் குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லி எனது வாதங்களை மெய்ப்பிப்பதுமே எனது வேலை. மற்றபடி நான் பிரச்சாரகன் அல்ல. பிரச்சாரம் செய்ய வேண்டியவர்கள் தமிழர்களும் இதில் ஆர்வம் உள்ள பிறரும். என்னால் ஆன தரவுகளை அளிப்பதே எனது வேலை.

கேள்வி: இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு சென்றீர்கள். அங்கு உள்ள மக்களின் நிலை பற்றி சொல்லுங்கள்.

பதில்: பெரும்பாலானவர்கள் நெருக்கடியான நிலையில் தான் என்னுடன் உரையாடினர். ஆனால் அவர்கள் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியின்றி இருப்பதாகவே என்னால் உணர முடிந்தது.

கேள்வி: சென்ற ஆண்டு இந்தியா வருவதற்கு உங்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அதை பற்றி கூறுங்கள்.

பதில்: எனது விசா மறுக்கப்பட்டதற்கு இந்தியா கொடுத்த காரணம் “சென்ற முறை விசாவில் வந்த போது பயண விதிகளை மீறியது” என்பதாகும். ஆனால் அதை உண்மை என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இந்தியா இந்த காணொளி தனது நாட்டில் திரையிடப்படுவதை விரும்பவில்லை. இதனால் இலங்கை உடனான தனது உறவில் விரிசல் ஏற்படும் என்கிற அச்சத்தையே கொண்டிருக்கிறது. இந்தியா எனக்கு விசா மறுத்ததற்கு காரணம் நாங்கள் திரையிட முயன்ற உண்மையின் மீதான பயம். எனவே இந்தியா “உண்மையின் மீதான பயத்தில் தான் எனக்கு விசா மறுத்தது.”

கேள்வி: இத்தனை ஆண்டுகள் பல ஆதாரங்களை முன்வைத்தும் சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. நீதி கிடைக்குமா

பதில்: உங்கள் விரக்தி எனக்கு புரிகிறது. நீதி நிச்சயம் கிடைக்கும். சர்வதேச அளவில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, சனநாயக உரிமைகள், தமிழ் தேசிய வேட்கை ஆகியவற்றிற்கான அங்கீகாரங்கள் பரவலாக் இருக்கவே செய்கிறது.. எனவே நிச்சயமாக நீதி கிடைக்கும்.

கேள்வி: தமிழர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
che-4-tn4
பதில்: இந்தியாவை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும். இந்தியா முயலாமல் இந்த விடயத்தில் உலக நாடுகள் செய்ய கூடிய செயல்கள் மிக குறைவே. பிராந்திய சக்தியான இந்தியா தனது மக்களின் நலனுக்காகவும், இலங்கை மக்களின் நலனுக்காகவும் இந்த பிரச்னைக்கு தீர்வுக்கான முன்வர வேண்டும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு இந்தியாவிற்கு தார்மீக கடமை உள்ளது. இல்லை என்றால் இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுவதாக ஆகும்.

இவை தவிர கல்லம் மக்ரே முன்னிறுத்திய பிற கருத்துக்கள்:

1. புலிகளுடனான போர் முடிந்துவிட்டது ஆனால் இலங்கை அரசு இன்னும் தமிழ் மக்களுடன் போர் செய்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் தங்களது முழு போரையும் வெற்றிகரமாக முடித்துவிடுவார்கள். எனவே தமிழர்கள் மிக மிக விரைவாக போராடி ஒரு தீர்வினை எட்ட வேண்டும். இது மிகவும் அவசியம்

2. போர் காலங்களில் பெரும்பான்மையான மரணங்கள் இலங்கை இராணுவத்தாலேயே நடந்தது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. பின்னர் பல தமிழர்களை மிரட்டி பொதுவெளியில் தன்னுடைய பிம்பத்தை சீரமைக்க முயன்று வருகிறது.

3. இலங்கையில் ஒரு தன்னிச்சையான நீதித்துறை கிடையாது. அவை சடங்கு முறைக்காகவே உள்ளன. இலங்கையின் உள்நாட்டு நீதி மன்றங்களில் எந்த வித நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

4. இலங்கை அரசு போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், விமர்சகர்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சியினர் என்று பலர் மீதும் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது.

5. நான் இந்த காணொளிகள் மூலம் ஆட்சி மாற்றத்தை கோரவில்லை. தேவை உண்மையும் நீதியும்.

6. இலங்கை தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் பரஸ்பர எதிரிகளை கூட இந்த விடையத்தில் தனது பக்கத்தில் வைத்துள்ளது. உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கை அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இதை நாம் கவனிக்க வேண்டும்.

(ஏதேனும் திருத்தங்கள்/விடுபட்டு இருந்தால் தெரியப்படுத்தவும்.)

நன்றி!- Eelamfight