இன்னொரு ஆயுதப்போராட்டம் வெடித்தால் அதற்கு சம்பந்தரே முழுப்பொறுப்பெடுக்க வேண்டும்

0
678

samp-mahiகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் நேர்காணல் ஒன்று நேற்றைய இந்து பதிப்பில் வெளிவந்திருக்கிறது. வரிக்கு வரி அபத்தம் மட்டுமல்ல பல ஆபத்துக்களும் நிறைந்த நேர்காணல் அது. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. சம்பந்தர் எதிர்ப்பு அரசியல் குறித்தும் தமிழர்கள் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும்.

இந்த நேர்காணலுக்கு எதிர்வினையாற்றுவதென்றால் இந்த ஜென்மம் முழுக்க எழுதினாலும் எழுதித் தீராது.

நாங்களும் மே 18 இற்கு பிறகு சம்பந்தர் குறித்து எழுதி எழுதிக் களைத்து விட்டோம். அவரும் திருந்துற மாதிரி இல்லை. ஒப்படைவு, சரணாகதி, அடிபணிவு, இணக்க அரசியல் செய்து மிச்சமுள்ள தமிழர்களையும் புதைத்துவிட்டுத்தான் ஓய்வேன் என்று அடம் பிடிப்பதுபோல் தெரிகிறது.

இந்து பத்திரிகை குறித்து தனியாக பொழிப்புரை எழுதத்தேவையில்லை. இந்திய அதிகாரவர்க்கத்தின் – இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனவோட்டத்தை இந்துவை வாசித்து நாடிபிடித்து அறிந்து கொள்ளலாம்.

சும்மாவே சம்பந்தர் காட்டு காட்டென்று காட்டுவார். ‘இந்து’ வேறு வளமாக கேள்விகளை எடுத்துக் கொடுக்க சம்பந்தர் வெழுத்து வாங்கியிருக்கிறார்.

அதன் சாராம்சம் இதுதான்.

01. புலிகளும் பிரபாகரனும் விட்ட தவறுகள்தான் இந்த அழிவுக்கு காரணம்.

02. இனி மக்கள் போராடக்கூடாது.

03. சிங்களம் எங்களுக்கு ஒன்றும் தரவில்லை அதற்காக நாம் கோபப்படக்கூடாது. பேசி ஜனநாயக வழியில் தீர்வை பெற வேண்டும். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடந்தாலும் அமைதி பேண வேணும்.

04. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக இந்தியாவும் மற்றும் 90 களில் சந்திரிகா எல்லாம் தங்க தாம்பாளத்தில தீர்வு தர முன்வந்தவை. அதை நாம் குழப்பி விட்டோம்.

05. இந்தியா எம்மை காக்கும். அமெரிக்கா எம்மை காக்கும். ஐநா சபை எம்மை காக்கும்.

இவையெல்லாம் கூட பரவாயில்லை மிக நுட்பமாக வடக்குத்தான் தமிழர் தாயகம் என்பது போலவும் வடக்கு மாகாணசபையை கைப்பற்றியதனூடாக ஏதோ தாம் சாதித்து விட்டதாக இந்துவும் சம்பந்தரும் ரீல் விட்டு கிழக்கை (தென் தமிழீழத்தை) அப்படியே துண்டாடிவிட்டார்கள்.

மேலே உள்ள ஏனைய கருத்துக்கள் குறித்து நாம் இங்கு பேச விரும்பவில்லை. மக்கள் போராட்டத்தை தடுத்து, அமெரிக்காவும் இந்தியாவும் கிழிக்கும் என்று பேசும் சம்பந்தருக்கு நாம் பதில் எழுதுவதை பார்த்து மற்றவர்கள்தான் எம்மை பார்த்து சிரிப்பார்கள். அந்த இழி நிலை எமக்கு வேண்டாம்.

சம்பந்தருக்கு காலம் சரியான படிப்பினையை கொடுக்கும். அதை மக்கள் பார்த்து கொள்வார்கள்.

நாம் பிரிக்கப்பட் கிழக்கு மகாணசபை தொடர்பாகவே பேச விரும்புகிறோம்.

சம்பந்தரின் பதில்களிலும் இந்துவின் கேள்விகளிலும் நுட்பமாக கிழக்கு மகாணம் தமிழர் பகுதியாக சுட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன் வடக்குகிழக்கு இணைந்த தாயக கோட்பாடு மறைக்கப்படுவதுடன் கிழக்கு மகாணசபை தோல்வியும் அங்கு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் நுட்பமாக மறைக்கப்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய ஆபத்தாக நாம் பார்க்கிறோம்..

