இந்தியா ஏன் கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடாத்த களம் இறங்கியது?

0
518

mahi-indiaஇலங்கையில் கொமன்வெல்த் மாநாடு குறித்து சிங்கள அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பெரும் பாலும் அந்த வாய்ப்பு தங்களுக்கு வர வாய்ப்பில்லை என்றே கருதியிருந்தார்கள். காரணம், மனித உரிமை அமைப்புக்களினதும் புலம் பெயர் தமிழர்களினது போராட்டமும் மேற்குலகு குறிப்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையை வைத்து அமெரிக்கா செய்த லொபியும் ( கனடாவின் புறக்கணிப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது) தமக்கு அந்த வாய்ப்பை வழங்காது என்றே நம்பியிருந்தார்கள். (இங்கு ஏன்தமிழக போராட்டத்தை குறிப்பிடவில்லை என்பதற்கு பதில் இப் பத்தியின் முடிவில் கிடைக்கும்.)

ஏனென்றால் வரலாற்றில் பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக பொதுநலவாய அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்ட்டிருக்கின்றன. அதுவும் மிக சாதாரணமான காரணங்களான தேர்தல் மோசடி, இராணுவ ஆட்சி, நீதிமன்ற விவகாரங்கள், போர்க்குற்றம், ஊடக அடக்குமுறை என்று பல காரணங்களுக்காக.. பாகிஸ்தான்கூட ஒரு தடவை நீக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இன அழிப்பிலிருந்து உச்சநீதியரசர் விவகாரம் வரை அனைத்து மனிதஉரிமை மீறல்களையும் சட்ட மீறல்களையும் ஊடக அடக்குமுறைகளையும் ஒட்டுமொத்தமாகத் தொடரும் தமக்கு பொதுநலவாய மாநாட்டு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்றே திடமாக நம்பியிருந்தார்கள்.

இந்த நேரத்தில்தான் இந்தியாவின் பிரவேசம் நிகழ்கிறது. துரிதமாக பேச்சுக்கள் சிங்களத்துடன் நடக்கின்றன. மநாட்டை என்ன விலையாவது கொடுத்து நடத்தி தருவதாக இந்தியா உறுதியளிக்கிறது. விளைவாக இந்தியா களம் இறங்குகிறது. உடனடியாகவே பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தீவிரமாக தனது பணிகளை முடுக்கி விடுகிறார்.

அதன் விளைவாக சிங்களத்தின் இன அழிப்பு வேலைகளுக்கு வெள்ளையடிக்கும் வேலைகளை தொடங்குகிறார். இதனால் அதிர்ச்சியுற்ற உலக மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் காப்பகம் கமலேஸ் சர்மாவை கண்டிக்கின்றன. ஆனால் இந்தியாவின் பின்னணி தந்த பலத்தினால் அதை அவர் கணக்கிலெடுக்கவில்லை.

வெறுத்துபோன அம்னெஸ்டி இன்ரநசனல் ” இலங்கையின் கைப்பாவை கமலேஸ் சர்மா” என்று பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டது. இந்தியாவின் திரைமறைவு காய் நகர்த்துதல்களின் பின்னணியில் இந்த அறிக்கைகள் அனைத்தும் அர்த்தமிழந்து போயின.

இப்போது நாம் விடயத்தி;ற்கு வருவோம். இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு என்பதே இந்திய அரசின் லொபி. எனவே “இந்தியா புறக்கணிக்க வேண்டும், பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது” என்பதெல்லாம் உண்மையில் நகைச்சுவைக் கூத்து.

“இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, அத்துடன் கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்” இதுவே நமது கோசமாக இருக்க வேண்டும். அதை உலக மனித உரிமை அமைப்புக்களும் புலம் மற்றும் தமிழகத்திலும் சில அமைப்புக்கள் தெளிவாக முன்வைத்திருந்தன.
ஆனால் அது ஒரு தெளிவான ஒற்றை குரலாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அது “மன்மோன்சிங”;கில் போய் மையம் கொண்டு சுருங்கியது.

இதற்காக யாரையும் நாம் குறை சொல்லவும் முடியாது. ஏனென்றால் இந்த எதிர்ப்பு போராட்டங்களை இப்படி சுருக்குவதற்கான வேலைகளையும் மிக தந்திரமாக இந்திய உளவுத்துறையே செய்தது. நாம் அதற்குள் சிக்கினோம் என்பதே யதார்த்தம்.
viki-sam
இப்போது தமிழக போராட்டங்களை பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தடையாக சிங்களம் ஏன் கருதவில்லை என்று புரிகிறதா? இந்திய அரசு அதை எப்படியும் மடைமாற்றும் என்று சிங்களத்திற்கு தெரியும்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இது இந்திய நிகழ்ச்சி நிரல்தான் என்றால், ஏன் டெல்லியில் பல குழப்பங்கள் நிலவுகின்றன என்று..

