இன அழிப்பை தொடரவிட்டு விட்டு நாம் போராடுவதாகக் கூறுவதன் அர்த்தம்தான் என்ன?

0
674

land-grabவடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்புத்தான் தமிழர்களின் தாயகம்.

முன்பு நீதிமன்றத் தீர்ப்புக்களினூடாக இதை பிரித்த போதும் நாம் அசரவில்லை.

பின்பு பிரிக்கப்பட்ட மாகாண சபைகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டு கூட்டமைப்பு பங்கெடுத்த போதும் நாம் அசரவில்லை.

ஏனென்றால் அந்த நிலங்களில் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். சங்கிலி பிணைப்பு போல் இரு நிலப்பகுதிகளையும் இணைத்தபடி மக்களின் இடமும் இருப்பும் பொருண்மிய பண்பாட்டு வாழ்வாதார அடிப்டையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

எனவே எந்த அரசியல் யாப்பும் நீதிமன்றத் தீர்ப்பும் தேர்தல்களும் தமிழர் தாயகத்தை பிரிக்க முடியாததாக்கியிருந்தன என்பதே உண்மை.

எனவே இதை உணர்ந்து தற்போது இன அழிப்பு அரசு மிக நுட்பமான முறையில் தமிழீழ எல்லை கிராமங்களை குறிப்பாக வடக்கு கிழக்கு இணையும் நிலப்பரப்பை துண்டாடும் நோக்கில் நிலங்களையும் காணிகளையும் கையகப்படுத்த தொடங்கியிருக்கிறது. இன அழிப்பில் சிக்கி நலிவுற்ற மக்களின் அவலமும் அதன்விளைவான வறுமையும் நிலங்களை எதிரிகளிடம் தாரை வார்க்கும் நிலைக்கு கொண்டு தள்ளியுள்ளது.

இது மிக ஆபத்தானது. இனி படிப்படியாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் குறித்து பேசுவதற்கான தர்க்க ரீதியான நியாயங்கள் எம்மிடம் இருந்து தூர விலகும் ஆபத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த ஆபத்தை புலம் தமிழகம் மற்றும் தாயக தமிழ் அரசியல்வாதிகளிடமும் அமைப்புக்களிடமும் பல அரசியற்செயற்பாட்டாளர்களிடமும் விளக்கி அதற்கான தீர்வை முன்வைத்து பேசி எந்த பதில் நடவடிக்கையையும் காண முடியவில்லை.

இந்த நிலங்களை இழந்து கண்ணுக்கு முன்பே இப்படியான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடரவிட்டு விட்டு நாம் அரசியல் செய்வதாக போராடுவதாகக் கூறுவதன் அர்த்தம்தான் என்ன?

புலத்தில் மாநாடுகள் நடத்துவதும் மேற்குலக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவர்கள் பின்னால் போர்க்குற்ற விசாரணைகள நோக்கி ஓடுவதும் நமது வேலையல்ல.

எமது போராட்டத்தின் அடிப்படையும் குறியீடும் “நிலம்”. அதை எதிரிகள் ஆக்கிரமித்திருந்தாலும் அந்த நிலத்தை பறி போக விடாமல் தடுத்து அந்த மண்ணில் எமது மக்களின் பொருண்மிய பண்பாட்டு வாழ்வாதாரங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.

kilinochi
இதை ஒரு தளத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவதுடன் சமகாலத்தில் மறுவளமாக நடந்த நடக்கும் இன அழிப்பிற்கான ஒற்றைத்தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்குமாறு அனைத்துலக மட்டத்தில் போராட்டங்களை விரிவு படுத்த வேண்டும்.

இதை விடுத்த ஏனைய முயற்சிகள் அனைத்தும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ காவுபவை என்பது மட்டுமல்ல அவை எதிரிகளின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு துணைபோகும் தந்திரமாகவுமே இருக்க முடியும்.

(தாயக மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்.

தயவு செய்து தாயக நிலங்களை காணிகளை விற்பதும் ஈடு வைப்பதும் குத்தகைக்கு விடுவதும் தமிழர்களுக்குள்ளேயே இருக்கட்டும். தயவு செய்து அதை வேற்று இனத்தவருடனோ அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனோ செய்யாதீர்கள்.

குறிப்பாக தமிழீழ எல்லையோர அதிலும் குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பகுதிகளை அண்டிய நிலங்களை எந்த காரணம் கெண்டும் விற்கவோ ஈடுவைக்கவோ குத்தகைக்கு விடவோ முயற்சிக்காதீர்கள்.)

ஈழம்ஈநியூஸ்.