இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் எதிர்கால வியூகங்களை முன்வைக்கும் நீலநூல் – இதயச்சந்திரன்

0
708

SUkoi‘உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக……’ என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம்.

இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப்பிலும் என்ன செய்யத் திட்டமிடுகிறார்கள் என்பதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய அவசியத்தை  எமக்கு ஏற்படுத்துகிறது.

இந்நூல், சீன அரசின் உத்தியோகபூர்வமான அறிக்கையில்லை என்றாலும், சீன சமூக விஞ்ஞான கல்விக் கழகம் (CASS ) வெளியிடும் இந்த ஆய்வுகள், பெஜிங்கின் கொள்கையை பிரதிபலிக்கும் என்கிற பார்வை உண்டு. அத்தோடு, இவ்வறிக்கைக்கான சர்வதேச நாடுகளின் எதிர்வினையை உள்வாங்கி, அதனடிப்படையில், தமது மூலோபாயக் கொள்கைகளை வகுக்கும் நோக்கம், சீன வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் சக்திகளுக்கு உள்ளதென்றும் கூறப்படுகிறது.

சர்வதேச மூலோபாய கற்கை மையங்களின் கவனத்தை ஈர்த்துள்ள, இந்துசமுத்திரப் பிராந்தியம் குறித்தான சீன ஆய்வாளர்களின் நீல நூலில், இப்பிராந்தியத்தில்  எழுந்துள்ள சவால்கள் பற்றியதான முழுமையான மதிப்பீடும், அங்கு சீனா ஆற்ற வேண்டிய பங்கினையும் விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூன் 8 ஆம் திகதியன்று, யுனான் பலகலைக்கழகமும், சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் இணைந்து வெளியிட்ட 350 பக்கங்களைக்கொண்ட இந்நூல், நான்கு முக்கிய தலைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.

1.இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் அரசியல்-பொருளாதார-பாதுகாப்பு நிலைமை 2.சீனாவிற்கான இந்துசமுத்திரப்பிராந்திய மூலோபாயம் 3.இந்தியாவின்  கிழக்கு நோக்கிய கொள்கையும் (Look East Policy) அதில் சீனாவின் வகிபாகம் என்பதோடு, இ.ச.பிராந்தியத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் 4. இந்துசமுத்திரமும் சீன- மியன்மார் உறவுநிலையும். என்பதாக அந்நூலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை ஊடாக சீன அறிஞர்கள் கூற முற்படுவது என்னவென்றால், இந்தியா,அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள், தமக்குள் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தாவிட்டால், ஒத்துழைப்பும் சமாதானமும் நிலவும் இந்துசமுத்திரப் பிராந்தியம், மோதல்களும் பிரச்சினைகளும் நிறைந்த கடற் பிராந்தியமாக மாறும் என்று எச்சரிக்கின்றார்கள்.

அத்தோடு, அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆசியாவில் மீள்சமநிலையை உருவாக்குதல் அல்லது ஆசியாவை உலகச் சமநிலையின் மையச் சுழல் அச்சாக மாற்றுவது என்கிற மூலோபாயத்தை கொண்டிருப்பதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

ஆனால் சீனாவிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியம் குறித்தான எந்தவிதமான மூலோபாயத்திட்டங்களும் அறவே இல்லை என்று குறிப்பிடுவதோடு, எதிர்காலத்தில், அமெரிக்காவோ,ரஷ்யாவோ, இந்தியாவோ, சீனாவோ, அல்லது அவுஸ்திரேலியாவோ தனித்துவமான பிராந்திய சக்தியாக இந்துசமுத்திரத்தில் தம்மை நிலைநிறுத்த முடியாது என்று சீன அரசறிவியலாளர்கள் எதிர்வு கூறுகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது, மேற்குலகின்  ‘முத்து மாலைத் திட்டம்’ (String of Pearls) என்பது ஒரு கற்பனைக் கருத்துருவம் என்று நிறுவுவதில்,மிகுந்த அக்கறையோடு செயல்பட்டுள்ளார்கள் இந்த அறிஞர்கள். இந்துசமுத்திரத்திலுள்ள நாடுகளில், பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கும் சீனாவிற்கு, இராணுவ இலக்கு அறவே கிடையாது என்று அவர்கள் அடம் பிடிக்கிறார்கள்.