இது இந்தியாவினதும் சம்பந்தரினதும் அடுத்த கட்ட நகர்வாகவே நாம் கருத வேண்டியுள்ளது. வடக்கு மகாணசபைக்கு மட்டும் ஒரு சிறியளவிலான அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்து அதை தமிழர்களுக்கான தீர்வாக பறைசாற்ற எடுக்கப்படும் முஸ்தீபுகள் என்றே கருத வேண்டியுள்ளது.

சம்பந்தரின் இந்திய விசுவாசம் உலகறிந்தது. எனவே இது அதற்கான அறிகுறிகள்தான்.

பிரிக்கப்பட்ட மகாண சபை தேர்தலில் தமிழர் தரப்பு பங்களிப்பதனூடாக கிழக்கு துண்டாடப்படும் அபாயம் இருக்கிறது என்பது நாம் முன்பே எச்சரித்ததுதான். திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் படிப்படியாக தமிழர்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டு முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் கணிசமாக கிழக்கு மகாணத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அத்தோடு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்து – புலம் பெயர்ந்ததோடு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் விட்டார்கள். கூடவே துரோகிகளின் கூடாரமாக கிழக்கு மாறியுள்ளதால் தேர்தலில் தமிழ் மக்கள் முழுமையாக கூட்டமைப்புக்கு வாக்களித்தாலும் ஆட்சியைக் கைப்பற்றுவதென்பது சாத்தியமற்றதென்பதை விளக்கினோம்.

இவையெல்லாவற்றையும் விட பிரிக்கப்பட்ட மகாண சபை தேர்தல் என்பது எமது தாயக கோட்பாட்டிற்கு முரணானது. எல்லாம் தெரிந்திருந்தும் இந்திய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தேர்தலில் குதித்து தோல்வியையும் சந்தித்து கிழக்கை முழுமையாக எதிரிகளிடம் ஒப்படைத்தாகிவிட்டது.

மிக நுட்பமாக சிங்களமும் மேற்குலகமும் இந்தியாவும் சேர்ந்து தமிழர்களை வடக்கு மகாணசபைக்குள் முடக்கி விட்டதை இங்கு யாரும் அறிந்ததாக தெரியவில்லை. தமிழர் விடுதலை, கூட்டமைப்பு – வடக்கு மகாணசபை -விக்கினேஸ்வரன் என்ற வட்டத்திற்குள் வந்து முடிந்து – முடங்கி நீண்டநாட்களாகிவிட்டது.

கருணா எஎன்கிற முரளிதரன் 2004 இல் தொடக்கி வைத்த பிளவை இன்று சம்பந்தர் நிரந்தரமாக முடித்து வைத்திருக்கிறார்.

வடக்கு கிழக்கை இணைக்கும் நிலங்கள் பறிபோகின்றன, கிழக்கில் நிர்வாக அரச எந்திரங்களில் தமிழர்கள் தி;ட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒரு புலம் பெயர் தேசத்தில் தமிழர்கள் அகதிகளாக வாழ்வது போல் கிழக்கில் இன்று தமிழர்கள் ”அமைதி’ ஆக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பந்தர் இந்து நேர்காணலில் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் விட்ட கதை இதுதான்.

இந்த இடத்தில் தமிழ் மக்களின் சார்பாக நாம் சம்பந்தரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உடனடியாக வடக்கை ( வடதமிழீழத்தை) விட்டு வெளியேறி கூட்டமைப்பின் அரசியல் நிர்வாக செயற்பாடுகள் அனைத்தும் கிழக்கை (தென் தமிழீழத்தை) மையம்கொள்ள வேண்டும். கிழக்கின் எல்லை கிராமங்கள் அனைத்தும் மீட்கப்பட வேண்டும். 30 வருடங்களுக்கு முந்திய காலப்பகுதிக்கு நிகராக தமிழர்களின் குடிசனப்பரம்பல் பேணப்பட வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்பவை செறிவாகப் பேணப்பட்டு தமிழ் அடையாளம் கிழக்கில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

முடிந்தால் சம்பந்தர் இதை இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் கேட்டு பெற்றுத்தரட்டும். அதற்கு பிறகு தமிழர்கள் போராடக்கூடாது என்று வகுப்பெடுக்கலாம்.

கூட்டமைப்பால் கைவிடப்பட்ட கிழக்கு மகாணத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கே வழி வகுக்கும். அதற்கு காரணம் யாருமல்ல. அப்போது அதற்கான முழுப்பொறுப்பையும் சம்பந்தரே எடுக்க வேண்டும்.

ஈழம்ஈநியூஸ்.