சிங்கள இனஅழிப்பு அரசு ஐநா விசாரணைக்கு எந்த வகையிலும் உடன்பட மறுத்தது மட்டுமல்ல இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க தனக்கு சார்பானவர்களை கொண்டு நியமித்திருக்கும் ஒரு விசாரணைக்குழுவிற்கு பான்கிமூன் இன்று ஒரு அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்.

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

un-ban
ஐநா வின் அப்பட்டமான அயோக்கியத்தனம் இது.

சுதந்திரமான சுயாதீன அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு சிங்களத்தை அடிபணிய வைக்கும் அழுத்தங்களை பிரயோகிப்பதை விடுத்து இனஅழிப்பு அரசின் கபடத்தனங்களை அங்கீகரிக்கும் ஐநா வின் கையாலாகாத்தனம் இது.

ஐநா விசாரணைக்கு உடனபட மறுக்கும் சிங்கள ஜனாதிபதி ஐநாவில் உரையாற்றுகிறார். அதுகூடப்பரவாயில்லை. போர்க்குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட சிங்கள படையினர் ஐநா அமைதிகாக்கும் படையில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். என்ன கொடுமை இது?

இதற்குப் பிறகும் எப்படி தமிழ் மக்கள் ஐநாவை நம்ப முடியும்?

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில்தான் 6 வருடங்களுக்கு முன்பு இனஅழிப்பு அரசு வன்னியிலிருந்து அனைத்து மனித நேய பணியாளர்களையும் வெளியேற்றியது.

மிகப் பெரிய இனஅழிப்பும் மனித பேரவலமும் நிகழ்ப் போகிறதென்று நாம் கத்தி கூச்சல் போட்டும் இனஅழிப்பு அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐநா மவுனமாக அனுமதி வழங்கியதையும் நாம் மறக்கவில்லை.

தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளி ஐநா தான் என்பதற்கு இது ஒன்றே போதுமான சான்று.

நடந்தவற்றை மறந்து தமிழ் மக்கள் இனியாவது தமக்கு நீதி கிடைக்கும் என்று ஐநாவின் பின் இழுபட எத்தனிக்கும் போதும் ஐநா தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் சதிவலைகளையே பின்னி இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கிறது.

ஐநாவின் இந்த அயோக்கியத்தனத்தை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கண்டிப்பதுடன் ஐநாவிற்கு எதிரான போராட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும்.

சட்டம்,ஜனநாயகம் பேசி எம்மை எல்லோரும் கழுத்தறுத்தது போதும்.

மக்கள் போராட்டம்தான் அனைத்திற்குமான ஒற்றைத் தீர்வு.

திலீபனின் நினைவுநாட்களை தமிழர் தேசம் கடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் திலீபனின் தியாகம் எமக்கு போதித்ததை நாம் மறந்துவிடக்கூடாது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்று அந்த வரலாற்று நாயகன் உச்சரித்தபடியே உயிர் பிரிந்தான்.

தமிழ்ப்பரப்பிலுள்ள படித்த கனவான்களும், அரசியல்வாதிகளும் எந்த ஆணியும் புடுங்கப் போவதில்லை.

எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களினூடாகத்தான் ஐநாவை மட்டுமல்ல அனைத்துலக ஒழுங்கைக்கூட தமிழர் தேசத்திற்குச் சார்பாகத் திருப்ப முடியும்.

அரசியல்வாதிகளையும் படித்த கனவான்களையும் நம்பிக்கொண்டிருந்தால் இப்படித்தான் ஐநா கூட சத்தமில்லாமல் இனஅழிப்புக்கு வெள்ளையடித்துக்கொண்டிருக்கும்.

எனவே போராடுவோம்.

ஈழம்ஈநியூஸ்.