ஆனாலும் ஆபிரிக்கா  மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறப்படும் 80 சதவீதமான எரிசக்தி ,கனிம வளங்கள் இந்துசமுத்திரக் கடற் பிராந்தியத்தின் ஊடாக செல்வதும், அதற்கான பாதுகாப்பினை உறுதி செய்வதற்கே, இப் பெருங்கடலை அண்டிய நாடுகளில் துறைமுக அபிவிருத்தி, எரிபொருள் நிரப்பும் மையங்கள், கண்காணிப்பு ராடர் நிலையங்கள் என்பவற்றை சீனா நிறுவுகிறது என்கிற நியாயப்படுத்தல்களை பார்க்கின்றோம்.

இந்துமாகடலைத் தாண்டிச்செல்லும் கப்பல்கள், இறுதியில் மலாக்கா நீரிணையைக் கடந்துதான் தென்சீனக் கடலுக்குள் நுழைய வேண்டும். அமெரிக்காவின் சிறு அளவிலான படைபலம் போதும் மலாக்கா நீரிணையைக் கட்டுப்படுத்தி, சீனாவிற்கான எரிசக்தி வழங்கல் பாதையை இடைமறிப்பதற்கு. அவ்வாறான சிக்கல் எதிர்காலத்தில் உருவாகும் சந்தர்ப்பம் இருப்பதை உணர்ந்து கொள்வதாலேயே, பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஊடாக நீண்ட தரைவழிப்பாதையை சீனா நிர்மாணிக்கின்றது.

மியன்மாரை மையப்படுத்தி, இராஜதந்திர- பொருண்மிய உறவுகளைப் பலப்படுத்தும் அமெரிக்க- இந்திய நகர்வுகள் குறித்து சீனா பதற்றமடைவதோடு, அந்தமான் நிகோபார் தீவுகளில் தனது படைத்துறை சார்ந்த கவனத்தை திருப்பும் இந்தியாவின் போக்கு, மலாக்கா நீரிணைக்கு மாற்றுவழி தேடும் தனது மூலோபாயத்திற்கு அச்சுறுத்தலாக அமையுமென எண்ணுகிறது.
சீன – மியன்மார் உறவு குறித்து எழுதும்போது, இம்மாதம் முடிவடையும் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட எரிவாயு குழாய் நிர்மாணம் பற்றி குறிப்பிடுகின்றார்கள்.

தென்னாசியப் பாதுகாப்புச் சூழல் பற்றியதான இந்தியாவின் பார்வை குறித்து இந்நூல் குறிப்பிடுகையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதனை விளக்குவதோடு, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் மட்டுப்படுத்தப்பட்டவகையில், இரு முனைப் போர்க்களங்களை எதிர்கொள்ளும் தயாரிப்புக்களில் ஈடுபடுகிறது என்று எதிர்வு கூறுகிறது.

இந்திய  உபகண்டத்தில் பாரிய சக்தியாக உருவெடுக்க விரும்பும் இந்தியாவினை, பெஜிங் – இஸ்லாமாபாத் மைய அச்சுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் ஆய்வினை மேற்கொள்ளும்  அதேவேளை, அண்மைக்காலமாக இந்தியா முன்னெடுக்கும் படைத்துறையை நவீனமயமாக்கல், ஆயுதக் கொள்வனவு குறித்து இந்த நீல நூல் விரிவாக பதிவு செய்துள்ளது.

