இன அழிப்பு அரசின் அடுத்த சதி!

0
352

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகள் (Counseling) வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று அறிவித்திருக்கிறது.

மே18 இற்கு பிறகு இன அழிப்பு அரசு “புனர்வாழ்வு முகாம்கள்” என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய “உளவளத்துணை ஆலோசனைகள்” குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.

missing-tamil
அது உளவளத்துணை ஆலோசனை என்ற பெயரில் நடத்தப்பட்ட மிக மோசமான வன்முறையும் அப்பட்டமான மூளைச்சலவையுமாகும் ( Brain wash).

இது குறித்த விரிவான ஆதாரங்களுடன் நண்பர்கள் இணைந்து பல விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். அவை வரும் காலத்தில் வெளிப்படுத்தப்படும்.

தற்போதைய இந்த அறிவிப்பு இனஅழிப்பு நோக்கங்களை கொண்ட நுட்பமான சதியின் பின்புலத்தை கொண்டது.

எமது உறுவுகளை உளவளத்துணை ஆலோசனை என்ற பெயரில் மூளைச்சலவை செய்து அவர்கள் தொடர்ந்து தமது உறவுகளை தேடுவதை நிறுத்தி மரணசான்றிதழை பெற்றுக்கொள்ளவோ அல்லது நட்டஈட்டை பெற்றுக்கொள்ளவோ உந்தும் கபட முயற்சியாகும்.

இதனூடாக நடந்த இன அழிபபை மறைப்பதுடன் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நுட்பமாக தொடரும் உத்தியுமாகும்.

பல வருடங்களாகியும் தமது உறவுகளை குறிப்பாக இளம் பெண்கள் தமது கணவன்மாரை தேடிக்கொண்டிருக்க முடியாது. உறுதியான ஆதாரங்களுடன் அவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் அதை உறுதிப்படுத்துமாறே பல பெண்கள் கேட்கிறார்கள். ஆனால் இனஅழிப்பு நோக்கங்களுடன் அந்த பட்டியலை வெளியிட மறுத்து வருகிறது சிங்களம்.

பெண்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த திரைமறைவுப்போர்தான் தொடரும் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பின் மையமாக இருக்கிறது.
பிறகு எப்படி பட்டியலை வெளியிடவோ, கொல்லப்பட்டவர்களை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தவோ செய்வார்கள்?

உதாரணத்திற்கு ஒரு பெண் கடந்த வருடம் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை உணர்ந்து இனியும் பொறுக்க முடியாது என்ற அடிப்படையில் தனது கணவர் கொல்லப்பட்டதை உறுதி செய்து அவரது மரணசான்றிதழை தருமாறு கேட்டார்.

அவர்கள் இதற்கென்றே காத்திருந்தது போல் அதை அனுப்பியும் வைத்தார்கள். 2009 மே 17 தனது கண்முன்னால் கைது செய்து அழைத்து சென்ற அவரது கணவரை 2009 எப்ரல் 24 ம் திகதி செல்தாக்குதலில் (அதுவும் யாருடைய தாக்குதலில் என்று தெளிவில்லை . புலிகளில் குற்றம் சுமத்தும் பாணியில் அது அமைந்திருக்கிறது) கொல்லப்பட்டதாக மரண சான்றிதழை கொடுத்தால் எப்படி ஏற்க முடியும்?

தனது கண்முன்னால் கைதுசென்று அழைத்து சென்றவரை ” செல்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதுவும் ஒரு மாதத்திற்கு முன்பே கொல்லப்பட்டதாக” கதை விடுவதை எப்படி ஏற்க முடியும்?

இதை பார்த்துவிட்டு எப்படி ஒருவர் தெளிவான உளவியலுடன் இருக்க முடியும்?

இப்போது மறுமணமும் செய்யமுடியாமல் குழந்தைகளையும் வைத்து கொண்டு பெரும் மனஉளைச்சலில் இருக்கிறார் அந்த பெண்.

இது அவரது கதை அல்ல.. ஆயிரக்கணக்கான எமது பெண்களின் ஒட்டுமொத்தக் கதை இது.

இது சமூகத்தில் எத்தகைய உளவியல், பண்பாட்டு, பொருண்மிய ஏற்றத்தாழ்வுகளை _ சிக்கல்களை உருவாக்கும்.

இதன் விளைவாக எமது இனப்பெண்களில் தற்போது பல பாலியல் முரண்பாடுகளையும் உளவியல் சிக்கல்களையும் நாம் அவதானித்து பதிவு செய்திருக்கிறோம்.

இதைத்தான் நாம் கட்டமைக்கப்ட்ட இனஅழிப்பின் அதியுச்ச வடிவமாக அடையாளம் காண்கிறோம்.

மே 18 இற்கு முன்பு நடந்த கொலைகளை புலிகள் மீது சுமத்தித் தப்பித்தாலும் புலிகள் ஆயுதங்களை மவுனிப்பதாகக் குறிப்பிட்ட மே 16 இற்கு பிறகான படுகொலைகளை யார் மீது சுமத்துவது?

146679 பேரின் மரணத்தை எப்படி ஒட்டுமொத்தமாக ஏற்க முடியும்? அது அப்பட்டமான இன அழிப்பு என்பதை ஏற்பதாகாதா?

அதுதான் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் தொடரும் இனஅழிப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவும் இப்படியெல்லாம் நாடகமாடுகிறது சிங்களம்.

அதன்ஒரு பகுதிதான் தற்போது காணாமல்போனோரின் உறவுகளுக்கு உளவளத்துணை ஆலோசனை என்ற புதிய நாடகமாகும்..

எமது உறவுகள் எதிர்பார்ப்பது நீதி. அத்துடன் ஆதாரங்களுடன் “காணாமல் போனோரிற்கு என்ன நடந்தது?” என்ற உண்மை. இதைத்தரத் தயாரில்லாத இனஅழிப்பு அரசு ஒரு இனத்தை மனநோயாளியாக்கி விட்டு அதற்கு மருந்திடுகிறேன் என்ற போர்வையில் மீண்டும் அவர்கள் மீது உளவளத்துணை ஆலோசனை என்ற பெயரில் வன்முறையை ஏவிவிடுகிறது.

எனவே தமிழ் அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் இதைக் கண்டிப்பதுடன் எமது மக்களுக்கான நீதியை பெற ஒரு அனைத்துலகப் பொறிமுறையை விரைந்து உருவாக்க வேண்டும். அதுதான் எமது மக்களுக்கான நிரந்தர தீர்வாகும்.

-ஈழம் ஈ நியூஸ் இற்காக பரணி கிருஸ்ணரஜனி