இந்திய பூர்வீக இலங்கை தமிழர் பேரவை – கனடா நிகழ்த்திய கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நவம்பர் 9, 2014 அன்று கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மலையகத்தில் மண் சரிவால் அநியாயமாக பலியான அன்பு உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி நிகழ்த்தியதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி சேகரிப்பு நிகழ்வும் நடத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட உறவுகளோடு நேரடி தொடர்பு உள்ள அவர்களில் பலரோடு நேரில் பல்வேறு துன்பியல் கதைகள் பற்றி பேசிய போது மனம் வலித்தது.

“இந்த அவலம் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய ஒன்று இருந்தும் எண்ணற்ற உறவுகளை அநியாயமாக பலி கொடுத்துள்ளோம் எம் பாராமுகத்தால்..” எனக் கண்ணீர் மல்க கூறினார் முன்னாள் மலையக ஆசிரியை ஒருவர். ” மறுக்கப்பட்ட கல்வியோடு கட்டாய தோட்டத் தொழில் செய்ய வற்புறுத்தப்படும் பல மாணவ செல்வங்களின் அவல வாழ்வு பற்றி நம்பிக்கையில்லாத கல்வி வாய்ப்பு பற்றி மனம் வருந்தி பகிர்ந்து கொண்டார் அந்த சகோதரி.

இந்த அனர்த்தத்தில் அநாதரவாக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிய கவலை இந்நாட்களில் என்னை உறங்க விடவில்லை. குறிப்பாக சிங்கள அரசு வடபகுதி தமிழர்களிடம் கொடுக்காமல் அவர்களை தமது பாதுகாப்பில் வளர்க்க அழைத்து சென்று விட்டார்கள் என்ற கவலை என்னை வாட்டிக் கொண்டே இருந்தது.

அவ்வண்ணம் அரசால் பொறுப்பேற்க இருந்த அதே நேரம் உதவ முன்வந்த வடமாகாண சபை பொறுப்பேற்க கேட்டபோது மறுத்த 75 அநாதரவாக்கப்பட்ட இச் சிறாரை தென்னிலங்கையிலுள்ள முன்னணி தமிழ் நிறுவனங்களில் ஒன்றான ஈஸ்வரன் பிரதர்ஸ் பொறுப்பேற்று அவர்களை சிங்கள அரசு அபகரிக்காமல் தமிழ் பண்பாட்டில் இருந்து விலகாத தமிழ் சிறுவர்களாகவே வளர்க்க ஒழுங்கமைப்புகள் செய்துள்ளதாக அறிந்த போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

வந்திருந்த மக்களில் பலரும் மலையக மக்களில் அக்கறை இன்றி பலி கொடுக்கும் இலங்கை அரசின் மீது கடுமையான விசனத்தை தெரிவித்தனர்.

Canada-bathulla
கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இன்னமும் உறவுகள் உயிரோடு சிக்கி உதவிக்கரம் நீட்டும் அபாயத்தில் தவிக்கும் நிலையில் இருப்பார்கள் என்றும் அஞ்சுகின்றார்கள் உறவுகள். அரசு தேடுதலை இவ்வளவு விரைவில் கைவிட்டுள்ளமையானது உயிரோடு மக்களை மரணிக்க விடும் கொடுமை என கண்ணீரோடு சொன்னார்கள்.

இந்நிகழ்வில் கண்ணீர் மல்க மெழுகு தீபம் ஏற்றி வணக்கம் நிகழ்த்தி தம்மாலான பங்களிப்பை மக்கள் செய்தார்கள்.
பல்வேறு அமைப்புகள், ஊடக உறவுகள் பலரும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள்.

மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஆதரவு நல்கி இருந்தார்.
இந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் யாவரோடும் உரையாடிய போது வெறுமனே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் குறுகிய கால திட்டத்தோடு நின்று விடாமல் இனியொரு இது போன்ற அவலம் மலையகத்தில் நிகழாதிருக்க மக்களை அறிவூட்டி பாதுகாப்பதற்கான நெறிகளை பின்பற்றுவதும் அவசியம் என குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அத்தகைய திட்டங்களை தாம் முன்னெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.