இவைதவிர, கடலாதிக்கத்தில் இந்தியா காட்டும் கரிசனை, கடற்படை கூட்டுப்பயிற்சிகள், ஆழ்கடல்   நடவடிக்கைகள் , இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் அணுவாயுத ஏவுகணைகளைத் தாங்கிய இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்கள் என்பவற்றை நிர்மாணிக்கும் செயற்பாட்டில் இந்திய இறங்கியுள்ள விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா குறித்தான நம்பிக்கையீனங்களை சீன ஆய்வாளர்கள் வெளிப்படுத்தினாலும், தமது பாரம்பரிய ஆதிக்கத்தளத்திற்கு அப்பால் நகர்ந்து செல்ல வேண்டும் என்கிற மூலோபாய திட்டத்தையும் அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

கிழக்கை நோக்கிய இந்தியாவின் கொள்கை குறித்து பல பக்கங்களை ஒதுக்கியுள்ளது இந்நூல்.
மேற்கு பசுபிக் கடற் பிராந்தியத்தில், இந்தியாவின் வகிபாகத்தை, அதன் கடல் பாதுகாப்பில் விளிம்புநிலைப் பங்காளியாக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் சீன ஆய்வாளர்கள், இதேவிதமான சமன்பாடு இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவிற்கும் பொருந்தும் என்று புதிய வியாக்கியானங்களை முன்வைக்க முற்படுகிறார்களா?.

இதில் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மேற்குலகினர்  காட்டும் ‘முத்துமாலை’ என்கிற சீனப்பூச்சாண்டி கற்பிதமானது, அந்நாடுகளுடன் தமக்கு பொருண்மிய உறவே தவிர வேறெந்த உள்நோக்கமும் கிடையாதென தன்னிலை விளக்கமளிக்கும் சீன அரசின் நம்பிக்கை நட்சத்திரங்கள், மேற்கு பசுபிக்கில் இந்தியா நுழைந்தால், இந்துசமுத்திரக் கடலில் தாமும் கால் பதிக்கலாம் என்று கூறுவதன் ஊடாக, பொருண்மிய நலனுக்கு அப்பால் கடலாதிக்க நலன் மறைந்திருக்கிறது என்பதை அம்பலமாக்கியுள்ளார்கள் .

புவிசார் எண்ணெய் அரசியல் என்பதுவே, கடல்சார் நலன் குறித்து சீனாவை பேச வைக்கிறது என்கிற வாதத்தினை இந்தியாவோ, மேற்குலகோ அல்லது மேற்குலகின் ஆசிய ஆதரவுச் சக்திகளோ ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேவேளை, சீனாவின் வான்பாதுகாப்பிற்குத் தேவையான S-300 ரக, தரையிலிருந்து வானிற்கு ஏவும் 15 ஏவுகணைகளை (SAM), ரஷ்யாவின் அல்மாஸ்-அண்டெய் (Almaz-Antey) என்கிற ரஷ்ய நிறுவனம் $2.25 பில்லியன் இற்கு விற்பனை செய்த விவகாரம் இந்திய- அமெரிக்க படைத்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 12 இலக்குகளை ஒரே கணத்தில் தாக்கியழிக்கும் வல்லமை கொண்டது இந்த ரஷ்ய ஏவுகணைகள் என்று மேற்குலக படைத்துறை வல்லுனர்கள் கூறுகின்றார்கள். அமெரிக்காவின் புதிய வரவான ஸ்டெல்த்( Stealth) போர் விமானங்களுக்கு எதிராகவும் இதனைப் பயன்படுத்த முடியும்.

2007-2009 இற்கிடையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமானது, பதினைந்து S-300 ஏவுகணை பற்றாலியன்களையும், நான்கு 83M6E2 ரக கட்டளை மையங்களையும், ரஷ்யாவின் உதவியோடு நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவைதவிர, மேலதிகமாக S-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது சீனா ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்துசமுத்திர பிராந்தியம் குறித்து நீலநூல் ஆய்வு செய்யும் அதேவேளை, தனது கடல் பிராந்தியத்தில் சீனா சும்மா இருக்கவில்லை.
கடந்த 15 ஆம் திகதியளவில், ஜப்பானை அண்மித்த லா பெரெஸ் (La Perouse) நீரிணையில், 16 ரஷ்ய யுத்தக் கப்பல்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது சீனா.

இந்த நிலையில், ஆசியாவில் புதிய அணி சேர்க்கைகள் உருவாக்கும் முரண்நிலைகள், படைவலுச் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துமென நம்பலாம். இந்த நீலநூல் , அந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனத்தரப்பு வியூகங்களை முன்வைப்பது போல் தெரிகிறது.