நியாயமான அந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்கு அரசு, அரசாங்கம், வெளியுறவுக்கொள்கை, கொள்கைவகுப்பாக்கம் குறித்த அறிவு முக்கியம்.

இந்திய கொள்கை வகுப்பாக்கத்தை தீர்மானிப்பது வெளியுறவுத்துறை மற்றும் இந்திய உள்ளக வெளியக புலனாய்வு அமைப்புக்களே. அதை நிரப்பி கொண்டிருப்பவர்கள் இத்துத்துவ பார்ப்பனீய கருத்தியலை காவும் ஒரு குழு. அது இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரானது. அந்த தொடர்ச்சிதான் இலங்கையிலும் தமிழர்கள் தொடர்பாக சிந்திக்க தூண்டுகிறது.

எனவே கொமன்வெல்த் லொபியை இவர்களே தீர்மானித்து இயங்கினார்கள். மத்தியில் உள்ள கொங்கிரஸ் அரசு அதற்கு ஏதுவாக இருந்தபடியால் அண்மைக்காலம் வரை இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி ஆட்சிக்காலம் முடிவடையப் போகிறது என்றவுடன்தான் கொமென்வெல்த் நிலைப்பாடு குறித்து கொங்கிரஸ் கொஞ்சம் தடுமாறுகிறது.

தமிழகப் போராட்டம் உச்சம் பெற கூட்டணிக்காக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் கருணாநிதி போன்றவர்கள் தேர்தலை மையமாக வைத்து சில காய்களை நகர்த்த கொங்கிரஸ் சிந்திப்பதன் விளைவுதான் இந்த மேற்படி கண்ணாமூச்சி ஆட்டம்.

டெல்லியில் இரண்டு குழுக்களாக முரண்படுவதாக வரும் செய்தி ஓரளவு உண்மைதான். அதற்கு காரணம் மேற்படி தேர்தல் நோக்குத்தான்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறாத கொள்கையை வைத்திருக்கும் பெரும்பான்மை குழுவும் ஆட்சியில் இருக்கும் கட்சியை வைத்து வெளியுறவுக்கொள்கையை தீர்மானிக்கும் ஒரு குழுவும் முரண்படுவதால் வரும் சிக்கல்தான் மேற்படி டெல்லி குழப்பத்திற்கு காரணம்.

இப்போது ஒரு செய்தி தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும். நாளை கொங்கிரஸ் தோற்று பாஜக வந்தாலும் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டில் பெரிதாக மாற்றம் வராது என்பது. ஏனென்றால் ஆட்சியாளர்களை விட டெல்லி அதிகாரிகள் கையில்தான் கொள்கை வகுப்பாக்கம் சிக்கியிருக்கிறது.

இப்போது மன்மோகன்சிங் போவது உறுதியாகிவிட்டது. எப்படி இது நடந்தது.? அந்த பின்னணியையும் பார்ப்போம்.
அதற்கு முதல் இந்தியா ஏன் கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடாத்த களம் இறங்கியது என்பதை பார்ப்போம். பொதுவான தமிழின எதிர்ப்பு போக்கு என்பதற்கும் அப்பால் இன அழிப்புக்கு வெள்ளையடித்து தமது பங்கை மறைக்கும் உத்தி என்பதும்தான். இது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அத்தோடு சீனாவின் தலையீடு இல்லாத ஒரு அமைப்பில் தமது செல்வாக்கை செலுத்தி தமது பிராந்திய நலனை பேணும் முயற்சிதான். இறுதியில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது தொடக்கம் மன்மோகன் சிங் இலங்கை செல்ல வேண்டும் என்று தீர்மானமான முடிவெடுக்கவைத்தது வரை செயற்பட்டது இந்த லொபிதான்.

அதற்கான காய்நகர்த்தல்கள்தான் வடக்கு மகாண தேர்தல் தொடக்கம் விக்கினேஸ்வரன் களமிறக்கப்பட்டது வரை நடந்தது. தமிழக போராட்டங்களை சமாளிக்கவும் மன்மோகன்சிங் இலங்கை வருவதை நியாயப்படுத்தவும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தாதவாறு காய்நகர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் ” விக்னேஸ்வரன் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதம்”.

இப்போது அனைத்தும் சுபம். மக்களால் “தேர்ந்தெடுக்கப்பட்ட” பிரதிநிதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் அந்த மக்களின் நல்வாழ்விற்காக மன்மோகன்சிங் இலங்கை செல்கிறார்.

தற்போது வேறு வழியில்லாமல் மன்மோகன்சிங்கை வரவேற்று தாயகத்திலுள்ள வட்ட சதுர முக்கோண அமைப்புக்கள் கூட அறிக்கை விடத் தயாராகி வருகின்றன.

இனி எல்லாம் சுகமே!

பரணிகிருஸ்ணரஜனி
பெண்ணிய உளவியலாளர், அரசியற்செயற்பாட்டாளர்