இனங்களுக்கிடையேயான இரு துருவ வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04 என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

 

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு,

 

இருவேறான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் இரண்டு தேசிய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவருவதையும், அடிமைப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்படும் இனமாக தமிழினமும், அடிமைப்படுத்தி அழித்தொழிக்கும் இனமாக சிங்கள இனமும் முரண்நிலையில் பயணிக்கும் இரு துருவ வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளாகவே 1948 ஆம் ஆண்டிற்கு பின்னரான ஒவ்வொரு பெப்ரவரி-04 உம் கடந்து போகின்றது.

 

எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக எளிமையான அரசியல் அபிலாசைகளை முன்வைக்கும் தமிழினத்திற்கும்,தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை இலங்கைத்தீவு முழுவதும் நிலைநிறுத்த முனையும் சிங்கள இனத்திற்குமான வேறுபாட்டின் ஆழத்தினை வெளிப்படுத்தும் ஒற்றைப் புள்ளியாகவே சிறிலங்காவின் சுதந்திர தினம் அமைந்துள்ளது.

 

தனியரசு நிறுவி, இறையாண்மை கொண்ட தேசிய இனமாக வாழ்ந்து வந்த நாம், 1505 முதல் 1948 வரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்துவந்த நிலைமாறி எண்ணிக்கையில் பெரும்பான்மையான பௌத்த சிங்களர்களிடமும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

 

அந்நிய ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் பறிக்கப்படாத எமது மொழி, இன, மத, பண்பாட்டுக் கட்டமைப்புகள் சிங்கள பேரினவாத பேயாட்சியின் கீழ் அழிக்கப்பட்டு வருவதுடன் இனரீதியான அழித்தொழிப்பும் உச்சம்பெற்று நிற்கின்றது.

 

பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்யப்பட்ட பல லட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டும் உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து போராடிவருகின்றோம்.

 

மாறாக, எம்மை அடிமைப்படுத்தி அழித்தொழிக்கும் உரிமையினை அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பெற்ற இந்நாளை பெரும் மகிழ்வுடன் கொண்டாடிவருகின்றது சிங்களம்.

 

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு இடமில்லை என்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையும், வாக்குறுதியை மீறி போர்க்குற்ற விசாரனையில் வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மறுத்துரைப்பதும் இன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டில் மாறுதல்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்பதனையே உணர்த்துகின்றது.

 

2009 மே-18 இற்கு முன்னர் போர் முகத்தை வெளிப்படையாக காண்பித்த சிங்கள அரசு மறுபுறம் போலித்தனமான சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களையும் அவ்வப்போது காண்பித்துவந்தது.

 

அதன்பின்னர் நல்லிணக்கம், நல்லாட்சி, அபிவிருத்தி என்று வித்தைகாட்டிவரும் சிங்கள அரசு தமிழின அழிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்தே வருகின்றது.

 

ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு இனமாக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடிக்கொண்டிருக்கின்றோம். நல்லாட்சியின் பெயரால் எமது தேசிய அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு கொண்டிருப்பதானது எப்பாடுபட்டேனும் தமிழர்களை அழித்து தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்துவிடத் துடிக்கும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை என்பதனையே காட்டுகின்றது.

 

சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடூரமானது வடிவங்களும் வழிமுறைகளும் மாறியபோதிலும் எமது மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் கொடுமைகள் தீர்ந்தபாடில்லை.
நிரந்தரத் தீர்வுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி முடிவின்றித் தொடரும் இந்த நிலை மாறவேண்டுமாயின் நாம் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை அடிப்படையில் இறைமை கொண்ட தமிழீழ தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும், தெளிவும் உண்டு.

 

எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ் மக்களின் மனங்களில் புயலாக எழுந்த இவ் எண்ணங்களை உள்வாங்கியதான வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக வழிமுறையில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

 

இருந்தும், சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கோரத்தாண்டவத்திற்கு முன் ஜனநாயகம் கேள்விக்குறியான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் படையணிகளை அமைத்து தமிழினத்தின் இருப்புக்காக போராட நிர்பந்திக்கப்பட்ட போது தமிழீழத் தேசியத் தலைவரால் முன்னகர்த்தப்பட்டு வந்த தமிழீழக் கோரிக்கையானது இன்று உலகவெளியில் அறவழிப் போராட்டங்கள் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓரணியில் உறுதியுடன் போராடுவதே தொடரும் சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதுடன் எமது தேசிய அபிலாசைகளை வென்றெடுத்து எமது வரலாற்றுத் தாயகத்தில் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ வழியேற்படுத்தும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.